இலங்கையின் தோல்வி! பட்டாசு ஒலிகளால் மீண்டும் அதிர்ந்த காத்தான்குடி: ஓர் பல்சுவை ஆக்கம்.

-Special Report

நேற்றிரவு முடிவடைந்த நான்காவது உலக இருபது 20 கிண்ண இறுதிப்போட்டியில் உலக இரசிகர்களால் எதிர்வுகூறப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி 36 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று முதன் முறையாக இருபது20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிக்கொண்டது. இலங்கை 18.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தொடர் இவ்வருடம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் கிரிக்கட் ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்ட அணியாக மேற்கிந்தியத் தீவுகள் அணி இருந்தது. இவ்அறிக்கையைக் கேள்விப்பட்ட பலர் விமர்சித்தனர். அவர்கள் விமர்சித்ததுபோல் இவ்அணி ஆரம்பத்தில் படுதோல்விகளைச் சந்தித்து வந்தது.

இலங்கை போராடி தனது திறமையாலும் தனது சொந்த மண்ணின் ஆதரவாளும் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி இருந்தது. இதேபோல் தான் மேற்கிந்திய அணிக்கும் இறுதிப்போட்டி தவிர்ந்த ஏனைய போட்டிகளில் இலங்கை இரசிகர்கள் உட்பட ஏராளமானோர் மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆதரித்து வந்தனர்.

இருபது 20 உலகக் கிண்ணப்போட்டியில் எப்போதும் தனக்கு சவாலாக இருந்துவந்த பாகிஸ்தான் அணியை அரையிறுதிப்போட்டியில் இலங்கை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதேபோல் பலம் பொருந்திய அவுஸ்திரேவை தோற்கடித்து மேற்கிந்தியத்தீவுகள் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

மேற்கிந்தியத்தீவுகள் அவுஸ்திரேலியாவை வெற்றியீட்டியதன் பின்னர் உலக இணையத்தளங்களின் கணிப்பின்படி மேற்கிந்தியத்தீவுகள் அணியே இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொள்ளும் என கணிக்கப்பட்டிருந்தது.

மேற்கிந்தியத்தீவகள் அணி இதுவரை 1975, 1979 உலகக் கிண்ணங்களையும் 2004 ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்தையும் வெற்றிபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாரை மறந்தாலும் இலங்கை இரசிகர்கள் இவர்களை மறக்க முடியாது

ஆம். சரிந்து தோல்விக் கிடங்கில் சுருண்டுகிடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை தனது அபார துடுப்பாட்டத்தால் அசத்தி வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த மேற்கிந்திய வீரர் சாமுவெல். 6 சிக்சர்கள் உட்பட 56 பந்துகளில் 78 ஓட்டங்களைக் குவித்து மைதானத்தை வாயடைக்க வைத்தார். இவரது இவ் அபார ஆட்டம் ஏனைய அணி வீரர்களுக்கும் நல்லதோர்; முன்னுதாரணமாகும். போட்டியின் ஆட்டநாகனாவும் தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கையின் நட்சத்திரம் மலிங்கவின் பந்துகளை எல்லைக்கு அப்பால் விரட்டினார். இதனால் தான் வீசிய 4 ஓவர்களிலும் விக்கட்டுக்களின்றி 54 ஓட்டங்களை வழங்கி மேற்கிந்திய அணிகளின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் மலிங்கையின் சிகையலங்காரத்தை அணிந்திருந்த அத்தனை இரசிகர்களும் ஏமாந்தனர். எனவே இலங்கை இரசிகர்கள் நிச்சயமாக குறிப்பாக இவர்கள் இருவரையும் மறக்க முடியாது.

உலவியல் தாக்கம்

‘இலங்கை மக்கள் மன்னிக்க வேண்டும். கிண்ணம் எங்களுக்கே’ என நேற்று முன்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கெயில் சாதாரணமாக கூறியிருந்தார். எனினும் எதிரணியான இலங்கை இவ்வசனத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. இதனால் கெயிலை எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்யலாம் என தனது பந்து வீச்சில் மாத்திரமே அதிக கவனம் செலுத்தும் நிலைக்கு இலங்கை வீரர்கள் மனமாற்றப்பட்டனர். இதன்காரணமாக துடுப்பாட்டம் பற்றியும் மேற்கிந்திய அணியின் பந்துவீச்சு சவால் பற்றியும் கருத அக்கரையில்லாமல் போயிருந்தது.

