ஓர் இரசிப்புடன் தரும் தகவல்
இலங்கையில் தற்பொழுது மிக விமர்சையாக இடம்பெற்றுவரும் இருபது 20 உலகக்கிண்ணத் தொடர் உலக கிரிக்கட் இரசிகர்களை மாத்திரமன்றி உலககையே இலங்கையின் பக்கம் திரும்பச் செய்திருக்கின்றது.
இலங்கையில் நிலவிய கொடிய உள்நாட்டு யுத்தத்தின்பின்னர் வெளிநாட்டினர்களின் சுற்றுலா விஜயங்கள் அதிகரித்திருக்கின்றன. சுமார் 30 வருடங்கள் வட-கிழக்கிற்கு வெளிநாட்டினர் செல்லுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த பகுதிகள் தற்பொழுது திறக்கப்பட்டு, அவை உல்லாச புரிகளாக மாறிவருகின்றன. இதனால் அப்பகுதிகளிலுள்ள வர்த்தகர்கள் மாத்திரமன்றி, இலங்கையும் அதிக வருமானத்தை ஈட்டிவருகின்றது.
தற்பொழுது இலங்கையில் இடம்பெற்று வரும் நான்காவது இருபது 20 உலகக் கிண்ணத் தொடரைக் கண்டு களிப்பதற்காக பெரும்பான்மையான வெளிநாட்டினர்கள் இலங்கைக்கு வந்திருக்கின்றனர். குறிப்பாக இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களது குடும்பங்களுடன் வருகை தந்து இப்போட்டிகளை மகிழ்சிகரமாக, சுதந்திரமாக கண்டுகளித்து வருகின்றனர்.
அது மாத்திரமன்றி, ஏராளமான பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா நாட்டைச் சேர்ந்த பல்லாயிரம் இரசிகர்கள் இலங்கையில் இப்போட்டிகளைக் காண்பதற்காக இலங்கையில் நிலைகொண்டிருக்கின்றனர். இதேபோல் பங்களாதேஷ் அணி விளையாடிய போட்டிகளைக் கண்டுகளிப்பதற்காக அந்நாட்டு இரசிகர்கள் இலங்கை வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதைவிட மேற்கிந்தியத் தீவுகளின் நாட்டு இரசிகர்களும் பல நூறுபேர்கள் மைதானத்தில் காணக்கூடியதாக இருக்கின்றன. இலங்கை தவிர்ந்த போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடும் போது இலங்கையின் பெரும்பாலான இரசிகர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆதரித்து வருவது அவ்வணிக்கு மேலும் உற்சாகத்தை வழங்கி இருக்கின்றது.
எந்த அணிகள் விளையாடிபோதும், இலங்கை கிரிக்கட் இரசிகர்களும் வெளிநாட்டு இரசிகர்களும் மைதானத்தில் நிறைந்து காணப்படுகின்றனர். பார்வையாளர்கள் நிறைந்த அரங்கே போட்டி ஏற்பாட்டாளர்களை ஊக்குவிக்கும். இலங்கையில் இடம்பெற்றுவரும் இவ் உலகக்கிண்ணப் போட்டிக்கு இரசிகர்கள் காட்டும் ஆர்வத்திற்கு சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் மகிழ்ச்சியடைந்திருக்கின்றது.
யுத்தம் இடம்பெற்ற 1990களில் இலங்கையில் வெளிநாட்டு அணிகள் வந்து விளையாடுவதற்கு தயக்கம் தெரிவித்திருந்தன. 1990 யில் நியூசிலாந்து இலங்கைக்கு வந்திருந்த போது, நியூசிலாந்து அணி அப்போது தங்கியிருந்த கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடித்ததால் சுற்றுப்பயணம் வந்திருந்த நியூசிலாந்து அணி உடனே போட்டிகளை இரத்துச் செய்துவிட்டு, நியூசிலாந்துக்குத் திரும்பினர்.
இதன்பின்னர் 1992 இல் மீண்டும் இலங்கையில் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்து வந்திருந்த நியூசிலாந்து அணி, முன்னர் இடம்பெற்றிருந்தது போல் மீண்டும் அதே இடத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றதால் மீண்டும் போட்டிகளை இரத்துச் செய்துவிட்டு நியூசிலாந்து திரும்பி இருந்தது.
மேலும், 1996ல் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடாத்திய ‘வில்ஸ்’ உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கையுடன் இலங்கையில் விளையாட இருந்த இலங்கை-அவுஸ்திரேலியா, இலங்கை-மே.இந்தியத் தீவுகள் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டன.
சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் அட்டவணைப்படி அவுஸ்திரேலியா, மே.இ.தீவுகள் இப்போட்டிகளில் இலங்கையில் இலங்கையுடன் விளையாட வேண்டும். எனினும் குறித்த இரு அணிகளும் பாதுகாப்பு காரணங்களை சுற்றிக்காட்டி போட்டிக்கு இலங்கை வர மறுத்திருந்தன. இதனால் இலங்கை தலா 2 வெற்றி புள்ளிகள் பெற்றும், கெண்யா அணிக்கு எதிரான வெற்றியுடனும் 2ம் சுற்றுக்குச் சென்றதும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியவை.
ஆனால், இவைகள் அனைத்து கனவுகள் போன்று மறந்து இன்று இப்போட்டிகள் கலகலப்புடன் மகிழ்ச்சி ஆராவாரங்களுடன் விளையாடப்பட்டு வருவதானது, உலகின் கவனத்தை இலங்கையின் பக்கம் திரும்பச் செய்திருக்கிறது.
விதம்விதமான ஆடல் பாடல்கள், சுவாரஸ்யமான கிரிக்கட், அரங்கைக் கடந்து-வானைத் தொடும் சிக்ஸர்கள், பற்பல சாதனைகள், அரங்கு நிறைந்த பல்லாயிரம் இரசிகர்கள், இரசிகர்களுக்கு உற்சாக விருந்தளிக்கும் ‘பப்பரப்பா’ இன்னிசைக் குழுக்களும் உள்நாட்டவரையும் வெளிநாட்டினர்களையும் மாத்திரமின்றி அறிவிப்பாளர்களையும் மகிழ்ச்சிப்படுத்திச் செல்கின்றன. இவைகள் அனைத்தும் இலங்கை மக்களின் கிரிக்கட் மீது கொண்டிருக்கும் காதலை உலகுக்குப் பறைசாற்றிச் செல்கின்றது.
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு இந்தியத் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் சிலர் தலையிட்டு மூக்குடைத்தாலும் இந்திய அணியையும், பல்லாயிரக்கணக்கான இந்திய கிரிக்கட் இரசிகர்களையும் இலங்கை செல்வதைத் தடுக்க முடியாமல் போயிருப்பதானது, இவர்களின் அரசியல் விளையாட்டுக்களில் இருந்து கிரிக்கட் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதை இவர்கள் உணரவேண்டும்.
இலங்கை வந்திருந்த சினிமா நடிகை நடிகர்களுக்கு விமர்சணங்கள் விட்டு, மக்களைத் தூண்டும் இவ்வாறான போலி தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவேண்டும். அண்மையில இலங்கை வரவிருந்த ஓர் பிரபல பாடகர் ஒருவரும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் மிரட்டலால், தனது நிகழ்ச்சயை இரத்துச் செய்திருந்தார். ஆனால் இன்று தமிழ்நாட்டு வீரர்கள் இலங்கை மண்ணில் விளையாடி தன் நாட்டுக்கு சாதனை படைப்பதை இவர்கள் ஏன் அனுமதித்திருக்கின்றனர் என்பதை இவர்களின் மனதை அவர்களிடமே கேட்டுப்பார்க்கச் சொல்லவேண்டும்.
2007 உலகக் கிண்ணம், 2010 இருபது 20 உலகக்கிண்ணம் ஆகிய போட்டிகள் மேற்றிகிந்தியத் தீவுகளில் இடம்பெற்றிருந்தன. புகழ்பெற்ற பிரமாண்டமான மைதானங்களும் அரங்குகளும் இருந்தும் உலகக் கிண்ணப் போட்டிகளைக் காண்பதற்கு அந்நாட்டு மக்களின் ஆதரவுகளும் ஆர்வங்களும் குறைந்திருந்தன. அரங்கின் பெருமதியான பல்லாயிரம் ஆசனங்கள் காளியாக இருந்தன. இவை சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்திற்கும், போட்டியை ஏற்பாடு செய்திருந்த முகவர்களுக்கும் அதிருப்தியை அளித்திருந்தன.
எனினும் இலங்கை மக்களின் ஆதரவுகள் இன்று சர்வதேசத்தைக் கவர்ந்திருக்கின்றன. எனவே இலங்கையில் தற்பொழுது விமர்சையாக இடம்பெற்றுவரும் இருபது 20 உலகக் கிண்ணப் போட்டிகள் இலங்கை மக்களின் நன்மதிப்பை நிச்சயமாக உலகுக்குப் பறைசாற்றும் என்பது திண்ணம்.
![16556835[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/165568351.jpg?w=530&h=397)
Leave a comment