பேஸ்புக் நண்பன்

– செயின் தம்பி ஸியாம் (கல்முனை)

“நான் ஓ..எல்..எக்ஸ்சாம் எழுதியிருக்கன் சேர் அட்வான்ஸ் லெவல் படிக்க இருப்பேனோ என்னவோ” என்று தளர்ந்த குரலில் முகப்புத்தக்கத்தில் சட் பண்ணிக்கொண்டிருந்தவன் வெகுநேரமாக அழுதுகொண்டிருந்தான் என்பதை என்னால் உணர முடிந்தது. ஆறுதல் வார்த்தைகளை அள்ளி வழங்கிக்கொண்டிருந்த எனக்கு அவனது துடிதுடிப்பும் பதறலும் உணர்ச்சியின் உந்துதல்களும் இதயத்தை முட்களாய் தைக்கத் துவங்கின…..

வழக்கம் போலவே மாலை வேளைகளில் பிரத்தியேக வகுப்புகள் இல்லாத சந்தர்ப்பங்களில் முகப்புத்தகத்தில் குந்திக்கொண்டிருபது எனக்கு பழக்கப்பட்டுப்போன விஷயம். வாழ்க்கையில் தோற்றுப்போன சம்பவங்களையும், சூடான பரபரப்பான செய்திகளையும் காலத்தால் கடத்தப்பட்ட செல்லரிப்புக்களையும் கானலாய் தோன்றச் செய்யும் இம்முகப்புத்தகத்தில் ஒரு வித்தியாசமான நண்பனாகவே இவன் காணப்பட்டான்.

அன்று வெள்ளிக்கிழமை வழக்கம்போலவே பேஸ்புக்கில் குந்தியிருந்த நான், ஒரு நண்பனின் விலாசத்தை தேடி முகப்பக்கங்களை ஆராயத் தொடங்கினேன். வெகு தூரமாகி அடிமனத்தில் என்றோ அமிழ்ந்துபோன ஆறாத காயமாய் ஒரு நாமம் தலை நீட்டிக்கொண்டிருந்ததை காண முடிந்தது. காதலின் அரிச்சுவடாய் அமிழ்ந்து கொண்டிருக்கும் மும்தாஜை அந்நாமம் எனக்குள்ளே விம்பமாய் தோற்றுவித்துச் சென்றது. உடனே அப்பெயரை கிளிக் பண்ணி உள்ளே நுழைந்தேன். வைத்தியசாலை, நோயாளிவாட்டு, சத்திரசிகிச்சைக்கூடம், இரசாயன உபகரணங்கள், குருதி தோய்ந்த முகங்கள், வைத்தியர், வைத்திய மாதுக்கள் என்று எல்லோரையும் ஒரே மையத்தில் குவித்து ஒரே பார்வையில் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படம் டைம்லைனில் குறிகாட்டிக்கொண்டிருந்தது. சோகமாய் தோய்ந்துபோன அப்பக்கத்தை பார்த்தவுடன் யாரோ உதவிக்கரம் நீட்டுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று எண்ணியவாறு மேலும் ஆராயத் தொடங்கினேன்.

நான் படும் வேதனைகளை – நீ பொறுத்திருக்க மாட்டாய் என்பதனாலோ – தாயே எனக்கு முன்னர் நீ கண் மூடிக்கொண்டாய்… என்று புனையப்பட்டிருந்த கவிதை வரிகளை படித்தபோதுதான் அர்த்தங்கள் பல எனக்குள் ஊசலாடத்துவங்கியது. அவசர அவசரமாக அவனது முகப்புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன். பாசம், தவிப்பு, அழுகை, வெறுப்பு, ஏக்கம், ஆத்திரம், துயரம், நச்சரிப்பு, உணர்ச்சி, மெளனம் எல்லாவற்றையும் வினாடிக்கு வினாடி அனுபவித்துக்கொண்டிருந்த ஓர் இதயம் என்றோ அணையப்போகும் நாட்களை எண்ணியெண்ணி புழுவாய்த் துடித்துக்கொண்டிருந்தது.

உடனே நண்பனாக நினைத்து எனது வேண்டுதலை ஒப்புவித்தேன். மறுகணமே சம்மதம் வந்தது. தங்களுடன் பேசவேண்டுமென்று குறுஞ்செய்தி அனுப்பினேன். “ஓ… பேசலாமே! எதப்பத்தி? பேசப்போறிங்க…” என்று கேட்டான் துடிதுடிப்புடன். வந்த பதிலை வாசித்துக்கொண்ட எனக்கு எதனை பேசுவது என்றே புரியவில்லை. மெளனமாய் யோசிக்கத் தொடங்கினேன்.

“சேர்…. சேர் சும்மா அப்புடிப்பேசினன் கோவிச்சுக்கிட்டீங்களா?” என்றான்… பதிலாய் நானும் “இல்ல ஒங்கட பேஸ் புக்க பாத்தன். அதிலுள்ள கவிதைகளை படிச்சன் ஒங்களோட பேசணும்போல இருந்திச்சி அதான்…. நீங்க விரும்பினா ஒங்கள பத்தி தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு ஒங்களுக்கு என்ன பிரச்சினை” என்றேன். “நீங்க யாரு?” என்றான். “நண்பன்” என்றேன். சிறிது நேரமாக எதுவிதமான பதிலையும் காணவில்லை. பின்னர் “ஓ…. நீங்க ஆசிரியரா?” என்றவன் “ஒங்களோட பதினைந்து நிமிடம் மட்டும்தான் பேசுவன் பிறகு போயிடுவன்” என்றான் இசைந்தபடி. நான் “ஏன்? இப்படியான கவிதைகளையெல்லாம் எழுதுaங்க…. ஒங்களவிட அத பாக்குறவங்களுக்கு ரொம்ப கஸ்டமா இருக்குமே” என்றேன். அதற்கு “போகப்போறவன் நான் வேற எதசேர் எழுத? இருக்கப்போறவங்க பாக்கலாமே எண்டுதான் எழுதினேன்; இறைவன் என்மேல மிச்சம் அன்பு வச்சிருக்கான். நீண்ட ஆயுளத்தான் தரல்ல வேதனையாவது தராம இருந்திருக்கலாம் இல்ல. நான் ஒரு இரத்தப் புற்றுநோயாளன் சேர். தினமும் செத்துக்கொண்டிருக்கும் கைதி. எனக்கு படிக்கிறதுக்கு நெறய ஆச இருக்கு ஆனா முடியாது. சேர். அதுக்குள்ள வாழ்க்க முடிஞ்சிடும் போல இருக்கு…. வாழ்க்க வெறுத்துட்டு சேர்” என்றான். நான் என்னைக் கட்டுப்படுத்தியவனாக ஆறுதல்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தேன். நேரம் எட்டுமணி கடந்திருந்தது. தலை விறைப்படைந்து கால்கள் திமிர்கொண்டு குத்திக்கொண்டிருந்தன. திடீரென்று “தூக்கம் வருது சேர் போகப்போறன் உங்களது நட்புக்கு நன்றிகள் பாய்” என்று சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றான்.

கற்பனைக்கு எட்டாத கனவுகளுடன் ஜீரணிக்க முடியாத சோகத்தைச் சுவைத்து பசியை மறந்த நிலையில் படுக்கைக்கு ஆயத்தமானேன். இப்படி இருக்கக் கூடாது. இது பொய்யாக இருக்க வேண்டும். அப்படி இருக்குமாயின் இறைவன் அவனது நோயை குணப்படுத்த வேண்டும் என்று பிரார்த்தனைக்குமேல் பிரார்த்தனை செய்துகொண்டேன். மனம் முழுவதும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே கிடந்த அவனது நாமத்துடன் அன்றைய இரவு அடங்கிப்போனது. அதிகாலையில் சுபுஹுத் தொழுகைக்கு முன்னராகவே கண்விழித்த நான் அவனுக்காக தொழுது பிரார்த்தனைகள் செய்து கொண்டேன்.

முன்னரெல்லாம் ஓய்வு நேரங்களில் மட்டும் முகப்புத்தகத்தில் குந்தியிருக்கும் நான் பிற்காலங்களில் வேலைப் பளுக்களுக்கு மத்தியிலும் அவனது வரவுக்காக காத்திருந்த பொழுதுகளோ…. ஏராளம். அடிக்கடி முகப்புத்தகத்தில் வருவான். தினமும் அதே பேச்சுகள், கொடுமைகள், சொல்லொணாத் துயரங்கள். ஆறுதல்கள்…. இரத்தத்தை மாற்றுவதற்காக இந்தியா சென்று அனுபவித்த சோதனைகள். மெளனத்தை எதிர்நோக்கிய வார்த்தைகள் என தொடர்ந்து கொண்டிருந்தன.

