முஸ்லிம் காங்கிரஸில் எந்தவொரு அதிகாரபூர்வமான அந்தஸ்தையும் வகிக்காக ஆஸாத் சாலிக்கு முஸ்லிம் காங்கிரஸையோ அதன் தலைமைத்துவத்தையோ விமர்சிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாதென அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை மைத்துவம் தீர்க்கதரிசனத்துடன் மேற்கொள்ளும் தீர்மானங்களை விமர்சிப்பதற்கு அசாத் சாலிக்கு எந்த அருகதையும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட் டியிட்ட அசாத் சாலி, முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் விமர்சனங்களை கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரி வித்திருப்பதாவது: நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது கிழக்கின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக எழுச்சி பெற்றிருப்பதன் காரணமாக கிழக்கில் நல்லாட்சி ஒன்றை அமைக்கும் கடிவாளம் முஸ்லிம் காங்கிரஸின் கரங்களில் கிடைத்திருக்கிறது.
அந்த வகையில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை நிறுவுவது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டிருக்கும் தூர நோக்குடனான தீர்மானம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மறைந்த தலைவர் அஷ்ரப் கண்ட பல கனவுகளை நனவாக்கும் வகையில் இந்த சந்தர்ப்பத்தை எமது தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் நன்கு பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்று நான் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன். மர்ஹும் அஷ்ரப் இனப்பிரச்சினை தீர்வொன்றின் போது கிழக்கில் முஸ்லிம் மாகாணம் ஒன்று ஒருவாக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வந்துள்ளார். ஆனால் இன்று இனப்பிரச்சினை தீர்வுக்கு அப்பால் முழு கிழக்கு மாகாணமும் ஒரு முஸ்லிம் மாகாணமாக பரிணமிக்கும் வகையில் முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் சக்தி பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் முதலமைச்சர் என்கின்ற விடயத்தில் விடாப்பிடியாக நின்று அதனை வெற்றி கொண்டிருக்கிறார்.
அத்துடன் சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கும் அரசிடம் தீர்வு கோரி அவற்றுக்கான உத்தரவாதங்களைப் பெற்றுள்ளதுடன் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் நீண்டகால அபிலாஷைகள் தொடர்பில் அரசுடன் எழுத்து மூலமான ஒப்பந்தமொன்றையும் செய்துகொண்டே அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு எமது தலைமைத்துவம் உடன்பட்டுள்ளது.
யதார்த்தங்கள் – சாத்தியப்பாடுகள் குறித்து சற்றும் சிந்திக்காமல் முதலமைச்சர் பதவி ஒன்றுக்காக மட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைய வேண்டும் என்பதே அசாத் சாலி எழுப்பும் கோஷமாகும்.
கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாமல் அதற்கு வெளியிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் ஒட்டுமொத்தமான இருப்பு, பாதுகாப்பு என்பவற்றுக்கான உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் அசாத் சாலி இவற்றை எல்லாம் கருத்திற் கொள்ளாமல் எழுந்தமானமாக, ஒரு பக்கச்சார்பாக நின்று கட்சியையும் தலைமைத்துவத்தையும் கண்மூடித்தனமாக விமர்சித்திருப்பானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களோ உயர்பீட உறுப்பினர்களோ அடிமட்ட போராளிகளோ தலைமைத்துவம் மீது கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளாத நிலையில் எமது கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட வந்த நண்பர் அசாத் சாலி வீண் சந்தேகங்களையும் விமர்சனங்களையும் புரளிகளையும் கிளப்பி விட்டு கட்சிக்கெதிரான சக்திகளுக்கு தீனி போட முற்பட்டிருப்பதானது அவர் ஏதோ ஒரு பின்னணியில் செயற்படுகிறார் என்பதையே புலப்படுத்துகிறது. அந்தப் பின்னணியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இவரது கருத்துக்கள் வெளிப்படுகின்றன என்றே நாம் உணர்கின்றோம்.
-THINAKARAN
Leave a comment