அரசாங்க தாதிமார் சேவைக்கும், துணை மருந்தாளர் சேவைக்கும் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படுபவர்கள் தொடராக தாம் வாழும் பிரதேசத்தில் பத்து வருடங்கள் சேவையாற்றுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கடமையாற்றுவதைக் கட்டாயப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதற்கேற்ப, அரசாங்க சுகாதார சேவைக்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும் தாதியரும், துணை மருந்தாளர்களும் பயிற்சியை முடித்தது முதல் பத்து வருடங்களுக்கு தாம் வாழும் பிரதேசத்திலேயே கடமையாற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இவ்விரு பதவிகளுக்கும் சேர்த்துக் கொள்ளப்படுபவர்கள் பயிற்சியைப் பூர்த்தி செய்து நியமனம் பெற்ற ஒரு சில மாதங்களுக்குள்ளேயே இடமாற்றம் கோருகின்றனர். ஆனால், தற்போதுள்ள ஒழுங்கு விதிகளின்படி இப்பதவிகளுக்கு சேர்க்கப்படுபவர்கள் ஒரே இடத்தில் கடமையாற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இவர்களுக்கு இடமாற்றம் கிடைக்காவிட்டால் பதவியை விட்டு செல்லுகிறார்கள், இல்லாவிடில் கடமைக்கு சரிவர சமுகமளிக்கின்றார்கள் இல்லை. இந்நிலைமையை நிவர்த்தி செய்யவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment