கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீட்: மரம் கொடுத்த பழம்!

-MJ

கிழக்குமாகாணசபைத் தேர்தல் இடம்பெற்ற சுமார் ஒருவாரத்தின் பின்பு நேற்றைய இலங்கை அரசியல் வட்டாரத்தில் உலாவிய விடயம் கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பாகும். இந்தவகையில் திருகோணமலை சுதந்திரக்கட்சி அமைப்பாளரும் மூத்த அரசியல்வாதியுமான நஜீப் ஏ. மஜீட் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

என்னதான் ஆளும் கட்சியினர் வெற்றி பெற்ற போதிலும், கிழக்கு மாகாணம் தமிழ் முஸ்லிம்களின் தனித்துவ செல்வாக்கில் இன்னும் இருப்பதை இத்தேர்தல் முடிவுகள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமைப்பதனால் அக்கட்சிக்கு இரண்டு மாகாண அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாகவுள்ள இரண்டு மாகாண அமைச்சு பதவிகளில் ஒன்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் விமலவீர திசாயக்கவிற்கு வழங்கப்படும் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் ஆகிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவூப் ஹக்கீமை விமர்சித்தவர்கள், அவரது ஆதரவாளர்களை விமர்சித்தவர்கள் இன்று வாய்மூடி இருக்கின்றனர். ஏனெனில் அரசாங்கக் கட்சி பிரதிநிதி என்பதால் இவரை விமர்சிப்பதற்கு தனிநபரோ ஊடகங்களோ முன்வராது. ஹக்கீமை விமர்சிப்பவர்கள் ஜனாதிபதியை விமர்சிப்பதில்லை. அது ஊடகங்களுக்கு முடியாது! எனவேதான் மரம் கல்லடிபட்டுக்கொள்வது போன்று பழிகளையும் சொற்பிரயோகங்களையும் ஹக்கீம் தாங்கி வந்தார். இன்று அரசாங்கத்துடன் சமமாக நின்று பேரம் பேசுகின்ற அளவுக்கு அவரது செல்வாக்கு நிலைத்திருப்பதானது இன்று உலகுக்கு உண்மையைப் பறைசாற்றிச் செல்கின்றவிடயமாக இருக்கின்றன.

எனவே தற்பொழுது நியமிக்கப்பட்டிருக்கின்ற நஜீப் அவர்கள் சிறுபான்மை இனத்துக்கு எத்தகைய உரிமைகளைப் பெற்றுக் கொடுத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றப் போகின்றார் என்பதை கிழக்கு மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

ஒரு வாரமாக அலரிமாளிகையில் இருந்த அமளிதுமளிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கின்றன. வெற்றிலைக் கொடிக்கு மரம் தோள் கொடுத்துள்ளது. மரத்தில் கணிந்திருக்கும் பழமாக இன்றைய முதலமைச்சர் இருக்கின்றார். அவர் இனிமையாக மக்களை மகிழ்வித்துச் செல்லக்கூடிய சேவைகளை கிழக்கு மண்ணுக்கு துளிர்ப்பிக்கச் செய்யவேண்டும் என்பதைக் கேட்டுக் கொள்கின்றோம்.

 

 

 

Published by

Leave a comment