-SHM
குறித்த மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரமாகியும் கிழக்கின் முதலமைச்சர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெற்றிபெற்ற அரசாங்கம் ஆட்சியமைக்க முடியாத துரதிஷ்ட நிலையில் இருப்பது, கிழக்கில் தமிழர்களினரதும் முஸ்லிம்களினரதும் செல்வாக்குகள் எந்தளவுக்கு இன்னும் தனது சமூகங்களின் தனிப்பட்ட அரசியலில் செல்வாக்குச் செலுத்திவருகின்றன என்பதை உலகம் இன்று அறிந்து கொண்டுள்ளது.
கடந்த தேர்தல் காலத்தில் நீயா-நானா என எதிர்த்திசைகளில் இருந்து வந்த ஆளும் அரசாங்கமும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இன்று உலகின் கவனத்தைத் திருப்பி இருக்கின்றது. தற்பொழுது தேனும் பாலும் போல் இனிமையான பேச்சுக்கள் அலரி மாளிகையில் இடம்பெற்று வருகின்றன. இது முஸ்லிம் சமூகத்தின் வெற்றியை கிழக்கில் பறைசாற்றுகின்றது.
ஆளும் கட்சியிலிருக்கும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள் இன்னும் வாய் திறக்காமல் மௌனம் காப்பதானது, அவர்களுக்கும் இவ்விடயத்தின் சிரமம் தெரிகிறது. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பது போல உண்மையை, தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொன்டு அரசியல் அனுபவத்தால் அவர்கள் நடப்பதை கண்கானித்து வருகின்றனர். இவர்கள் கொக்கரிக்கவில்லை! உண்மையை அறிந்தவர்கள். தனக்கும் இந்நிலை ஏற்பட்டால் தாங்களும் பேரம் பேசவே முயற்சிப்போம் என்பதை உணர்ந்தவர்கள்!
ஒன்று ஆளும் கட்சி எவருக்காவது போகட்டும். அல்லது தமிழர் ஒருவருக்குக் கிடைக்கட்டும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் ஒருவருக்குப் போகக்கூடாது என முதலமைச்சருக்காகக எத்தனை எத்தனை முயற்சிகள் உள்ளுர் பஞ்சாயங்களில நடக்கின்றன. அலரிமாளிகையாலேயே ஒருவாரமாகியும் முடிவில்ல! அதற்குள் இவ்வாறு கொக்கரிப்பவர்களின் பேச்சு எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை சுயநினைவோடு இவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்!
மாறாக தமிழரசுக்கட்சியினர் தனது திறந்த அழைப்பை முஸ்லிம் காங்கிரஸ் இற்கு ஏற்கனவே விடுத்திருந்தனர். இன்றும் இரு சமூகங்களின் அபிலாசைகளைப் பேசி வென்றெடுக்க தமிழரசு கட்சியினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தற்போதைய அரசியலில் ஜனாதிபதிக்கு தெரியாதது ஒன்றுமில்லை எனலாம். இருந்தும் ஒருவாரமாக நிதானப்போக்குடன் ஜனாதிபதி அவர்கள் காய் நகர்த்தி வரும் இவ்விடயம் இலகுவானதல்ல என்பதாகவே ஏற்கனவே நாம் கூறியிருக்கின்றோம். வெற்றி பெற்றால் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவருக்கு முதலமைச்சரை வழங்கிவிட்டுப் போகலாம். எனினும் இச்சங்கடமான நிலையில் அரசு இரண்டுகாலையும் எடுத்து வைக்க முடியாத பரிதாப நிலையில் இருக்கின்றது.
அரசாங்கத்துக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான பேச்சுக்கள் சரிவந்தால் ஒன்றில் முதலமைச்சர் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியாக இருப்பார். அல்லது முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உயர் அமைச்சைக் கோரி பெற்றுக்கொள்ளும். இவ்விடயம் அரசுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிஸ் இன் ஆதரவாளர்களுக்குள்ள தனிப்பட்ட விடயமாகும்.
ஆனால் குறித்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸை தூற்றியவர்கள், விமர்சித்தவர்கள், காயப்படுத்தியவர்களெல்லாம் இன்று முஸ்லிம் சமூகம் பற்றி கூக்குரல் இடுவதும், குறித்த பேச்சுக்களை விமர்சிப்பதும், ரவூப் ஹக்கீம் அவர்களை தூற்றுவதும் இடம்பெற்று வருகின்றன. கல்லடி பட்டு வளர்ந்த மரம் முஸ்லிம் காங்கிரஸ். அதனை குஞ்சாந்தடியால் வீழ்த்த முடியாது.
முஸ்லிம் காங்கிரஸ் பிரிதிநிதி ஒருவருக்கு முதலமைச்சர் பதவி போனால் தங்களால் தாங்க முடியாது! விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்பது போல வென்றும் சாதிக்க முடியவில்லை அல்லது தோற்றும் ரோசம் வரவில்லை என்ற நிலையில் இவர்களின் கூக்குரல்கள் இன்று இடம்பெற்று வருகின்றன.
ஏழு இடங்களில் வெற்றிபெற்று இன்றைய ஆட்சியைத் தீர்மானிக்க எடுக்கப்பட்ட தியாகங்கள் கிழக்கு மண்ணில் கொஞ்ச-நஞ்மல்ல! அவை உதிரத்தை சிந்தி பெறப்பட்ட வெற்றிகள்! எனவே முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியைத் தெரிவு செய்வது அக்கட்சியின் விருப்பம். இதனை விமர்சித்து வேடிக்கை பார்ப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை!
ஆளும் கட்சியில் ஒருவருக்கு முதலமைச்சர் கிடைத்தால் பட்டாசுகளும் ஊர்வலங்களும் வலம் வரும். இதனை விமர்சிப்பதற்கு யாருமில்லை! ஆனால் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து முதலமைச்சராக எவரும் வரக்கூடாது என்ற குறுகிய மனப்பான்மையும் பச்சோந்தித்தன்மையும் ஓர் ஆராக்கியமான சமூதாயத்திற்கு தடைக்கற்களாகும்.
எனவே என்னதான் பொறாமையால் கொக்கரித்தாலும் ஆட்சியை தீர்மானிப்பது அல்லாஹ் ஒருவனே! எனவே அவன் நாடியபடி அனைத்தும் இடம்பெறும். எக்கட்சியிலிருந்து யார் முதலமைச்சராக நியமிக்கப்பட்டாலும், அவர் சிறுபான்மை சமூகத்துக்காக எழுந்து துணிந்து குரல்கொடுக்கவல்ல-முதுகெலும்புள்ள ஒருவாரக அமையட்டும். அதுவே எமது அவாவாகும்.
Leave a comment