(தலைமை நீதிபதி தனது கனவருடன்)
இலங்கையின் தலைமை நீதிபதி மீது குற்றஞ்சாட்டி, அவரை பதவியில் இருந்து அகற்ற வழி செய்யும் தீர்மானம் ஒன்றை ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதிக்கு எதிராக எடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கான காரணங்கள் என்ன என்பதை அரசு விளக்கவில்லை.
அதேநேரம் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவை பதவியில் இருந்து அகற்ற வழிசெய்யும் இந்த்த் தீர்மானத்தை ஆளும் கூட்டணியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் நாடாளுமன்ற சபாநாயகரிடம் கொடுத்துள்ளனர். இதில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
தலைமை நீதிபதியின் நடத்தையும் செயற்பாடும் நாட்டு மக்களின் இறைமையை பாதிப்பதாக அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர் கேஹலியா ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தீர்மானத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து விபரங்களை தற்போதே வெளியிடுவது சரியாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்கட்சியைச் சேர்ந்த இரான் விக்ரமதுங்க இது குறித்துக் கருத்துக் கூறுகையில், அரசியல் அமைப்பு ரீதியான சர்வாதிகாரத்தை நோக்கி இலங்கை செல்வதையே இந்த முடிவு காட்டுவதாகக் கூறியுள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒரு நிதியை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான ஒரு சர்ச்சைக்குரிய சட்ட மூலத்தை தாமதப்படுத்திய ஷிரானி பண்டாரநாயக்கவின் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு அரசாங்கத்தை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியிருந்தது.
பெருமளவும் நிதியை இலங்கை ஜனாதிபதின் சகோதரரான அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கடுப்பாட்டுக்கு இந்த சட்ட மூலம் கொண்டுவரும் என்று கூறப்பட்டது.
இந்த சட்டத்தை தாமதப்படுத்தக் கூடிய ஷிராணி பண்டாரநாயக்காவின் தீர்ப்புக்கு எதிரான ஒரு வீதி ஆர்ப்பாட்டத்துக்கும் பசில் ராஜபக்ஷ தலைமை தாங்கியிருந்தார்.
சில வாரங்களின் பின்னர், அரசாங்கம் நீதித்துறையில் தலையீடு செய்வதாக கருத்துக் கூறிய மற்றுமொரு மூத்த நீதிபதி கைத்துப்பாக்கி முனையில் மிரட்டப்படார்.
அத்துடன் சில நீதிபதிகளின் உயிரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
நீதிபதி அச்சுறுத்தப்பட்டது தொடர்பான வழக்கு இன்னமும் தீர்க்கப்படாமலே இருக்கிறது. சம்பந்தப்பட்ட நீதிபதியும் தலைமறைவாகியுள்ளார். பயம் காரணமாக அது இருக்கலாம்.
ஜனாதிபதியின் அதிகரித்துவரும் அதிகாரங்கள், சட்டத்தின் ஆட்சியை குறைத்து மதிப்பிடுவதாக பல சர்வதேச உரிமைக் குழுக்கள் விமர்சித்துள்ளன. ஆனால் அரசாங்கம் தனது நடவடிக்கைகள் நியாயமானவையே என்று வாதிடுகிறது.
-BBC/Tamil
Leave a comment