‘தேசிய அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி அழைக்கட்டும் பார்ப்போம்’

கிழக்கு மாகாணசபையில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான அழைப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேரடியாக விடுத்தால் அதுபற்றி பரிசீலனை செய்யத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று சனிக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு பதிலளித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு பதிலளித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக விடுத்துவரும் அழைப்புக்கு இன்னும் பதில் கிடைக்காத நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்தக் கருத்தினைக் கூறியுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் நடந்து ஒரு வாரமாகியும் இன்னும் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

முடிவை எடுக்கவேண்டிய நிலையில் இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறிவருகின்றது.

இந்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று மாலை நடக்கவிருந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் முஸ்லிம் காங்கிரஸ் தம்மை காக்கவைத்து பதில்கூறாமலேயே விட்டுவிட்டதாக தமிழ்க்கூட்டமைப்பு தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

‘முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகள் அரச கூட்டணிக்கு எதிரானவை’

இந்த நிலையில் கொழும்பில் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்கும் நிலைப்பாட்டிலேயே தாம் தொடர்ந்தும் இருப்பதாக கூறினார்.

ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் காலத்தில் மக்களுக்கு பிரசாரம் செய்தமைக்கு ஏற்ப முஸ்லிம் மக்களுக்கு சார்பான சரியான முடிவை எடுக்கவேண்டும் என்றும் அதற்காக தாம் காத்திருப்பதாகவும் சம்பந்தன் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்த வாக்குகள் அரசாங்க கூட்டணிக்கு எதிரானவை என்பதை கருத்தில் கொண்டு அந்தக்கட்சி தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தமது கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிலும் அரசாங்கத்துடன் சேருமாறு அச்சுறுத்தும் நடவடிக்கையிலும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறுவோர் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார்.

அவ்வாறே, தமிழ் மக்கள் இன்னும் போர்க்கால பாதிப்புகளிலிருந்து மீளவில்லை என்றும் அதனாலேயே கிழக்குத் தேர்தலில் எதிர்பார்த்தளவுக்கு வாக்குப்பதிவுகள் நடக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியமை குறிப்பிடத்தக்கது.

BBC/Tamil

 

 

 

Published by

Leave a comment