பொதுப்பணி செய்திடக் கிடைப்பது புண்ணியம்
பொதுப்பணி அறப்பணியாம்
இதயக் களிப்புடன் அப்பணி செய்பவா்
இறைநேசச் செல்வராவார்
கதியற் றிருப்பவா் கஷ்டப்படுபவா்
கலங்கிடும் வறியவா்க்கு
உதவிகள் செய்பவா் உண்மையில் மேலவா்
உலகினில் உத்தமா்தான்.
……………………………………………..
புத்துப் பொலிவுறும் காத்தான் குடியதில்
பொதுப்பணி புரிபவா்க்குள்
ஆற்றல் மிகுந்தவா் அப்துல் ஜவாது ஸோ்
அவா்களை வாழ்த்துகின்றோம்!
போற்றும் முறையிலே கல்விக் களத்திலே
புதுமைகள் செய்தவா்காண்
ஆற்றல் மிக்கவா் தம்மைத் துாக்கிடும்
அற்புதச் சேவையாளர்.
…………………………………………….
அஷ்ஷஹீது அஹ்மது லெப்பை ஹாஜியார்
அவர்களின் உடன் பிறப்பாய்
அஷ்ஷஹீத் தொடங்கிய அத்தனை பணிகளும்
தொடர்ந்திட தோள்கொடுத்தார்
எச்சம யத்திலும் இளைஞராய் இயங்கியே
எல்லார்க்கும் தொண்டுசெய்யும்
மெச்சிடம் ஜவாத்ஸேரின் மீத்திறன் தன்னையே
மேன்மையாய் வாழ்த்துகின்றோம்.
……………………………………………………….
சம்மே ளனம்எனும் வண்டியை செலுத்திடும்
சாரதி அவரல்லவா..?
எம்மா பெரும்பெரும் பிரச்சினையாயினும்
இயல்பான திறமையாலே
செம்மை யாகவே தீர்வைக் கண்டிடும்
செயல்வீரா் அவரல்லவா..?
அம்மா மனிதரின் ஆற்றலே அற்புதம்!
அவரைநாம் வாழ்த்துகின்றோம்!
………………………………………………….
பிணியுற்ற போதிலும் பணிவிட்டுப் போகாத
பணியாளர் அவரல்லவா ?
துணிவோடு காரியம் பார்க்கின்ற தன்மையும்
துடிப்புள்ள ஆளுமையும்
அனைவரும் வசப்படும் பான்மையும் அவருக்கு
அமைந்திட்ட காரணத்தால்
இனையற்ற தலைவராய் இருக்கிறார், அன்னாரை
ஏற்றமாய் வாழ்த்துகின்றோம்!
………………………………………………….
வழிகாட்டல் நிலையத்தின் வளமான பணிக்கெலாம்
வலுவுட்டும் அறிஞரன்னார்
வழிகாட்டி எங்களை வழிநடத் தாட்டியே
வளஞ்சொ்க்கும் நண்பரன்னார்
வழிகாட்டல் நிலையத்தின் விழாவினில் அன்னாரை
வாழ்த்தியே போற்றுகின்றோம்!
வளமுடன் நலமுடன் வாழ்ந்திட இறையருல்
வாய்ந்திட வாழ்த்துகின்றோம்!
கவிமணி.
Leave a comment