அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி தமிழ்மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியாக இரண்டாமிடம் பெற்றவர் செல்வன் தமிழ்வண்ணன் துவாரகேஸ். அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 192 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.மட்டு.புனித மிக்கேல் மாணவனான இவர் காரைதீவைச் சேர்ந்தவராவார்.
பெற்றோர் இருவரும் வைத்தியர்கள். அதுவும் தந்தையார் டாக்டர் தமிழ்வண்ணன் ஒரு தோல் வைத்திய நிபுணர்ஆவார்..தாயார் பகீரதி (சூட்டி) டாக்டர்.
இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேவையாற்றுகின்றவர்களாவர். அவர்களுக்கு 03 பிள்ளைகள். மூத்தவன் துவாரகேஸ் ஏனைய இருவரும் தங்கைமார் லினோபா மற்றும் விதுர்சா.
கூடவே அம்மம்மா திருமதி .மலர் திருச்செந்தில்வேல். இவர் ஒர் ஓய்வுநிலை விஞ்ஞான ஆசிரியை. இவரின் கற்பித்தலிலேதான் தான் சாதனை படைத்ததாகக் கூறுகிறார் சாதனையாளர் துவாரகேஸ்.
காரைதீவில் அவரது வீட்டில் சந்தித்தபோது சாதனைவீரன் துவாரகேஸ் குறிப்பிடுகையில்.
நான் தினமும் சுமார் 4 மணிநேரம் படிப்பேன். கூடுதலாக பயிற்சி செய்வதில் நாட்டம் காட்டினேன். எனக்கு அம்மம்மா மற்றும் பரிமளா மாமி ஆகியோரும் வகுப்பாசிரியர் திருமதி. செல்வேந்திரன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
நான் எந்தவொரு ரியுசனுக்கும் சென்றதில்லை. அதற்கான தேவையும் எழவில்லை. 190க்கு கூடுதலாக எடுப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது.
மதியம் பாடசாலை விட்டு வந்ததும் காட்டுன் பார்ப்பேன். வாரத்திற்கு இரு தினங்கள் வென்னிஸ் பயிற்சிக்கு போவதுண்டு. எலோகியுசன் வகுப்பிற்கும் செல்வேன். கொம்பியுட்டர் கேம்ஸ் விளையாடுவேன்.
என்னை தாய்தந்தையர் படி படி என நச்சரித்ததில்லை. சதுரங்கம் விளையாடுவதில் அலாதி பிரியம். நேரம் கிடைத்தபோதெல்லாம் கதைப்புத்தகங்கள் வாசிப்பேன்.
03 மாதங்களுக்கு முன்பு வீரகேசரியில் ஞாயிறு குறுக்கெழுத்துப் போட்டியில் பங்கெடுத்து 2வது பரிசுபெற்றேன். அதற்கான காசோலை கிடைத்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தமிழில் நிறைய ஆர்வமுள்ளது.
அப்பப்பா ஒரு பண்டிதர். அம்மம்மா ஒவ்வொரு தவணைப் பரீட்சையிலும் முதலிடம்பெறும்போது 1000 ருபா தருவார். புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்றால் 50ஆயிரம் ருபா தருவதாகக் கூறினார். அவர் தருவார்.
எனக்குப் பிடித்தமான பாடம் கணிதம். எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வரவே விரும்புகின்றேன்.
இவ்வாறு இரத்தினச் சுருக்கமாகக் பதிலளித்தார்.
அவரது தந்தையார் டாக்டர் நல்லரெத்தினம் தமிழ்வண்ணன் கூறுகையில்,
மாணவர்கள் நிறைய பயிற்சிகள் மற்றும் கடந்தகால வினாக்களை நிறைய செய்தால் பயன் கிடைக்கும். ரியுசன் என்று அலைவதில் அர்த்தமில்லை என்றார்.
-தமிழ்வின்
Leave a comment