நாடு முழுவதும் இடி, மின்னலுடன் பெய்து வரும் அடைமழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென்பதனால் வெள்ள அபாயம், கடும் மின்னல் தாக்கம் மற்றும் மண் சரிவு ஆகிய அனர்த்தங்கள் குறித்து பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நேற்றும் நாட்டின் பல பகுதிகளில் நீர் தேங்கி நின்றமை மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் சிறியளவிலான மண்சரிவு காரணமாக அனர்த்தங்கள் இடம்பெற்றமை பதிவாகியுள்ளதென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
இடைப்பருவப்பெயர்ச்சிக் காலநிலை காரணமாக தற்பொழுது நாடு முழுவதும் மாலை மற்றும் இரவு வேளைகளில் இடி முழக்கத்துடன் மழை பெய்து வருகிறது. கடந்த 48 மணித்தியாலங்களில் வெல்லவாய பிரதேசத்திலேயே ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக 199 மில்லி மீற்றர் மழை பெய் துள்ளது. அதனையடுத்து செவனகலையில் 146 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. நீரேந்துப் பிரதேசங்களிலும் ஓரளவு மழை பெய்திருப்பதாக வளிமண்டலவியல் நிலையம் தெரிவித்தது.
நாட்டின் கடற்பரப்பிலும் அனைத்து நிலைகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். மழையின் போது கடுங் காற்றும் வீசமென்பதனால் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட் டுக் கொள்ளப்படுகின்றனர்.
நேற்றும் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிக மழை பெய்தது. அம்பாறை, வெல்ல வாய ஆகிய பிரதேசங்களில் நேற்று வெள்ளம் ஏற்பட்டிருந்ததுடன், இதனால் வெல்ல வாயவில் 20 வீடுகளும் அம்பாறையில் 100 வீடுகளும் சிறியளவில் சேதங்களுக் குள்ளாகியுள்ளன.
இதேவேளை நோர்வூட் பிரதேசத்தில் வெள்ளத்தினால் 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின் றது. கொஸ்லந்தையில் பெய்த அடைமழை மற்றும் நீர் தேக்கம் காரணமாக வாகனப் போக்குவரத்துக்கு மாற்று வழிகளை பொலிஸார் உபயோகிக்குமாறு கூறி யிருந்தனர்.
-தினகரன்
Leave a comment