முஸ்லிம் காங்கிரஸின் ஏகமனதான ஆதரவுடன் ஐ.ம.சு.மு. கிழக்கில் ஆட்சியமைக்கும்: அரசாங்கம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏகமனதான ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கும். முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வார இறுதியில் தீர்மானித்து அறிவிப்பார். அடிப்படையற்ற வதந்திகள் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மூன்று மாகாண சபைகளிலும் அரசாங்கம் அடைந்துள்ள வெற்றியானது இலங்கைக்கு எதிரான தேசிய மற்றும் சர்வதேச எதிரிகளுக்கு வழங்கப்பட்ட பதிலடியாகும். இனி ஆளும் கட்சியை அசைக்க எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமல்ல, அவரது கட்சியின் பிரதித் தலைவர சஜித் பிரேமதாஸாவுக்கும் முடியாது என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு, மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அராங்கத்தின் விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வியை முன்பிருந்தே அக்கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் முயற்சித்தனர். ஆனால் அவை கைக்கூடாத நிலையில் பாரியளவிலான தோல்வியினை ஐ.தே.க. சந்தித்துள்ளது. கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல்களை தேசிய கருத்துக் கணிப்பாகவே அரசாங்கம் நோக்கியது.
இந்நிலையில் மூன்று மாகாண சபைகளிலும் ஆளும்கட்சிக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணை என்பது தேசியளவில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் முக்கியமானதாகவே காணப்படுகின்றது. இலங்கைக்கு எதிராகவும் உள்நாட்டில் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டன. இவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
குறிப்பாக கிழக்கு மாகாணசபையில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்துள்ளனர். இதனூடாக யுத்தத்தின் உண்மையான வெற்றியும் வெளிப்பட்டுள்ளது. எனவே பொது மக்களுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றக்கூடிய சிறந்த ஒரு முதலமைச்சரை கிழக்கு மாகாணத்துக்காக ஏனைய பங்காளி கட்சிகளுடனான சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார்.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியென்ற வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் அரசாங்கத்துக்கே ஆதரவு வழங்கும். இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
-வீரகேசரி

Published by

Leave a comment