கிழக்கில் ஐந்து வருடங்களுக்கும் நஜீப்பே முதலமைச்சர்!

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நஜீப் அப்துல் மஜீத்தே தொடர்ந்து 5 வருடங்களுக்கும் முதலமைச்சராகப் பதவி வகிப்பாரெனவும் எக்காரணம் கொண்டும் பதவி பங்கீடு செய்யப்படமாட்டாதென்றும் அரசின் அதி உயர் மட்டமொன்று நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

கிழக்கு முதலமைச்சர் பதவிக்கு, முதல் இரண்டரை வருடங்களுக்குத் தற்போதைய முதலமைச்சர் நஜீப்பும், மீதி இரண்டரை வருடங்களுக்கு மு.கா. உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்படுவர் என வெளிவரும் தகவல்கள் இந்த அறிவிப்பையடுத்து முடிவுக்கு வருகின்றன.

கிழக்கு முதல்வராக மீதி இரண்டரை வருடங்களும், மு.கா. தனது கட்சி மாகாணசபை உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமதை முன்மொழிந்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இது தொடர்பில் ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு உத்தியோகபூர்வமாக அரசு எடுத்துக்கூறியிருப்பதாகவும், அதனை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளை மட்டும் வழங்குவது குறித்தே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதை விடுத்து வேறு எந்தவொரு இணக்கப்பாடும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அந்த உயர்மட்டம் குறிப்பிட்டுக் காட்டியது.

மாகாண முதலமைச்சர்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பானவர்களே நியமிக்கப்படுவர் என்பது சுதந்திரக் கட்சியின் கொள்கை என்றும் இது அனைத்துத் தரப்பினருக்கும் தெரிந்த விடயமென்றும் அந்த உயர்மட்டம் மேலும் சுட்டிக்காட்டியது.

அதேவேளை, கிழக்கு அமைச்சரவையில் தமிழர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக அரசு அதி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது எனத் தெரியவருகின்றது. தமிழர் சார்பில் அமைச்சரவையில் ஒருவர் அங்கம் வகிப்பதன் அவசியத்தை கிழக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், அரசிடம் வலியுறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமைச்சுப் பதவியை தான் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் உறுதியாக அரசிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

-tamilwin

 

 

 

Published by

Leave a comment