காத்தான்குடியின் பிரதான வீதிக்கு அடுத்ததாக முக்கியமாகக் கருதப்படும் கடற்கரை வீதி, காபட் வீதியாக மாற்றப்படுவதற்கான அபிவிருத்திப்பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன.
ஒரு மாதம் கடந்த நிலையிலும் இப்பணிகள் இன்னும் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருவது கவலைக்குரிய விடயமாகும்.
நேற்றிலிருந்து பெய்துவரும் சிறுமழைக்கு இவ்வீதியின் குழிகள் மழை நீர் நிறைந்து வாகனப் போக்குவரத்துக்கும் பாதசாரிகளுக்கும் பெரிதும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றது. வடிகாண்களில் மழைநீரும் குப்பைகளும் நிறைந்துள்ளதால் டெங்கு அபாயங்களும் இப்பகுதி மக்களுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.
வருவது அடைமழை பொழியும் மாரிகாலம் என்பதால், இவ்வீதி அபிவிருத்திப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாது போனால் இவ்வீதியின் அருகாமையில் வசிக்கும் மக்களும் இவ்வீதியால் பயணிக்கும் மக்களும் பாரிய ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் என இப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, தற்போதைய மற்றும் எதிர்கால காலநிலையை கருத்திற்கொண்டு உரிய அதிகாரிகளும் சம்பந்தப்பட்டவர்களும் இவ்வீதி அபிவிருத்தி விடயத்தில் பொறுப்புடனும் விரைவுடனும் இத்திட்டத்தினை மேற்கொள்ளுமாறும் கேட்கப்படுகின்றனர்.

Leave a comment