வெற்றி

அந்நிய மண்ணில் பல்லாயிரம் எதிர் தரப்பு இரசிகர்களுக்கு மத்தியில் தனது தன்னம்பிக்கையிலும் திறமையிலும் இவ்வெற்றியை மேற்கிந்தியத்தீவுகள் அணி தனதாக்கிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் மஹேல ஜயவரத்தனாவின் இருபிடிகளும் ஆரம்பத்தில் தவறவிடப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் இலங்கையின் அதிரடி வீரர் டில்சான் ஆட்டமிழந்ததும் இலங்கையின் துடுப்பாட்டத்தில் தடுமாற்றம் காணப்பட்டது. சங்கக்கார மஹேலவுடன் இணைந்து இவ்விருவரும் இலங்கையை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றனர். சிறந்த பந்து வீச்சுக்களாலும் களத்தடுப்பாலும் மேற்கிந்தியத்தீவுகளின் வெற்றி உறுதியானது. மைதானத்தில் அமைதி நிலவியது. ‘பப்பரப்பா’ வும் இசைந்து ஓய்ந்தன.

மகிழ்ச்சி ஆராவாரம்

குலசேக்கரவின் அதிரடி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த நரேன், தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன்பின்னர் கெய்ல், பொல்லார்ட் ஆகிய வீரர்களால் ஜமைக்காவின் பிரபல்ய ‘குமினா’ நடனம் மைதானத்தில் ஆரம்பமானது. இலங்கையின் இறுதி விக்கட் வீழ்ந்ததிலிருந்து பரிசளிப்பு வைபவம் நிறைவடையும் வரை கெய்ல் உலக மக்களை சிரிக்க வைத்தார். கெய்ல் இன் இச்செயலால் தோல்வின் சோகத்தில் மூழ்கியிருந்த இலங்கை அணியின் வீரர்களும் வாய்விட்டு சிரித்தனர். இலங்கை தோல்வியால் கலங்கிப்போயிருந்த இலங்கை இரசிகர்களையும் தனது குரும்புத்தனத்தால் சிரிக்கவைத்தார். மைதானத்தை நோக்கி கேள்வி எழுப்பினார் ‘ நான் என்ன கூறியிருந்தேன்’ என்பதாக.

மாயமாய் மறைந்த மஹிந்த

இறுதிப்போட்டியைக் காணவந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கை தோல்வியடைந்ததும் பின்வழியால் மாயமாய் மறைந்துவிட்டார். யுத்த வெற்றியை சந்தித்த ஜனாதிபதி அவர்களுக்கு இலங்கையின் தோல்வியைத் தாங்க முடியாமல் போயிருந்தது. தனது திறமையால் இறுதிவரை வந்து நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களைத் தட்டிக்கொடுத்து ஆறுதல்கூற வேண்டிய ஓர் தருணத்தில் மாயமாய் மறைந்து சென்றார்.

இலங்கை வெற்றி பெற்றால் பரிசளிப்புக்கு வரவிருந்த ஜனாதிபதி, தனது மண்ணில் உலகப் புகழ் ஈட்டிய ஓர் வெளிநாட்டு அணிக்கு தன் கையால் கிண்ணத்தைக் கொடுத்திருக்கலாம். இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகம் அழியும்வரை அவரது பெயர் கிரிக்கட் வரலாற்றில் நிலைத்திருக்கும். இலங்கை 1996ல் உலகக் கிண்ணம் வென்றபோது அப்போதைய பாகிஸ்தான் பிரதமராக இருந்த மறைந்த பெனாசிர் பூட்டோ அவர்கள் உலகக் கிண்ணத்தை வழங்கி இருந்தார். எங்கெல்லாம் அந்த வரலாற்றை தேடும் போதும் பெனாசிர் இல்லாத கிண்ணத்தையும் பரிசளிப்பையும் காணமுடியவில்லை.

