கடந்த 08ம் திகதி சனிக்கிழமையன்று நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவில் பெரும் மோசடி இடம்பெற்றிருப்பதாக உடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அளிக்கப்பட்டிருந்த 4000 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மாற்றப்பட்டதாகவும், அதன் மூலம் விருப்பு வாக்குத் தெரிவில் பின்னடைந்து காணப்பட்ட முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு விருப்பு வாக்குகள் அதிகரிக்கப்பட்டு அவரை முன்னணிக்குக் கொண்டு வந்ததாகவும், இந்த மோசடியின் காரணமாக தமது கட்சிக்கு கிடைத்திருக்க வேண்டிய 7வது பிரதிநிதித்துவமும், அதனடிப்படையில் மாகாண மட்டத்தில் கிடைத்திருக்க வேண்டிய இரண்டு போனஸ் ஆசனங்களும் தடுக்கப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரமுகர்களாலும், ஊடகங்களிலும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம்.
இந்த நிலையில் காத்தான்குடியை மையப்படுத்தி இயங்கும் ஒரு இணையதளம் இக்கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆரம்பம் முதல் இறுதி வரையான எல்லாவிதத் தகவல்களையும், மேடைப் பேச்சுக்களையும், பேட்டிகளையும், காணொளிகளையும், அரசியல் ஆய்வுக் கட்டுரைகளையும், வாசகர்களின் கருத்துக்களையும் உடனுக்குடன் பிரசுரித்து வந்தது.
குறிப்பாக ‘மட்டக்களப்பு மாவட்டத்தின் 11 ஆசனங்களும் பகிரப்பட்ட விதம்’ பற்றியும் அந்த இணையதளம் அவசரமாகக் ‘கணக்கு’க் காட்டிய போதிலும் இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் எத்தனை வீதம்? என்பதை வாக்களிப்பு முடிவடைந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அதன் இணையதளத்தில் காண முடியாதிருந்தது என்பதையும் இப்பத்தியை வாசிப்பதற்கு முன்னர் நாம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
அந்த இணையதளம் மிக அவசர அவசரமாக பெரும் அக்கறையெடுத்துக் கொண்டு தெரிவித்திருந்த அந்த ஆசனப் பகிர்வு தொடர்பான ‘கணக்குக் காட்டல்’ இவ்வாறு அமைந்திருந்தது:
நேற்று இடம் பெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தலின்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 11 ஆசனங்களும் எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதை கிழ்வரும் விபரங்கள் அடிப்படையில் வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும்.
மாவட்டத்தில் அளிக்கப்பட்ட 223,159 மொத்த வாக்குகளில் இருந்து நிராகரிக்கப்பட்ட 17,223 வாக்குகளைக் கழிக்கின்றபோது கிடைக்கப்பெற்ற 205,936 செல்லுபடியான வாக்குகளுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 11 ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.
செல்லுபடியான 205,936 வாக்குகளை 11 ஆசனங்களால் பிரிக்கின்றபோது ஒரு ஆசனத்திற்கு 18,721 வாக்குகள் பெறப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கும்போது இலங்கை தமிழரசுக்கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 104,682 ஆகும். இவற்றிற்கு 18,721படி முதலாம் தெரிவில் 5 ஆசனங்களுக்கு 93,605 வாக்குகள் கழிக்கப்பட்டு மீதியாக 11,071 வாக்குகள் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு உள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் 64,190க்கு 18,721 படி 56,163 வாக்குகளுக்கு 3 ஆசனங்கள் கிடைக்கின்றது. கழிக்கப்பட்டு 8,027 வாக்குகள் மீதியாக உள்ளன.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்ட 23,083 வாக்ககளில் ஒரு ஆசனத்திற்குரிய 18,721 வாக்குகளுக்கு 1 ஆசனம் பெறப்பட்டு 4,362 வாக்குகள் மீதியாக உள்ளன.
சுயேட்சைக்குழு 08 நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பெற்றுக்கொண்ட 5,712 வாக்குகளில் 1 ஆசனம் பெறுவதற்கான 18,721 வாக்குகள் இல்லாததால் ஆசனங்கள் ஏதும் இவர்களுக்கு வழங்கப்படாத நிலையில் இவர்களிடம் 5,712 வாக்குகள் மீதியாக உள்ளன.
மேற்கூறப்பட்ட ஆசன ஒதுக்கின்படி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 5 ஆசனமும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 3 ஆசனமும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 1 ஆசனமுமாக மொத்தம் 9 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மீதியாக உள்ள 2 ஆசனங்களுகக்கான தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சியிடம் மீதியாக உள்ள 11,071 வாக்குகளுக்கு 1 ஆசனமும் இரண்டாவது மீதியாக உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 8027 வாக்குகளுக்கு ஒரு ஆசனமும் ஒதுக்கப்பபட்டுள்ளது.
இதன்படி மாவட்டத்திற்குரிய 11 ஆசனங்களும் வழங்கப்பட்டு விட்டன.
இரண்டாம் தெரிவின் போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸோ, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமோ ஆசனம் ஏதாவது பெற வேண்டுமாக இருந்தால் 8,027க்கு அதிகமான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.
இதன்படி பார்க்கும்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் 2,316 வாக்குகளை மேலதிகமாக பெற்றிருந்தால் மாத்திரமே ஒரு ஆசனத்தை பெற்றிருக்க முடியும்.
இதே போன்றே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2வது ஆசனத்தை பெறவேண்டுமாயின் 3,666 வாக்குகளை மேலதிகமாக பெற்றிருக்கவேண்டும்.