இலங்கையின் எழில் கொஞ்சும் மாவட்டமான களுத்துறையின் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசத்தினை பிறப்பிடமாகக் கொண்டு முற்றிலும் வேறுபட்ட கிராமமொன்றிலே வசித்து வருபவன். தன் வீட்டுக்கு முன்னால் நீண்டு விரிந்து கிடக்கும் இரயில் தண்டவாளமொன்றே போதும். நிம்மதியற்று நிலைகுலைந்த எப்படிப்பட்ட மனிதர்களாயினும் கற்பனையில் ஆழ்த்தி மனதிற்கு விடிவுகொடுக்கும். ஆனால் அச்சூழல் அவன் வாழ்க்கைக்கு விடிவுகொடுக்கவில்லை.

நடுத்தர வர்க்கமொன்றில் ஆசிரியரான தாய் தந்தையருக்கு இரண்டாவது பிள்ளையாக பிறந்தவன். தாய், தந்தையரை சிறு பராயத்திலே புற்றுநோய்க்கு தாரைவார்த்து விட்டு தனது பெரியம்மாவின் அரவணைப்பிலே காலம் கடத்தி வந்தான். இடைநிலைக் கல்விக்காக கண்டியிலே உள்ள பிரபல பாடசாலையொன்றில் இணைந்து கல்விகற்று வந்தான். எதிலும் சுறுசுறுப்புடன் தன் ஆற்றலை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவதுவும் வகுப்பிலே முதலாம் பிள்ளையாக தேறுவதுவும் இவனுக்கு பழக்கப்பட்ட செயல். நான்கு மொழிகளில் தேர்ச்சியும் நல்ல பண்பட்ட நடத்தையும் கொண்ட இவனுக்கு இரத்தப்புற்றுநோய் என்பது பத்தாம் தரம் படிக்கும் போதுதான் தெரிய வந்தது.

மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டு எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒரு ஜீவன் மரணத்தை சுமந்து தத்தளித்துக் கொண்டிருந்ததனை பார்க்கும்போது எல்லோருடைய கண்களும் குளமாயின. பரிதாபக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கினர். சிறு பராயத்தில் இந்நோயை கண்டுபிடித்திருந்தால், குணப்படுத்தியிருக்கலாம் ஆனால் இப்போது கைவிடப்பட்ட நிலை மரணத்தை தழுவுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகிக்கொண்டே இருந்தது.

பத்தாம் தரம் பூர்த்தி செய்யப்பட்டு பதினோராம் தரம் வகுப்பேற்றப்பட்ட அவன் ஒன்பது பாடங்களிலும் எண்ணூற்றி அறுபத்தேழு புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தை தட்டிக்கொண்டான். காலங்கள் படிப்படியாக கரைந்து கொண்டிருக்க அவனது ஆயுளின் கதியும் சக்தியும் நம்பிக்கையும் குறைந்து கொண்டே இருந்தது. மன உழைச்சலுக்கும் போராட்டத்துக்கும் மத்தியிலும் ஒருவாறு கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பொதுப் பரீட்சையினை நிறைவு செய்துகொண்டு நண்பர்களின் கைலாகுடன் பாடசாலை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது போன்று அங்கிருந்து தனது சொந்த வீட்டிற்கு கரைசேர்ந்துகொண்டான்.

பாடசாலை வாழ்க்கையில் நண்பர்களை விட அவனது குணப்படுத்த முடியாத நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவன் முகநூலில் இணைந்து தனது ஆதங்கத்தையும் உள்ளக் கிடக்கையினையும் நச்சரிப்புக்களையும் உணர்ச்சிகளையும் கொட்டிக் கொண்டிருந்தது. ஒருவகையில் ஆறுதலையும் மன அமைதியையும் அளித்திருந்தது.

