ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு 15 வரை தடை

தேர்தல் முடிவடைந்த போதிலும் மூன்று மாகாண சபைகளிலும் ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண கூறினார். கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்தி ஆகிய மூன்று மாகாண சபைகளிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் தேர்தலுக்குப் பின்னரான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கென மூன்று மாகாணங்களையும் சேர்ந்த 108 பொலிஸ் நிலையங்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இக் காலப் பகுதிக்குள் வெற்றிக்களிப்பினைக் கொண்டாடும் வகையிலோ அல்லது எதிர்ப்பினைத் தெரிவித்தோ ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவது சட்டத்தை மீறும் செயல்.

சட்டத்தை அவமதித்து செயற்படுவோர் பாரபட்சமற்ற முறையில் கைது செய்யப்படுவர். இவர்களுக்கெதிராக வழக்கு தொடரமுடிவதுடன் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்க மறியலில் வைக்க முடியும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண கூறினார்.

தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து பாரிய முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லையென சுட்டிக்காட்டிய அவர் இதுவரையில் மூன்று மாகாணங்களிலும் அமைதியான சூழ்நிலையே நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.

-தினகரன்

Published by

Leave a comment