இவ்வாறு அந்த இணையதளம் கடந்த 09ம் திகதி இந்த ‘கணக்குக் காட்டல்’ விபரத்தை பிரசுரித்திருந்தது.
இப்போது நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4000 வாக்குகள் அரச தரப்புக்கு மாற்றப்பட்டதென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த நாலாயிரம் வாக்குகளையும் த.தே. கூட்டமைப்புக்குச் சேர்த்துக் கொண்டு இம்மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளை பின்வருமாறு கணக்கிட்டுக் கொள்வோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: 104,682 + 4,000 = 108,682 வாக்குகள்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: 64,190 – 4,000 = 60,190 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 23,083 வாக்குகள் (மாற்றம் எதுவும் இல்லை)
சுயேட்சைக்குழு – 08: 5712 வாக்குகள் (மாற்றம் எதுவும் இல்லை)
இப்போது அந்த இணையதளம் காட்டிய அதே கணக்குப் பாடத்தின்படி நாமும் ஒரு கணக்கைப் போட்டுப் பார்ப்போம்.
மாவட்டத்தில் அளிக்கப்பட்ட 223,159 மொத்த வாக்குகளில் இருந்து நிராகரிக்கப்பட்ட 17,223 வாக்குகளை கழிக்கின்றபோது கிடைக்கப்பெற்ற 205,936 செல்லுபடியான வாக்குகளுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 11 ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.
செல்லுபடியான 205,936 வாக்குகளை 11ஆசனங்களால் பிரிக்கின்றபோது ஒரு ஆசனத்திற்கு 18,721 வாக்குகள் பெறப்படவேண்டும்.
இதன் அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கும்போது இலங்கை தமிழரசுக்கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 108,682 ஆகும். இவற்றிற்கு 18,721படி முதலாம் தெரிவில் 5ஆசனங்களுக்கு 93,605 வாக்குகள் கழிக்கப்பட்டு மீதியாக 15,071 வாக்குகள் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு உள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் 60,190க்கு 18,721 படி 56,163 வாக்குகளுக்கு 3 ஆசனங்கள் கிடைக்கின்றது. அத்தொகை கழிக்கப்பட்டு 4,027 வாக்குகள் மீதியாக உள்ளன.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட 23,083 வாக்ககளில் ஒரு ஆசனத்திற்குரிய 18,721 வாக்குகளுக்கு 1 ஆசனம் பெறப்பட்டு 4,362 வாக்குகள் மீதியாக உள்ளன.
சுயேட்சைக்குழு 08 நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பெற்றுக்கொண்ட 5,712 வாக்குகளில் 1 ஆசனம் பெறுவதற்கான 18,721 வாக்குகள் இல்லாததால் ஆசனங்கள் ஏதும் இவர்களுக்கு முதல் சுற்றில் வழங்கப்படாத நிலையில் இவர்களிடம் 5,712 வாக்குகள் மீதியாக உள்ளன.
மேற்கூறப்பட்ட முதலாம் சுற்று ஆசன ஒதுக்கீட்டின்படி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 5 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 3 ஆசனங்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 1 ஆசனமுமாக மொத்தம் 9 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மீதியாக உள்ள 2 ஆசனங்களுக்கான தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சியிடம் மீதியாக உள்ள 15,071 வாக்குகளுக்கு 1 ஆசனம் வழங்கப்பட்டதோடு, இரண்டாவது மீதியாக 5,712 வாக்குகளைக் கொண்டுள்ள சுயேட்சைக்குழு – 08க்கு இறுதி ஆசனமுமாக 11 ஆசனங்களும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4,000 வாக்குகள் ஆளுந்தரப்புக்கு ‘ஆசியாவின் ஆச்சரியமாக’ மாறியதால்தான் இந்த உண்மையான நிலவரம் தேர்தல் முடிவில் ஏற்படவில்லை.
இந்த உண்மையைப் புதைப்பதற்காகத்தானோ என்னவோ எந்தத் தேர்தலிலும் இல்லாதவாறு இந்தத் தேர்தலில் மாத்திரம் அந்த இணையதளம் 11 ஆசனங்களும் பகிரப்பட்ட விபரக் கணக்குப் பாடத்தையும் முதல் தடவையாகச சிரமம் பாராது நமக்கெல்லாம் கற்பித்திருந்தது.
மேற்குறிப்பிட்ட கணக்கின் அடிப்படையில் மூன்றாவது மீதி வாக்குகளாக ஸ்ரீ.ல.மு.கா.வுக்கு 4,362 வாக்குகளும், நான்காவது மீதி வாக்குகளாக ஐ.ம.சு. முன்னணிக்கு 4,027 வாக்குகளுமே இருந்திருக்க வேண்டும்.
ஆனால் அந்த ‘அதிர்ஷ்டகரமான 4,000 வாக்குகள்’ ஆளுந்தரப்புக்கு இறுத நேரத்தில் திசை மாறியதால் நான்காவது மீதியில் இருந்த ஐ.ம.சு. முன்னணியின் 4,027 வாக்குகளோடு இந்த நாலாயிரமும் சேர்ந்து 8,027 ஆகி சுயேட்சைக் குழுவுக்கு வர வேண்டியிருந்த கடைசி ஆசனத்தைத் தட்டிப் பறித்துக்கொண்டு போய் விட்டது.
வாழ்க நம் தேசத்தின் ஜனநாயக விகிதாசாரத் தேர்தல்!
-வார உரைகல்
Leave a comment