ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு விசுவாசமான குடும்ப மாக இருந்து மூதூர் தொகுதியிலுள்ள மக்களிடையே கைசின்னத்தை வேரூன்ற வைத்த ஏ. எல். அப்துல் மஜீதின் (முன்னாள் அமைச்சர்) புதல்வரான நஜீப் ஏ. மஜீதின் கட்சி விசுவாசத்திற்கு கிடைத்த பரிசே கிழக்கு முதலமைச்சர் பதவியாகும்.
தான் எதிர்கொண்ட சகல தேர்தல்களிலும் கட்சி விசுவாசத்தைப் பேணி வந்த நஜீப் ஏ மஜீப் எந்த மேடைகளிலும் இனவாதம் பேசியதில்லை. 1989 ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட அழைக்கப்பட்ட போதும் கட்சியின் மீது தனக்கிருந்த விசுவாசத்தால் சு. கட்சியிலே போட்டியிட விரும்பினார்.
அப்போது கடும் சவால்கள் மத்தியில் நஜீப் ஏ மஜீட் கிட்டத்தட்ட 10,000 விருப்பு வாக்குகளைப் பெற்றார். எம். கே. ஏ. டீ. எஸ். குணவர்தன அவர்கள் 11,000 வாக்குகள் பெற்றிருந்ததால் திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீல. சு. கட்சிக்கு கிடைத்துள்ள ஒரே ஆசனம் குணவர்தனாவினால் கைப்பற்றப்பட்டது.
முஸ்லிம் வாக்குகள் பிரிந்தெழுந்ததால் தமது கன்னித் தேர்தலின் போது நஜீப் ஏ மஜீத் தோல்வியுற்றார்.
அவரது தந்தையாரும் தனது கன்னி தேர்தலில் (1960 மார்ச்) தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
1994 பிரதேச சபை தேர்தலில் கிண்ணியா பிரதேச சபைக்காக நஜீப் ஏ. மஜீத் தலைமையின் கீழ் சுதந்திரக் கட்சி “கை”ச் சின்னத்தில் போட்டியிட்டது. அதே சமயம், நான் தம்பலகாமம் பிரதேச சபைக்கு போட்டியிடனும் என்று வற்புறுத்தியவர் நஜீப் அவர்கள். இதனால் எனது அரசியல் “குரு” என்ற வகையில் நான் அவரை கெளரவிக்க கடமைப்பற்றுள்ளேன்.
அத் தேர்தல் பெறுபேறுகளின் படி எல்லா சபைகளும் ஆளும் கட்சியினால் கைப்பற்றப் பட்டது. ஆனாலும் கிண்ணியா பிரதேச சபையை நஜீப் அவர்களினால் கைப்பற்ற முடிந்தது. நான் தம்பலகாமம் பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டேன்.
1994 இறுதியில் இடம் பெற்ற பொதுத் தேர்தலில் இவர் மரச் சின்னத்தின் கீழ் போட்டியிட நேர்ந்துள்ளது.
சந்திரிகா – அஸ்ரப் தேர்தல் ஒப்பந்தம் கீழ் சுதந்திரக் கட்சி சார்பில் கிழக்கில் முஸ்லிம்கள் போட்டியிடக் கூடாது என்ற நிபந்தனை காரணமாக இவ்வாறான நிலைமை ஏற்பட்டது. பல மு. கா. வேட்பாளர்களை தோற்கடித்து நஜீப் அவர்கள் வெற்றி பெற்று கொண்டார்.
2000, 2001, 2004 ஆண்டுகளிலும் அவர் திருமலை மாவட்டத்தின் வெற்றி வீரனாக பாராளுமன்றம் சென்றார். 2000 இல் பிரதி தபால் அமைச்ச ராகவும், 2004 இல் கூட்டுறவு அமைச்ச ராகவும் நியமனம் பெற்றார்.
2010 இல் மிக குறைவான விருப்பு வாக்கு வித்தியாசத்தினால் தோல்வி யுற்றார். இரண்டு வருடங்களுக்கு பின்பு மீண்டும் மாகாண சபை தேர்தலை வென்றெடுக்க நஜீப் அவர்களினால் முடிந்தது.
இவரது நியமனத்திற்கு எவருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவரின் மனிதாபிமான குணமே இந்த தீர்மானத்திற்கு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
Leave a comment