குடும்பவியலும் நபி(ஸல்) அவர்களும்

எந்த ஒரு மதமும், எந்த ஒரு சமயமும், இன்றுவரை தராத பற்பல உரிமைகளையும், கடமைகளையும் 1431 வருடங்களுக்கு முன்பே மனித சமுதாயத்திற்கு வாரி வழங்கிய ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம்.

குழந்தை வளர்ப்பாக இருந்தாலும் சரி, திருமணம், பெற்றோரை பேணுதல், அண்டை வீட்டாருடன் நல்லுறவு பேணுதல் இப்படி எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அதைப்பற்றிய தெளிவான, சிந்தனையை மக்களுக்கு வழங்குகிறது இஸ்லாம். இந்த இஸ்லாமிய சட்டங்களையும் போதனைகளையும் எடுத்துக்கூறியது மட்டுமல்லாமல் நபி(ஸல்)அவர்கள் தங்களுடைய வாழ்க்கையிலும் இவற்றை நடைமுறைபடுத்திக் காட்டினார்கள்.

குழந்தை வளர்ப்பு:

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் முதலில் பரிச்சயம் ஆவது தாயிடம்தான் அதாவது அந்த தாய் குழந்தையை பத்து மாதம் சுமந்து, இரண்டு வருடங்கள் பாலூட்டி, சீராட்டி வளர்க்கிறாள், அந்தக் குழந்தைகள் வளர்ந்து பாலகப் பருவத்தை அடைந்தவுடன் இறைவனைப் பற்றிய சிந்தனையை ஊட்டி வளர்க்க, குழந்தைகள் நல்ல அறிவுமிக்கவர்களாகவும், சீரிய சிந்தனையுடையவர்களாகவும் வளர்ந்து வருவார்கள்.

ஏழு வயதில் உங்களின் குழந்தைகளை தொழ ஏவுங்கள் பத்து வயதில் (தொழவில்லையானால்) அடியுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரி)

குழந்தைகளிடம் மென்மையான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று பணிக்கிறது இஸ்லாம். குழந்தைகளின் உள்ளங்களில் நேர்மை, உண்மை இவற்றின் விதைகளை தூவ வேண்டும். இதன் மூலமாக அவர்கள் உண்மை பேசக்கூடியவர்களாக, உண்மை வழி நடப்பவர்களாக, தங்களுடைய நாக்கிலும், வாக்கிலும் உண்மை மிக்கவர்களாக திகழ்வார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், ஒருமுறை என்னுடைய தாயார், நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருக்கும் போது என்னை அழைத்தார்கள் என்னிடம் உனக்கொன்று தரப்போகிறேன் என்று கூறினார்கள், உடனே நபி(ஸல்) அவர்கள் நீங்கள் என்ன தரப்போகிறீர்கள் என்று கேட்டார்கள் அதற்கு என் தாயார் பேரித்தம்பழம் என்று சொன்னார்கள், நீங்கள் அதைக் கொடுக்கவில்லை என்று சொன்னால், நீங்கள் பொய் கூறிவிட்டீர்கள் என்று உங்கள் பதிவேட்டில் எழுதப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம்: அபூதாவூது)

பெருமானர்(ஸல்) அவர்கள் குழந்தைகள் நேர்மையோடும் வாய்மையோடும் வளர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவும், பொய்யை அவர்கள் வெறுக்கும் வண்ணம் வாழ வேண்டும் என்பதற்காக எவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

திருமணம்:

இஸ்லாம் சொல்லித்தருவது போல் மிக எளிமையான திருமண முறைகளை உலகில் எந்த கொள்கையும் சொன்னது கிடையாது. மணம் முடிக்க காத்திருக்கும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ இல்வாழ்க்கையை தேர்வு செய்யும்போது இன்று பலவிதமான அளவுகோல்கள் வைக்கப்படுகின்றன. பணம், பதவி, குலம், கோத்திரம், அழகு இவைகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. நன்னடத்தை உள்ள மணமகளை அல்லது மணமகனை தேர்வு செய்வதில் கவனம் எடுப்பதில்லை.

நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள், நீங்கள் மணமகளை தேர்வு செய்யும்போது நன்னடத்தையுள்ள பெண்ணை தேர்வு செய்து வெற்றி பெற்று கொள்வீராக. அறிவிப்பாளர் அபூஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

நன்னடத்தையுடைய பெண்ணை திருமணம் செய்வதன் மூலம், இவ்வுலக வாழ்வில் மட்டுமில்லாமல், மறுவுலக வாழ்விலும் வெற்றி பெற முடியும். அதுபோன்று, ஒரு பெண்ணைத் திருமணம் முடிப்பதாக இருந்தால், அந்தப் பெண்ணுக்கு ஆண்மகன் மஹர் என்னும் மணக்கொடையை வழங்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது இஸ்லாம்.

நீங்கள் மணமுடிக்கும் பெண்ணுக்கு மஹர் தொகையை மகிழ்வுடன் கொடுத்து விடுங்கள் (அல்குர்ஆன் 4: 4)

இங்கு வரதட்சனை என்ற பேச்சு அடிப்பட்டு போகிறது.

கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்வதைப் பல்வேறு சமயங்கள் தடை செய்துள்ளன, அதையும் மீறி திருமணம் முடித்தால் அவர்களை கேவலமானதுகளைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள், இதன் காரணத்தினால், பல இளவயது விதவைகள் விபச்சாரம் போன்ற பல தவறான வழிகளுக்குச் சென்று விடுகின்றார்கள் இதற்கும் இஸ்லாத்தில் தீர்வு இருக்கிறது.

கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் உரிமையை இஸ்லாம் 1431 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியிருக்கிறது. வேறு எந்த சமயமும் சிந்தித்துக்கூடப் பார்க்காத கால கட்டத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் செய்தும் காட்டினார்கள். விதவைப் பெண்ணான, தன்னைவிட வயதில் மூத்த கதீஜா(ரலி) அவர்களை திருமணம் செய்து காட்டினார்கள்.

அதே போன்று திருமணங்கள் மிகக்குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால் இன்று திருமணங்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன! ஒரு நிகழ்ச்சிக்காக எண்ணற்ற துணை நிகழ்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டு, நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான நபர்களை விருந்துபசாரம் என்ற பெயரில் பல இலட்சங்களை வீணடிப்பதைப் பார்க்கின்றோம்.

ஆனால் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், யாருடைய திருமணம் மிக எளிமையான முறையில் நடத்தப்படுகிறதோ, அதில்தான் பரக்கத் உள்ளது. அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) அவர்கள், ஆதாரம் அஹ்மத்.

குடும்ப அமைப்பும் சமுதாய அமைப்பும் சீருடனும், சிறப்புடனும் இருக்க வேண்டுமெனில், இஸ்லாம் கூறக்கூடிய முறைப்படி வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பெற்றோரைப் பேணுதல்:

ஒரு மனிதன் ஸாலிஹான நல்லொழுக்கம் உடையவனாக இருக்கின்றானா? இல்லையா? என்பதை அவன் தன் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை வைத்து கண்டு கொள்ளலாம்.

வயோதிகம் இறைவிதிப்படி மனிதனுக்கு ஏற்படுகின்ற ஒரு இயல்பான நிலை, இதில் எந்த மனிதனும் விதிவிலக்கல்ல. இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான். உங்களுடைய பெற்றோரை நீங்கள் ‘சீ’ என்றும் கூறிவிடாதீர்கள்.

இறைவன் இவ்வாறு கூறியிருக்க இன்று சமுதாயத்தில் என்ன நடக்கிறது? பெற்றோர்கள் முதிய வயதை அடைந்தவுடன், அவர்களை முதியோர் இல்லங்களிலும், டிரஸ்ட்களிலும், விட்டுவிடுகின்றனர். தங்களுடைய பெற்றோர்கள் தங்களை இந்த அளவிற்கு உயர்வான, மதிப்பிற்குரிய மனிதர்களாக உருவாக்கினார்களே என்பதைக்கூட மறந்து அவர்களைக் கீழ்த்தரமாக, மரியாதைக்குறைவாக, மிகக்கொடூரமாக நடத்துவதை நாம் தினமும் கண்டும், கேட்டும் வருகிறோம்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், முதிய வயதுடைய பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவரோ இருந்தும் சுவர்க்கம் நுழைய முடியாமல் போன மனிதரின் மூக்கு நாசமாகட்டுமாக. (முஸ்லிம்)

பெற்றோர்களை நல்லமுறையில் கவனித்து, அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்வதன் மூலம் ஜிஹாது செய்த நன்மையை அடையமுடியும் என்பதைக் கீழ்காணும் ஹதீது நமக்கு உணர்த்துகிறது.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து போர் புரிய அனுமதி கேட்டார்கள், அப்போது பெற்றோர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது ஆம் என்று பதில் கூறினார்கள் அப்படியானல், அவ்விருவருடனும் நல்லமுறையில் நடந்து (அவர்களுக்கு பணிவிடை செய்து) ஜிஹாது செய் என்று கூறினார்கள் (முஸ்லிம்)

உறவினர்களை பேணுதல்:

உறவை முறித்துக் கொள்வதையும், பகைமையை வளர்த்துக் கொள்வதையும், இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. மனித உறவுகளுக்கிடையே ஏற்படக்கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள் நாளடைவில் பெரிய பூகம்பமாக வெடித்து உறவுகளுக்குக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன.

மனித உறவுகளுக்கிடையில் ஒரு கசப்பான உண்மை என்னவெனில், ஒரு மனிதன் சிறிதளவே வரம்புமீறி நடந்து கொண்டான் என்றாலும் அதை நம் மனது ஏற்க மறுக்கிறது, வேதனைப்படுகிறது அதோடு அந்த மனிதரோடுள்ள எல்லா தொடர்புகளையும் அறுத்து எறிந்து விடுகிறோம்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள், உறவுகளை அறுத்துக் கொள்ளாதீர்கள், ஒருவருக்கொருவர் பகைமையை வளர்த்திடும் விவகாரங்களில் ஈடுபடாதீர்கள் ஒருவொருக்கொருவர் பகைமையையும், கோபத்தையும், காழ்ப்புணர்வையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள், பொறாமை கொள்ளாதீர்கள் நீங்கள் ஒருவொருக்கொருவர் சகோதரர்களாக இருங்கள் அல்லாஹுடைய அடிமையாய் வாழுங்கள் ஒருவர் தன் சகோதரனோடுள்ள உறவை மூன்று நாட்களுக்கு மேல் துண்டித்து இருந்திட அனுமதியில்லை. (புகாரி)

இப்படி அழகிய அறிவுரைகளையும், அழுத்தமான கட்டளைகளையும் வழங்கி இஸ்லாம் காழ்ப்புணர்வுகளை, பகைமையை, பூசலை, உறவு முறையில் விழும் ஊனங்களை தடுக்கிறது. இறைவன் கூறுகின்றான். (மேலும்) உங்கள் இரத்தக்கலப்புடைய உறவினர்களை (துண்டித்து விடுவதிலிருந்து) நீங்கள் அல்லாஹுக்கு பயந்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 4: 1)

உறவுகளை வெட்டி வாழ்வது ஒரு மானக்கேடான செயல் எனவே இவ்விஷயத்தில் அல்லாஹுக்கு அஞ்சி உறவுகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். உறவு என்பது அர்ஷை பிடித்துக் கொண்டு, என்னை இணைத்துக் கொள்பவரை இறைவன் இணைத்துக் கொள்வான், என்னை பிரித்து விடுபவரை அல்லாஹ்வும் பிரித்து விடுவான் என்று கூறும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

யார் உறவைப் பேணி அவர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்கிறார்களோ அவர்களுடன் இறைவனும் நேசம் பாராட்டுகின்றான் அப்படியில்லாதவர்களுடன் இறைவனும் உறவை முறித்துக் கொள்வான் என்ற முக்கிய செய்தியை இந்த நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.

அண்டைவீட்டார் நலம் பேணுதல்:

இன்று மனிதன் இன்டெர்நெட் மூலம் தொலைதூர நாடுகளுக்கெல்லாம் நொடிப்பொழுதில் தொடர்பு கொள்கின்றான் ஆனால் தன் பக்கத்து வீட்டில் வசிப்பவர் யாரென்றுக்கூடத் தெரியாத அவலநிலையில்தான் போய்க் கொண்டிருக்கிறது மனித வாழ்க்கை. ஆனால், இதை இஸ்லாம் விரும்புவதில்லை, அண்டை வீட்டாருடன் நல்லுறவு பேண வேண்டும் அவர்களுடைய சுக துக்கங்களில் பங்கு பெற வேண்டும் அவர்களிடம் அன்னியோன்னியமாக பழக வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

(பக்கத்து வீட்டார்) எனக்கு வாரிசாக ஆக்கப்பட்டு விடுவாரோ என நான் எண்ணுமளவிற்கு பக்கத்து வீட்டார் பற்றி எனக்கு ஜிப்ரயீல்(அலை) அவர்கள் உபதேசம் செய்து கொண்டேயிருந்தார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

அதே போல, பக்கத்து வீட்டிற்கு ஒரு பொருளை அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தாலும், நாம் எதை விரும்புகிறோமோ அதைத்தான் கொடுக்க வேண்டும். எந்தப் பொருளை கொடுத்தாலும் அதை அற்பமாக கருதக் கூடாது. நபி(ஸல்) அவர்கள் அண்டை அயலாருடன் சகஜமாக கொடுத்து வாங்கி நல்லுறவு பேணுமாறு அறிவுறுத்துகிறார்கள்.

முஸ்லிம் பெண்களே ஒரு பக்கத்து வீட்டுப் பெண் மற்றொரு பக்கத்து வீட்டுப் பெண்ணை இழிவாக எண்ணிட வேண்டாம், ஒரு ஆட்டின் குழம்பாயினும் சரியே! (அதையும் வழங்கலாம்) என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அண்டை வீட்டாருடன் நல்லமுறையில் பழக வேண்டும் அவர்களுக்கு எவ்விதத்திலும் ஒரு முஸ்லிம் தொல்லை தரக்கூடாது அண்டை அயலாருடன் பகைமையோடும், அச்சத்தோடும் ஒரு மனிதனால் வாழவே முடியாது. மனிதனுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பில் சிறந்தது அண்டை அயலாரின் பாதுகாப்பே ஆகும் அதை ஒருபோதும் இழக்கக்கூடாது.

மேற்கூறிய விஷயங்கள் அனைத்தையும் நம் வாழ்வில் கடைப்பிடித்து நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிப்படி நடந்து, ஈருலகின் பேற்றையும் அடைய அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக!.

(சுவனப்பாதை மாத இதழ் நடத்திய உலகளாவிய எழுத்துப் புரட்சி போட்டியில் (ஹிஜ்ரி 1430) ஆறுதல் பரிசு பெற்ற கட்டுரை)

 

 

 

Published by

Leave a comment