“நான் உலகத்திலே எனது தாய் தந்தையர்களை அடுத்து அதிகம் நேசிப்பது பேஸ்புக் நண்பர்கள்தான்…” என்று அவனால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த வாசகங்கள் முற்றிலும் நிஜமானதே

என்னுடன் நண்பனாகி ஏழு மாதங்கள் அப்போது கடந்திருந்தது. வாழ்க்கையினை வெறுப்போடு நோக்கி வாழ்நாளை முடித்துக்கொள்ளும் எத்தனங்களுடன் கதிகலங்கி நாளுக்கு நாள் தன் நினைவுகளை எங்கேயோ பதுக்கிக்கொண்டிருந்தபோதுதான் பரீட்சை முடிவும் வெளியானது. எட்டுப் பாடங்களில் அதி விஷேட சித்தியும் ஒரு பாடத்தில் திறமைச் சித்தியும் பெற்றான் நண்பர்களின் வாழ்த்துக்களை பெற்றாலும் கல்வியை தொடரமுடியாதே என்ற ஆதங்கத்துடன் ஏக்கமடைந்தான். சக நண்பர்களும் பேஸ்புக் தோழர்களும் அவனுக்கு எவ்வளவுதான் ஆறுதல் கூறினாலும் அவனது ஆழ் மனம் அவற்றை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை ஏற்கவும் முடியாது. தூரப்பட்டிருந்த சிந்தனையில் உலகம் அடிக்கடி அவனுக்கு சுழன்று கொண்டேயிருந்தது.

இரண்டாயிரத்துக்கும் அதிகமான நண்பர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த அவனுக்கு எல்லோரையும் இனங்கண்டுகொள்ள முடியவில்லை. தினமும் முகப்புத்த கத்துடன் உலா வந்து கொண்டிருக்கும் அவனை ஒரு சமயம் நாள் பூராகவும் காணவில்லை. நானும் அன்றைய தினம் அவனுக்காய் காத்துக்கொண்டிருந்தேன். இரவு எட்டு மணிக்கு வருவதாய் கூறியவன் பத்தரை மணியை கடந்திருந்தும் அவனது வரவு பூச்சியமானது. எதிர்பார்ப்பு ஒரு புறமும் என்ன நடந்திருக்குமோ என்ற பீதி மறுபக்கமும் வாட்டிக்கொண்டே இருந்தது.

அவனோடு தொடர்பு கொள்ளவோ அவனது நோய் நொம்பலங்களை விசாரிக்கவோ என்னிடம் தொலைபேசி இலக்கங்களோ விலாசமோ இருக்கவில்லை. என்னுடைய கட்டாயவேண்டுதலின் பின்னர் ஒரு தொலைபேசி இலக்கத்தை வழங்கியிருந்தான். அது அவனுடைய பெரியப்பாவின் இலக்கம். நான் பல முறை கேட்டதற்கு இணங்க அதனை வழங்கினான் உடனே அவருடன் பேசலாமோ என்று ஆவலாய்க்கேட்டேன். அதற்கு “இப்ப இல்ல சேர் நான் அவரிடம் உங்களையப்பத்தி சொன்னதற்குப் பிறகு பேசுங்கள்” என்றான். நானும் இசைந்து கொண்டேன்.

உடனடியாக அந்த ஞாபகம் எனக்கு வர ஆரம்பித்தது… அழைப்பினை மேற்கொண்டேன் உள்வரும் அழைப்புக்கள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. என்ற பதில் மட்டும் கிடைத்தது. ஒரே குழப்பம் எப்படியாயினும் அவனுடன் பேச வேண்டும் ஏது நடந்தது என்பதனை அறிவதற்கு மனம் ஆவலாய் துடித்துக்கொண்டே இருந்தது. ஆறு நாட்கள் கடந்துபோன நிலையில் என்னுடைய முகப்புத்தகத்திற்கு ஒரு குறுஞ்செய்தி சகோதர இனத்தவரான விரானி பெரகரா எப்வரிடமிருந்து வந்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நாம் சாஜஹானை இழந்து விட்டோம். என்ற செய்தி இதயத்தை புண் ணாக்கியது வாசகங்களை திரும்பத் திரும்ப படித்துக்கொண்டே மனம் பதறத்தொடங்கியது. எப்படியாயினும் அதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல நண்பர்களிடமும் விசாரணை செய்தேன். அவர்களுக்கும் அதே செய்தி வந்திருந்ததாக தகவல் கிடைத்தது என் தேடலுக்கு பலன் கிடைக்கவில்லை. பதினொரு நாட்கள் கடந்துபோன நிலையில் ஒரு பெயர்ணமி நாள். மொட்டை மாடிக்குச் சென்று எறித்துக்கொண்டிருக்கும் நிலவினை வெறித்தவாறு சிந்தனைகளை எங்கோ தொலைத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று ஓர் அழைப்பு என்னுடைய பள்ளித் தோழனிடமிருந்து வந்திருந்தது. பொளர்ணமி நாட்களில் நண்பர்களோடு கடற்கரைக்குச் சென்று அரட்டையடிப்பது எனக்கு விருப்பமான பொழுது போக்கு. நண்பனுக்கு வர முடியாது. ஒரு வேலையொன்றிலே இருப்பதாகக்கூறி அழைப்பை துண்டித்த நான் சில நிமிடம் கையடக்கத் தொலைபேசி விளையாடிக்கொண்டிருந்த சமயம் அவன் எனக்குத் தந்த இலக்கத்திற்கு குறுஞ்செய்தி யொன்றை அனுப்பிவைத்தேன்.

‘தயவு செய்து பதில் அனுப்புங்க சாஜஹான் இப்போ எங்கு இருக்கிaங்க?’ என்று செய்திக்கு மேல் செய்தியாக மூன்று செய்திகளை அனுப்பிவைத்தேன். எதுவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்னை நான் நொந்து கொண்டவனாக அவ்விடத்துக்கு விடைகொடுத்து விட்டு இராப்போசனத்துக்காக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் தொலைபேசியில் ஒரு செய்திக் சமிக்ஞை தானாகவே ஒலித்து அடங்கியது.

சாப்பிட்டு முடிந்த கையுடன் தொலைபேசியில் வந்த செய்தியினை வாசிக்கத்தொடங்கினேன் அது வேறு யாரிடமும் இருந்து வரவில்லை சாஜஹானின் பெரியப்பாவிடம் இருந்துதான் வந்திருந்தது. “சாஜஹான் தற்பொழுது வைத்திசாலையில் இருக்கிறார். அவரது நோய் குணமடைவதற்கு நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்” என்ற வாசகம் மட்டும்யாரைப் பற்றி நான் அறிவதற்கு ஆவலுடன் காத்திருந்தேனோ அந்த ஜீவனைப் பற்றிய செய்தி காதுகளை களிப்பூட்டிச் சென்றது மேலும் சில விடயங்களை கேட்டபோதே அவன் லங்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை அறிய முடிந்தது.

நிம்மதிப் பெருமூச்சுக்களுடன் தொலைபேசி இலக்கம் கணக்கிலக்கம் என்பவற்றை கேட்டிருந்தேன் பதில் வரவில்லை. உயிருடன் போராடும் அந்த ஆத்மா உலகத்திலே ஜீவித்திருந்தால் போதுமென்று இறைவனை பிரார்த்தித்துக் கொண்டேன் . மறுகணம் அவரே அழைப்பினை ஏற்படுத்தியிருந்தார். நானும் அவருமாக சுமார் ஒன்பது நிமிடங்கள் உரையாடிக்கொண்டிருந்தோம்.

“உதவி வேண்டுமா?” சார்… என்று கேட்டேன் “நீங்கள் என் மகனுக்கு செய்கின்ற தற்போதைய பேருதவி இறைவனிடம் அவரது நோய் குணமடைய பிரார்த்தியுங்கள்” என்றார். “அவரை பார்க்க வேண்டுமா பிரதர் அடுத்த செவ்வாய் இன்ஷா…அல்லாஹ் வீடு திரும்புவார் அப்போது வீட்டுக்கு வந்து பார்க்கலாம்” என்றார். தொலைபேசி இலக்கம் அவருடைய வீட்டு விலாசம் என்பவற்றை கேட்டுக்கொண்டடேன். “நான் கண்டிப்பாக எஸ்.எம்.எஸ். பண்ணுறன் சேர் என்றார்” சலாம் கூறி அழைப்பை துண்டித்துக்கொண்டார்.

இதுவரைக்கும் எந்தவித பதிலும் கிடைக்கப்பெறவில்லை. நான் அனுப்பிய குறுஞ் செய்திகளும் பயனளிக்கவில்லை. நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் என்னாலான உதவி எப்போதும் அவனுக்கு கிட்டவேண்டும் என்ற ஆசைகளோடும் நண்பனின் ஆயுளுக்கான பிரார்த்தனைகளுடன் என் பொழுதுகள்….

– தினகரன் வாரமஞ்சரி சிறுகதை

 

 

 

Published by

Leave a comment