நேற்று மாலை இடம்பெற்ற உலகக் கிண்ண இருபது 20 போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 16 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி இருக்கின்றது.
முப்பத்தையாயிரம் இரசிகர்களும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் சூழ்ந்திருந்த சொந்த மண்ணில் இலங்கை வெற்றி பெற்றிருப்பது இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது.
இணையங்களின் கருத்துக்கணிப்பின்படி இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் அணி எது என்ற கேள்விக்கு 50:50 என இரு அணிகளும் சம விகிதத்தில் தேர்வு பெற்றிருந்தன. இலகுவான வெற்றி இலக்கை பாகிஸ்தான் கொண்டிருந்தாலும் கவனயீனமான மத்திய துடுப்பாட்ட வரிசையில் தொடர்சரிவைக்கண்டு தொடரிலிருந்து வெளியாகின்றது பாகிஸ்தான். இலங்கை அணியின் களவியூகமும் அபாரமான பந்துவீச்சும், களத்தடுப்பும் வழமைபோல் வெற்றிக்கு வழிசமைத்திருந்தன.
இன்று இடம்பெறும் அவுஸ்திரேலியா மற்றும் மே.இந்தியத்தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி, ஞாயிறு மாலை இலங்கை அணியுடன் இறுதிப்போட்டியில் சந்திக்கவிருக்கின்றது.
சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் கணிப்பின்படி மேற்கிந்திய தீவுகள் அணி இன்று வெற்றியீட்டுமா என்ற கேள்விக்கு இதுவரை பெறப்பட்ட கருத்துக்கணிப்பின்படி இல்லை எனபதாக புள்ளிவிபரம் காட்டுகின்றது. ஓர் விளையாட்டை களநிலவரத்தை வைத்தே கணிப்பிட முடியும். எனவே இன்று நடைபெறும் இப்போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெறுவதற்கான 80சதவீனமான சந்தர்ப்பங்கள் இருப்பதாக விளையாட்டு ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இன்று இலங்கை பெற்ற அரையிறுதி வெற்றியின் பின்னர் காத்தான்குடியில் ஆங்காங்கே பட்டாசுகள் கொழுத்தப்பட்டன. இலங்கை அணியின் இரசிகர்களால் இப்பட்டாசுகள் கொழுத்தப்பட்டன. பாகிஸ்தான் ஆதரவாளர்கள் சிலரின் வீட்டிற்குள்ளும் பட்டாசுகள் கொழுத்தி வீசப்பட்டன.
இலங்கையில் கிரிக்கட் பிரபல்யமடைவதற்கு முன்னர் இருந்து காத்தான்குடியில் பாக்கிஸ்தான் கிரிக்கட் அணியை ஆதரிப்பவர்கள் இருந்துவருகின்றனர். அது பள்ளிக்கூட வாழ்க்கையிலிருந்து அலுவலக வாழ்க்கைவரை அரசியலைவிடவும் ஓர் தீவிரமான ஆதவுடன் இவ்வாறான பாக்கிஸ்தான் ஆதரவாளர்கள் இருந்துவருகின்றனர். இவ்வாறானவர்களில் அதிகமானவர்கள் காத்தான்குடியில் கிரிக்கட்டை விதைத்தவர்கள்.
எப்போதெல்லாம் இலங்கை-பாக்கிஸ்தான் விளையாடுகிறதோ, அப்போதெல்லாம் இரு ஆதரவாளர்களும் தங்களுக்குள் ஆதரவு போட்டியினை ஆரம்பித்துவிடுவர். இது நேற்று-இன்று நடப்பதல்ல. போட்டி முடிவடைந்தால் நட்பாகிவிடுவர். ஒரு குடும்பத்தில் இரு ஆதரவுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் கனவன் ஒரு அணிக்கும் மனைவி ஒரு அணிக்கும் ஆதரவு வழங்குவதும் அதைவிட சுவாரஸ்யமானது. மேலும் தந்தை ஓர் அணிக்கு ஆதரவு, பிள்ளைகள் மற்றைய அணிக்கு ஆதரவு இப்படியே கிரிக்கட் என்றால் அதுவும் இலங்கை-பாகிஸ்தான் என்றால் சுமார் 30 வருடங்களாக காத்தான்குடியில் மாத்திரமல்ல இலங்கையில் முஸ்லிம் நகரங்களிலும் ஊர்களிலுமுள்ள ஆதரவுக் கள நிலவரம் இதுதான். இது பற்றி எந்த உலமாக்களோ, அச்சு ஊடகங்களோ கிரிக்கட்டை தீ மூட்டி பற்றவைக்கவில்லை அன்று!
ஆனால், இணையத்தளம் வந்ததன் பின்னர் இலங்கை-பாக்கிஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையே தீ மூட்டி சண்டைகளை ஏற்படுத்த சிற்சில ஊடகங்களும், மார்க்க அறிஞர்களும் அண்மைக்காலமாக முன்வருவது விமர்சனத்துக்குரியவை! இதேபோல் முகநூலில் சிங்கள பேரினவாதத்தின் பக்கத்தில் இந்திய அணியினரை வம்புக்கு இழுப்பது போலும், பாக்கிஸ்தான் வீரர்களை அவமானப்படுத்தும் புகைப்படங்களையும் கட்டுரைகளையும் எழுதி வருகின்றன. இவை, அவுஸ்திரேலியா பற்றியோ, அல்லது ஏனைய மேற்கத்தைய அணிகள் பற்றி விமர்சிப்பதில்லை. எனவே இப்பக்க விடயத்தில் நாம் அவதானமாக இருக்கவேண்டும். இது எமக்கு அவசியப்படாத ஓன்றும்கூட.
எனவே, ஓர் விளையாட்டை பற்று, மதம் என வேறுபடுத்தி விளையாட்டில் சம்பந்தமில்லாதவர்களால் இவ்வாறான அறிக்கைகள் வெளியிடுவதை முதலில் நிறுத்தவேண்டும். இவ்வாறான அறிக்கைகளால் ஓர் அணிக்கான ஆதரவினை தடுக்கமுடியாது என்பதை நேற்றைய இலங்கை-பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் நிறைந்திருந்த மைதானத்தில் 50:50 ஆதரவுகள் இரு அணிகளுக்கும் இருந்ததை சிந்தித்துப்பார்க்கவேண்டும்.
தனது பிரகாசிக்காத துடுப்பாட்டத்தை நொந்த சஹீட் அப்ரிடி தனது துடுப்பு மட்டை, தலைக்கவசம் ஆகியவைகளை உடைத்து எறிந்து தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். மாறாக வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜயவர்த்தனா இதனை ஓர் வெற்றியாகக் கருதாமல் எமக்குக் கிடைத்த ஓர் அரிய சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து மகிழ்ச்சியை மட்டுப்படுத்திக் கொண்டார்.
என்னதான் மைதானத்தில் பலத்த போட்டி இரு அணிக்கும் நிலவினாலும் போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் தங்களது போட்டிகளை மறந்து ஆரத்தழுவி, கைகுளுக்கி விடைபெறும் ஓர் விளையாட்டுப்பண்பு எங்களிடத்திலும் வர வேண்டும்.
இலங்கை இறுதிப்போட்டிக்கு தெரிவாகுவது முக்கியமல்ல. கிண்ணத்தை வென்று கிரிக்கட் ஏட்டில் சரித்திரம் படைக்கட்டும். அது இலங்கை மக்களுக்கு உலகில் கிடைக்கும் சிம்மாசனமாக அமையட்டும்.

Leave a comment