-MJ
உலக இருபது 20 கிண்ணத்துக்கான அரை இறுதிப்போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 07:00 மணிக்கு கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது. இலங்கை அரைஇறுதிப் போட்டிக்கு வருவதற்குச் செய்த தியாகங்களைப் பார்க்கிலும் அதிக தியாகத்துடன் பாக்கிஸ்தான் அரை இறுதி வாய்ப்பைப் பெற்றிருக்கின்றது.
இலங்கை மண்ணில் இலங்கையின் வெற்றிக்கு நாடுதழுவிய ரீதியில் ஆதரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இரசிகர்கள் நிறைந்த அரங்காகவே இன்றைய போட்டியும் அமையவிருக்கின்றது.
இன்றைய போட்டியைக் காண்பதற்கு இலங்கை அரசியல் தலைவர்களுக்கும் பாகிஸ்தான் பிரிதிநிதிகளுக்கும் பலத்த பாதுகாப்புள்ள வி.ஐ.பி ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
இருபது இருபது உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை பாக்கிஸ்தானை எந்தவொரு போட்டியிலும் வெற்றி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்கிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சஹீட் அப்ரிடி 16 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் வேகமான சதத்தினைப் பெற்று சாதனை படைத்திருந்தார். அவர்பெற்ற இச்சாதனையின் அதே நாளில் இதே அணியை எதிர்த்து மீண்டும் ஓர் முக்கிய போட்டியில் அவரது ஆட்டம் இன்று எவ்வாறு அமையும் என்பதும் இன்றைய கிரிக்கட் இரசிகர்களின் எதிர்பார்ப்புக்களாகும்.
இதைவிட அன்மையில் இடம்பெற்ற சுப்பர் 8 போட்டிகளில் பிரேமதாச மைதானத்தின் ஆடுகளம் சுழல் பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடும் அணி வேகமான ஓட்டங்களைப் பெறுவது சாத்தியமற்ற ஒன்றாக இருந்து வருகின்றது. இரு அணிகளிலும் சிறந்த சுழல்பந்து வீச்சாளர்களும் சிறந்த இளம் துடுப்பாட்டவீரர்களும் இருக்கின்றனர். எனவே இரு அணிகளும் நிச்சயமாக தனது வெற்றிக்காக அயராது போராடும் என்பது முக்கியவிடயம்.
‘இருபது 20 உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கைக்கு சவால்மிக்க அணியாக பாக்கிஸ்தான் அணியே இருக்கின்றது. எனவே இன்றைய போட்டியில் பாக்கிஸ்தானை தோற்கடித்தால், உலகக்கிண்ணம் இலங்கைக்கே’ என லண்டன் பத்திரிகைக்கு வழங்கிய ஆக்கமொன்றில் முத்தையா முரளீதரன் நேற்று சுட்டிக்காட்டிருக்கின்றார்.
எப்படி இருந்த போதிலும் 35,000 விளையாட்டு இரசிகர்களுக்கு மத்தியில் இறுதிப்போட்டிக்கான தெரிவில் இவ்விரு அணிகளும் பலத்த சவால்களைச் சந்திக்க தயாராகிக்கொண்டிருக்கின்றன.
2009ம் ஆண்டு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது உலக இருபது 20 கிண்ணப் போட்டியில் இலங்கையும் பாக்கிஸ்தானும் இறுதிப்போட்டியில் விளையாடி இருந்தன. இப்போட்டியில் பாக்கிஸ்தான் வெற்றியீட்டி இருபது 20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment