தம்புள்ளையில்ஒக்டோபர் இறுதியோடு மக்களை வெளியேறச் சொல்லி நோட்டீஸ்: கடிதம் இணைப்பு

இலங்கையின் தம்புள்ளையில் வணக்கத்திற்குரிய பிரதேசமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் வீடுகளையும் கடைகளையும் வைத்திருப்பவர்கள் ஒக்டோபர் இறுதிக்குள் அவற்றை காலிசெய்ய வேண்டுமென நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டபடி நகர அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு உதவியாக இந்த நடவடிக்கை அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து வெளியேறுபவர்களுக்கு கண்டலாம வீதியில் மாற்று இடம் வழங்க இரண்டு வாரங்களில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் நோட்டீஸ் கூறுகிறது.

மாற்று இடம் கிடைக்கும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பில் இப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை இல்லை என சில மாதங்கள் முன்பு இவ்விவகாரம் தொடர்பில் பிரச்சினை உருவான ஹைரியா பள்ளிவாசலின் நம்பிக்கை பொறுப்புதாரியான புர்ஹானுதீன் அமானுல்லா பிபிசியிடம் தெரிவித்தார்.

பல வருடங்கள் வாழ்ந்த வீடுகளை விட்டுவிட்டு சில நாட்களில் வெளியேறச் சொல்லி அரசாங்கம் கேட்பதில் நியாயமில்லை என இம்மக்கள் அங்கலாய்ப்பதாக அவர் கூறினார்.

தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசலுக்கு நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் நோட்டீஸ் வரவில்லை என்று அமானுல்லா குறிப்பிட்டார்.

சுற்றியிருப்பவர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டு பள்ளிவாசல் நிலத்தை மறைமுகமாக கைப்பற்ற நகர அபிவிருத்தி அமைச்சு காய் நகர்த்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.

நில சுவீகரிப்பு சட்டத்தின் மூலம் பொதுப் பயன்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு மட்டுமே சட்டம் அனுமதிக்கிறது. நகர அபிவிருத்தி அமைச்சு இம்முறையில் நிலத்தை கைப்பற்ற முடியாது என தம்புள்ளை ஹைரியா ஜும்மா பள்ளிவாசலின் நம்பிக்கை பொறுப்புதாரியான அமானுல்லா கூறினார்.

bbc/tamil

Published by

Leave a comment