– வீரகேசரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் காத்தான்குடி முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் பிறிதொரு தினத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
சமகால அரசியல் விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்தான்குடியிலுள்ள முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை இன்று மாலை 5மணிக்கு காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள தாஜ் பிளாஸா ஹோட்டலில் சந்திக்க இருந்தது.
குறித்த நேரத்துக்கு காத்தான்குடியிலுள்ள சமூக மதிப்புக்கான மக்கள் ஒன்றியம், காத்தான்குடி தவ்ஹீத் கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் வருகைதந்திருந்தனர். தமிழ்த்; தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் குறித்த நேரத்துக்கு வருகைத் தராத காரணத்தால் சில அமைப்புக்களின் பிரதிநிதிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.
ஆறு மணியளவில் தமிழ்த்; தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்துரையாடல் நடைபெறும் இடத்துக்கு வருகைதந்திருந்த வேளை கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்ட சில அமைப்புக்களின் பிரதிநிதிகள் அங்கிருக்கவில்லை அதனால் கலந்துரையாடல் இடம்பெறவில்லை.
குறித்த விடயம் தொடர்பாக அங்கிருந்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் கருத்துத் தெரிவித்த த.தே.கூ. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன,; முதலில் நாங்கள் குறித்த நேரத்துக்கு வராததால் நாங்கள் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றோம்.
எங்களுடைய கட்சியில் இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதனால் நாங்கள் அவர் சம்பந்தமாக கவனம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் எங்களுக்கு உரிய நேரத்திற்கு சமுகந்தரமுடியவில்லை.
இதனையடுத்து குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
![D054205[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/d0542051.jpg?w=530&h=397)
Leave a comment