இங்கிலாந்துக்கெதிரான டி20 உலகக் கிண்ணத் தொடரின் “சூப்பர்-8” போட்டியில், இலங்கை அணியின் அணித்தலைவராக சங்கக்காரா செயல்பட்டதன் ரகசியம் தற்போது தெரியவந்துள்ளது.
இலங்கையில் நான்காவது டி20 உலகக் கிண்ணத் தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான “சூப்பர்-8” போட்டியில், தாமதமாக பந்து வீசிய இலங்கை அணியின் அணித்லைவர் மஹேல ஜெயவர்த்தனவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதனிடையே நேற்று முன்தினம் இங்கிலாந்துக்கெதிரான போட்டியில், நாணயச் சுழற்சியில் தொடங்கி போட்டி முடியும் வரை சங்கக்காராவே அணித்தலைவராக செயல்பட்டார். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
கடைசியில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை (ஐ.சி.சி) இலங்கை அணி ஏமாற்றியது தற்போது தான் தெரிகிறது. அதாவது, ஐ.சி.சி விதிப்படி, ஒரு ஆண்டில் இரு முறை தாமதமாக வீசினால், அடுத்த ஒரு போட்டிக்கு அணித்தலைவருக்கு தடை விதிக்கப்படும்.
ஏற்கனவே, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் அபராதம் கட்டிய ஜெயவர்த்தன, மீண்டும் தாமத ஓவர் சிக்கலில் சிக்கினால், அரையிறுதியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும்.
இதைத் தவிர்க்கவே, சங்கக்காரா அணித்தலைவர் பொறுப்பை ஏற்றார் என்ற செய்தி தற்போது தெரியவந்துள்ளது.
இலங்கையில் இச்செயல் மற்ற அணிகளுக்கு நல்ல கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது. அதாவது, ஏதாவது ஒரு போட்டியில் அபராதம் கட்ட வேண்டிய நிலை வந்தால், அரையிறுதி போன்ற முக்கிய போட்டிகளுக்கு முன், வேறு ஒருவரை அணித்தலைவராக களமிறக்கி விடலாம்.
ஏனெனில், அனைத்து போட்டியிலும் ஒருவர் தான் அணித்தலைவராக இருக்க வேண்டும் என, எந்த ஐ.சி.சி., விதியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-லங்காசிறி
Leave a comment