அழுத்தங்கள், விமர்சனங்களுக்கு அடிபணியாது மு. கா தலைவர் எடுத்த முடிவிற்கு வரவேற்பு

கட்சி நலனை விடவும் சமூக நலனுக்கு முன்னுரிமை;

புரிந்துணர்வுடனான விட்டுக்கொடுப்புகளுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு!

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியமை அந்த இயக்கம் தமது கட்சி நலன் சார்ந்த விடயங்களை விட சமூக நலனுக்கே முன்னுரிமை வழங்கியுள்ளதை எடுத்துக்காட்டி யுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எத்தனையோ அழுத்தங் கள், விமர்சனங்கள் மற்றும் உட்கட்சிப் போராட்டங்க ளுக்கு மத்தியில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட இந்த முடிவு காலோசிதமானது என அவர்கள் கூறுகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைத்து தமக்கு முதலமைச்சர் பதவியையும் ஏனைய அமைச்சுப்பதவிகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருந்தபோதும் கிழக்கு மக்க ளையோ, அல்லது தனது கட்சி அங்கத்த வர்களையோ மட்டும் கவனத்திற் கொள்ளாது வடக்கு – கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த நலனையும் கருத்திற்கெடுத்து மேற்கொண்ட இந்த தீர்க்கமான முடிவு சமூக நலனில் அக்கறை கொண்டவர்களால் பெரிதும் சிலாகிக்கப்படுகின்றது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளபோதும் முஸ்லிம் காங்கிரஸ் மசூராவின் அடிப்படையில் தலைவர் ஹக்கீமுக்கு வழங்கிய அதிகாரத்தி லிருந்து பிறந்ததே இந்த முடிவெனவும் தனி யொருவர் மீதான விமர்சனமாக இதனைப் பார்க்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கூட்டமைப்புடன் மு.கா ஆட்சியமைக்க வேண்டுமென ஹக்கீமுக்கு மிகவும் நெருக்கமான, விசுவாசமான உயர்பீட உறுப்பினர்கள் அழுங்குப் பிடியாக நின்றபோதும், முடிவெடுக்கும் அதிகாரம் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டது. மு.கா தலைவர் எழுந்தமானமாக, எதேச்சாதிகாரமாக இந்த முடிவை மேற்கொள்ளவில்லை. கட்சியின் பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களும் பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த முடிவு அவரால் மேற்கொள்ளப்பட்டமையை கட்சி ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களும் முஸ்லிம்களும் வடக்கு – கிழக்கில் இறுக்கமான பிணைப்புடன் வாழ்ந்துவந்தாலும் அவர்களின் அரசியல் அபிலாஷைகள் வேறு பட்டவை. எனவே முஸ்லிம்களின் தலைவர்கள் எடுக்கும் முடிவுகள் குறித்து தேவையற்ற விமர்சனங்களை வெளியிட்டு இரண்டு சமூக ஒற்றுமைக்கும் குந்தகமாக இருப்பது நல்லதல்லவென்ற கருத்தும் நிலவுகின்றது.

தார்மீக மற்றும் அரசியல் காரணங்களால் ஐ.ம.சு.முன்னணிக்கு ஆதரவளிப்பதற்கு மு.கா தீர்மானித்ததாக அக்கட்சியின் தலைவர் ஹக்கீம் தெரிவித்த கருத்து மிகவும் உன்னிப்பாக அரசியல் வட்டாரங்களில் நோக்கப்படுவதுடன் கூட்டமைப்பு மு.கா வுக்கு முதலமைச்சர் பதவி வழங்க முன்வந்தபோதும் தாம் இந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது என அவர் குறிப்பிடுகின்றார்.

“எமது தீர்மானத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றமடைந்திருக்கலாம். எனினும் எதிர்காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் மு.கா சிநேகபூர்வமாக செயற்படும்” என்ற ஹக்கீமின் கூற்றானது தமிழ் மக்களுடனான புரிந்துணர்வு தொடர வேண்டியதன் அவசியத்தை கோடிட்டு காட்டுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

-தினகரன்

 

 

 

Published by

Leave a comment