சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டு வரும் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை திட்டத்தில் புதிதாக ஐந்து முக்கிய ஆலோசனைகளை உள்ளடக்க சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.
அன்பு, சமாதானம், நேர்மை, நற்செயல் மற்றும் அஹிம்சை ஆகிய ஐந்து முக்கிய ஆலோசனைகளே இதில் உள்ளடக்கப்படவுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தவும், உலக சிறுவர் தினத்தை முன்னிட்டும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது வெகுவிரைவில் இந்த கொள்கையை மக்களுக்கு வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதிதாக உள்ளடக்கப்படவுள்ள அன்பு, சமாதானம், நேர்மை, நற்செயல் மற்றும் அகிம்சை ஆகிய ஐந்து விடயங்களையும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகி பாதிக்கப்பட்ட சிறார்கள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகாத அனைத்து சிறுவர்களின் மனதில் உள்வாங்கச் செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் அதே விடயத்தில் ஈடுபடுபவர்களாக மாறுவதாக உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
சிறு பராயத்திலோ அல்லது இளமையிலோ உடல், உள ரீதியாகவோ அல்லது வேறு எந்த விதத்திலோ துஷ்பிரயோகத்திற்கு இலக்காகின்றவர்கள் சந்தர்ப்பம் ஒன்று கிடைக்கும் பட்சத்தில் அதே விடயத்தை மீண்டும் செய்வதற்கு தூண்டப்படுகின்றார்கள்.
எனவே, இதனை வேகமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
புதிய ஆலோசனைகளை அமுல்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தவும், பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெளிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment