T20 உலகக் கிண்ணம்: இறுதிப்போட்டியில் இலங்கை-மேற்கிந்தியத்தீவுகள்

-MJ

இலங்கையில் மிக அபாரமாக இடம்பெற்று வந்த உலக இருபது 20 கிண்ணத்திற்கான போட்டிகள் இறுதிச் சுற்றை அடைந்திருக்கின்றன.

இவ் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இம்முறைக்கான உலகக் கிண்ணத்தை மேற்கிந்தியத்தீவுகள் வெற்றிபெறும் என உலக விளையாட்டு வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். எனினும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இத்தொடரில் பல தோல்விகளைப் பெற்றிருந்ததால் இக்கருத்துக்கணிப்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டு, ‘இல்லை’ என்று வாக்களிக்கும் அளவுக்கு இவ் அணியின் நிலைமை இருந்தது.

பின்னர் தனது திறமையை வெளிப்படுத்திவந்த இவ் அணி அரையிறுதிப்போட்டியில் எதிர்பார்க்காத வெற்றியினைப் பெற்றிருந்தது. நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பலமிக்க, எதிர்பார்க்கப்பட்ட அவுஸ்திரேலியாவை உடனடியாக கொழும்பிலிருந்து விமானம் ஏறச் செய்திருந்தது.

எதிர்பாராமல் தெரிவாகியிருக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணியை எதிர்த்து இலங்கை சொந்த மண்ணில்  ஞாயிற்றுக்கிழமை (7ம் திகதி) இரவு 7 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் விளையாடவிருக்கின்றது.

இலங்கை அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட மேற்கிந்தியத்தீவுகள் அரசியல் உயர் பிரதிநிதிகளும் இவ் இறுதிப்போட்டியினைக் காண்பதற்கு வருகை தரவிருக்கின்றனர். இலங்கை அல்லாத போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடும் போது மைதானத்தில் அதிகமான ஆதரவுகள் இதுவரை இவ்வணிக்கு கிடைத்து வந்தன.

ஆனால் இலங்கை விளையாடுவதால் இத்தகைய பெரும் ஆதரவுகள் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்குக் கிடைக்காது. எனினும் இலங்கை கிரிக்கட் அணியை எதிர்ப்பவர்களினரதும் இந்திய இரசிகர்களினரதும் மற்றும் உலக இரசிகர்களின் நடுநிலைமையான ஆதரவுகளும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குக் கிடைக்கும்.

ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடும் அணி முதல் 6 ஓவர்களில் சராசரியாக 39 ஓட்டங்களையே பெற முடிந்திருக்கின்றது. எனவே துடுப்பாட்டத்தைப் பார்க்கிலும் பந்து வீச்சுக்கு இவ் ஆடுகளம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

இலங்கை சுழல்பந்து வீச்சாளர்களின் திறமையான பந்து வீச்சால் மாத்திரமே மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பலமிக்க துடுப்பாட்ட வரிசையைக் கட்டுப்படுத்த முடியும். இல்லாவிடில் நேற்றைய ஆட்டம் போல் எதுவும் நடக்கலாம். ஏனெனில் குறிப்பாக இருபது 20 போட்டிகளை எதிர்வுகூற முடியாது. நடப்பு கள நிலவரமே அவற்றை நிரூபிக்கும்.

இலங்கை-மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் இதுவரை நான்கு இருபது 20 சர்வதேச போட்களில் விளையாடி உள்ளன. இரு அணிகளுக்குமான முதலாவது போட்டி 2009 ஜூன்,10ம் திகதி இங்கிலாந்து, நொட்டின்ஹம் மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் இலங்கை 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இறுதியாக இரு அணிகளும் கடந்த (29-09-2012) சுப்பர்8 போட்டிகளில் விளையாடி இருந்தன. இப்போட்டியிலும் இலங்கை 9 விக்கட்டுக்களால் அபார வெற்றி பெற்றிருந்தது.

இதுவரை இடம்பெற்ற இரு அணிகளுக்கிடையிலுமான நான்கு போட்டிகளிலும் இலங்கை அணியே 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளினது வெற்றி வாய்ப்புக்கும் அதிக பங்களிப்பு நாணய சுழற்சியில் தங்கியுள்ளது. இரு அணிக்கும் முதலில் துடுப்பெடுத்தாடுவதே பிரதான திருப்பமாக அமையும். அல்லது முதலில் துடுப்பெடுத்தாடும் அணியை 140 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தினால் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு வெற்றிக்கான பாதை திறக்கப்படும்.

இதேவேளை இலங்கை தமது பந்துவீச்சுக்கு சார்பான ஆடுகளத்தை தயாரித்திருப்பதாக முன்னால் பாகிஸ்தான் அணி தலைவரும் வர்ணனையாளருமான வசீம் அக்ரம் குற்றம் சுமத்தி இருக்கின்றார்.

இலங்கை அணி இரண்டாவது முறையாக உலக இருபது 20 இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இருக்கிறது. 2009 ல் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment