உலக ஆசிரியர் தினத்தையொட்டி அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கப்படவிருக்கும் அரச விருதைப்புறக்கணித்து ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அதிபர் ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
உலக ஆசிரியர் தினம் தொடர்பான தேசிய தின நிகழ்வு நாளை 6 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருப்பதுடன் அதில் அதிபர் ஆசிரியர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுமுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர்கள் தேசியத்தலைவர் எம்.அனஸ் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவ் அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 5 ஆம் திகதி உலக ஆசிரியர் தினம் இலங்கையிலும் கொண்டாடப்படவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை 2011/23 ஆம் இலக்கச்சுற்றறிக்கை மூலம் கல்வி அமைச்சு பாடசாலைகளில் இருந்து ஆரம்பித்து மேற்கொண்டு வருகின்றது. அதன் தேசிய தின நிகழ்வின் போது (6 ஆம் திகதி) அதிபர்,ஆசிரியர்கள் விருதுகள் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்படவிருக்கின்றனர்.
சேவைப்பிரமாணக்குறிப்பு பதவி உயர்வு, சம்பள உயர்வுகளை பல வருடங்களாக வழங்காது ஏமாற்றி வரும் அரசு, இந்த நிகழ்வின் போது வழங்கவிருக்கும் அற்ப சலுகைகள், பாராட்டுக்கள் மற்றும் விருதுகளுக்கு மயங்கி சோரம் போகாது உலக ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும்.
– வீரகேசரி
Leave a comment