ஆனால் 1980களில் படுதோல்விகளைச் சந்தித்துவரும் இலங்கை அணிக்கு தோல் கொடுக்கும் ஒரே ஒரு நண்பர் இருந்தார். அவர்தான் மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் இலங்கை கிரிக்கட்டிற்கு உறுதியான அத்திவாரமிட்டவருமான் ஜே.ஆர். ஜயவர்த்தனா அவர்கள் எனபதும் இங்கு ஞாபகப்படுத்தத்தக்கது.

தலைவர் பதவி இராஜினாமா

இதனாலோ என்னவோ இலங்கை அணியை இறுதிவரை தனது திறமையால் கரைசேர்த்த இலங்கை அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தனா இருபது 20 போட்டிகளில் இருந்து தனது தலைவர் பதவியை இராஜினாமாச் செய்திருக்கிறார். 2011 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து நாடு திரும்பியதும் குமார் சங்கக்கார தனது தலைவர் பதவியை இராஜினாமாச் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவை ஒன்றும் புதிதல்ல. ஒரு பெரிய தொடருக்குப் பின்னர் இவ்வாறான இராஜனாமாக்களும் ஓய்வுகளும் விளையாட்டுவீரர்களிடமிருந்து வருவது சகஜமே!

இலங்கை தொடர்ந்தும் முன்னிலையில்

நேற்று நிறைவடைந்த (07-10-2012) இறுதி இருபது 20 போட்டிகளின் முடிவின்படி இலங்கை 127 புள்ளிகளுடன் ஐ.சி.சி தரவரிசையில் முன்னிலையில் இருக்கின்றது. 121 புள்ளிகளுடன் நடப்புச் சம்பியன் மேற்கிந்தியத்தீவுகள் அணி இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.

சமூக வலைத்தளங்களின் பிரதிபலிப்புக்கள்

இலங்கையின் எதிர்பாராத படுதோல்வியையடுத்து சமூக வலைத்தளங்களில் பல்லாயிரக்கணக்கான நகைச்சுவை, கேலி சித்திரங்களும் படங்களும் தற்பொழுது வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவின் தோல்வியின் பின்னர் இவ்வாறான ஏராளமான நகைச்சுவை கேலிச்சித்திரங்களும் படங்களும் வெளிவந்திருந்தன. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் படங்கள் வெளியாகின. தற்பொழுது இலங்கை வீரர்களின் கேளிச் சித்திரங்களும் நகைச்சுவைப் படங்களும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இவ்வாறான படங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து வெளியாகிவருவதும் கவனிக்கத்தக்கவை.

பட்டாசு ஒலிகளும் மகிழ்ச்சி ஆராவாரங்களும்

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது அரையிறுதி போட்டியில் இலங்கை பாகிஸ்தானை தோற்கடித்ததால் காத்தான்குடியில் இலங்கை அணியின் இரசிகர்களால் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. எதிர்தரப்பு ஆதரவாளர்கள் பலர் நையப்புடைக்கப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவாளர்களின் வீடுகளுக்குள்ளும் பட்டாசுகள் வீசப்பட்டன.

நேற்றிரவு இலங்கை படுதோல்வியடைந்ததால் மகிழ்ச்சியடைந்த இலங்கை அணிக்கு எதிரானவர்கள் தனது கைவரிசைகளைக் காட்டினர். வானைப்பிளக்கும் அளவுக்கு பட்டாசுகள் வெடித்தன. பொதுமைதானம், கடற்கரை, பிரதான வீதி, கடற்கரைவீதி, குறுக்கொழுங்ககைள், முக்கிய சந்திகள் என்று பட்டாசுகள் வீசப்பட்டன. இவர்களது முழுக்கட்டுப்பாட்டின்கீழ் நேற்றிரவு காத்தான்குடி இருந்ததும் ஓர் விசேட அம்சம்.

கடற்கரையில் திரையரங்கில் இறுதிப்போட்டி காண்பிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் தோல்வியையடுத்து அங்கும் பலர் நையப்புடைக்கப்பட்டிருந்தனர். அரசியல், மார்க்க முரண்பாடுகள் கடந்து இவ்ஆதரவும் ஊர்வலமும் பட்டாசு வெடிப்புக்களும் காத்தான்குடியில் பரவலாக இடம்பெற்றிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment