எதிர்ப்பு ஆர்ப்பாட்ட எதிரொலி: சென்னை அமெரிக்க தூதரக விசா பிரிவு மூடல்

முகம்மது நபியைத் தவறாக சித்தரிப்பதாகக் கூறப்படும் ஆங்கிலத் திரைப்படத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதன் பின்னணியில், சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் விசா வழங்கும் பிரிவு இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திங்களும் செவ்வாயும் விசாக்கள் வழங்கப்படமாட்டாது. இவ்விரு நாட்களில் விசா தொடர்பாக விவாதிக்கவென அழைக்கப்பட்டிருந்தவர்களுக்கு புதிய தேதிகள் அறிவிக்கப்படும்.

அமெரிக்க குடிமக்களுக்கு ஏதாவது அவசரத் தேவையிருக்குமானால் அவை கவனிக்கப்படும் என துணைத் தூதரகத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்ப்பாட்டங்கள் தொடரும் நிலையில் தற்காலிகமாகவாவது விசா பிரிவை மூடிவைப்பது தவிர்க்க இயலாதது, ஆயினுங்கூட விசா கோருபவர்களுக்கு அதிக சிக்கலில்லாமல் பார்த்துக்கொள்ளப்படும் என துணைத் தூதரகம் சார்பாக பேசவல்ல ஓர் அதிகாரி குறிப்பிட்டார்.

நாளொன்றுக்கு ஆயிரம் பேர் வரை விசா கோருபவர்கள் துணைத் தூதரகத்திற்கு வருகின்றனர்.

முன்னதாக அமெரிக்க குடிமக்கள் சென்னையில் பயணம் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென துணைத் தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது.

சென்னை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள துணைத் தூதரகத்தின் முன் கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தியதில் கற்கள் வீசப்பட்டு சில கண்ணாடிகள் சேதமடைந்தன. அதன் பிறகு அங்கே பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.

மறுநாள் தௌஹீத் ஜமாத் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது போக்குவரத்து சில மணி நேரம் ஸ்தம்பித்தது.

திங்களன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த படத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

-BBC/Tamil

 

 

 

Published by

Leave a comment