புனித இஸ்லாத்தையும் இறை தூதரையும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டிருக்கும் ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ என்ற திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து கொழும்பில் நேற்று 24ம் திகதி காலை மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றது.
இப்பேரணியை காதிரியத்துன் நப விய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலை வர் சங்கைக்குரிய நாயகம் அஷ்ஷெய்ஹ் அஹம்மத் ஆலிம் பின் முஹம்மத் ஆலிம் காரியத்துன் நபவியின் ஏற்பாட்டில் பேருவளை நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் இயக்கம் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.
பம்பலப்பிட்டி சந்தியிலிருந்து ஆரம்பமான இந்த மாபெரும் பேரணி காலிவீதி ஊடாக கொள்ளுப்பிட்டி சந்திவரை சென்றது.
பேருவளை, வெலிப்பன்னை, துன்டுவ, வியங்கல்லை, பலப்பிட்டி, காலி, பாணந் துறை, அட்டுளுகமை, மள்வானை, திஹாரிய, கஹட்டோவிட்ட, கொழும்பு உட்பட காதிரியத்துன் நபவிய்யா தரீக்கா வைச் சேர்ந்த முரீதீன்கள், முஹிப்பீன்கள் மற்றும் அஹ்லுஸ் ஸ¤ன்னத் ஜமாத் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்லாயி ரக் கணக்கானோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.
மேல் மாகாண ஆளுநர் அஸ்ஸெய்யித் அலவி மெளலானா, மேல் மாகாண சபை உறுப்பினர் எம். எம். எம். அம்ஜாத், ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் அஸ்ஸெய்யித் அப்துல் காதர் மெளலானா, ஜனாதிபதியின் இஸ்லாமிய கலாசார இணைப்பாளர் அஸ்ஸெய்யித் ஹஸன் மெளலானா, கொழும்பு மாவட்ட ஸ்ரீல.சு. கட்சி அமைப்பாளர் பெளஸான் அன்வர், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் ஸாலி உட்பட பல பிரமுகர்கள் பங்குபற்றினர்.
அரபு மொழியிலும், ஆங்கில, சிங்கள, தமிழ் மொழிகளிலும் எழுதப்பட்ட சுலோகங்களைத் தாங்கியவாறு ஸலவாத் ஓதியவர்களாக மிக அமைதியாக பேரணி சென்றது.
அமெரிக்காவின் செயலை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. மேல் மாகாண சபை உறுப்பினர் எம். எம். எம். அம்ஜாத் உட்பட நபவிய்யா இயக்க பிரமுகர்கள் பேரணியை வழி நடத்திச் சென்றனர். கொள்ளுப்பிட்டி சந்தியில் பொலிஸார் வீதித் தடை போட்டு அதற்கப்பால் செல்ல இடமளிக்கவில்லை. பின்னர் ஆளுநர் அலவி மெளலானா, எம். எம். எம். அம்ஜாத், அஸ்ஸெய்யித் அப்துல் காதர் மெளலானா, அஸ்ஸெய்யித் ஹஸன் மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று மஹஜர் ஒன்றையும் கையளித்தனர். பின்னர் பேரணி மிக அமைதியாக கலைந்து சென்றது.
பம்பலப்பிட்டி காலி வீதி முதல் கொள்ளுப்பிட்டி வரையில் வாகன நெரிசல் காணப்பட்டது. பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆளுநர் அலவி மெளலானா அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள இறைத் தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக இன்று முழு உலகிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் நபவிய்யா அமைப்பு பாரிய அளவிலான பேரணியை தலைநகரில் நடாத்தியுள்ளது என்றார்.
மேல் மாகாண சபை உறுப்பினர் எம். எம். எம். அம்ஜாத் பேசும்போது, எமது உயிரை விட நாம் ரஸ¤லுல்லாஹ் (ஸல்) அவர்களை நேசிக்கிறோம். ரஸ¤லுல்லாஹ் (ஸல்) அவர்களை அவதூறு செய்ய இடமளிக்க முடியாது. நபிகள் (ஸல்) அவர்களுக்காக எமது உயிரைக்கூட தியாகம் செய்ய தயாராக உள்ளோம் என்றார்.
-மூலம்: தினகரன்
Leave a comment