-Special Report:
முஸ்லிம் பிரதேசங்களில் ஐ.ம.சு.முன்னணியில் வெற்றிபெற்ற வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் தங்களை எதிர்த்தவர்களுக்கு நாங்கள் யார் என்பதைக் காட்டுவதற்காக இன்று கிழக்கின் பல பாகங்களிலும் ஊர்வலங்கள் சென்றனர். பட்டாசுகளும் ‘பார்ட்டி’ களும் வீன்விரயச் செலவுகளில் இவர்களது மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பது முதலாவது அம்சம்.
நிற்க!
தற்பொழுது கிழக்கின் முதலமைச்சர் யார்?
ஐ.ம.சு.மு மொத்தமாக 14 உறுப்பினர்களை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பெற்றிருக்கிறது. இரண்டாம் இடத்தில் தமிழரசுக் கட்சி 11 உறுப்பினர்களுடனும் முஸ்லிம் காங்கிரஸ் 7 உறுப்பினர்களுடனும் முக்கியமான துரும்புச் சீட்டாக இருக்கின்றது. இதைவிட ஐ.தே.க. 4 ஆசனங்களுடனும், தேசிய சு. முன்னணி 1 உறுப்பையும் பெற்றிருக்கிறது.
ஜனாதிபதி அவர்கள் தனது கட்சி சார்பானவர்களுக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுப்பதானால் ஒன்றில் சந்திரகாந்தனுக்கு அல்லது அமீர் அலிக்கு வழங்கலாம். எனினும் 14 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஆட்சியமைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் அரசாங்கம் இருக்கின்றது. ஏனெனில் 23 உறுப்பினர்கள் எதிராளியாக இருக்கின்றனர். தமிழரசுக் கட்சி அரசுடன் சேர்ந்தால் அது மிகப்பெரும் பலமிக்க ஆட்சியாக அமையும். இந்நிலையில் சந்திரகாந்தனுக்கு முதலமைச்சர் பதவி கனவாகி விடும்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்தால் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று, ஆட்சியமைக்கும். இந்நிலையில் அமீர் அலி யின் முதலமைச்சர் கனவும் பறிபோகும்.
தேர்தலுக்கு முன்னர் இருந்து தமிழரசுக் கட்சியினர் முஸ்லிம் காங்கிரஸை தங்களுடன் கூட்டுச் சேருமாறு பல முறை அழைத்திருந்தனர். இதே போல் இன்றும் குறிப்பிட்ட இரு கட்சிகளும் கூட்டுச் சேருவதற்கு வாசல் கதவுகள் திறந்திருக்கின்றன. உண்மையில் இவ்விரு கட்சிகளும் ஒன்றினையுமாயின் அது வரலாற்றில் சரித்திரங்களையும் பற்பல நன்மைகளையும் இந்நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தும்.
மாறாக, தற்பொழுது முஸ்லிம் காங்கிரஸின் ஸ்திரத்தன்மையை கருத்திற்கொன்டு அரசாங்கம் கூட்டுச் சேருவதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வருகிறது. முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்தால் அது பாரிய திருப்பங்களை ஏற்படுத்தும்.
* ஒன்று முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவருக்கு வழங்கப்படலாம்.
* அல்லது பாராளுமன்ற சமகால மற்றும் எதிர்கால பேரம் பேசுதலுக்கும், உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வழிவகுக்கும்.
* இது முஸ்லிம்களுக்கான தனியான கௌரவத்தை உலகுக்கு பறை சாற்றும்.
இதுவரை அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் தேர்தல் காலங்களில் பாரிய சங்கடங்களையும், எதிர்ப்புக்களையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்து வந்த ஆளும் தரப்பு பிரதிநிதிகளுக்கு முகத்தில் மண்ணள்ளிப் போடும் ஓர் சம்பவமாக இக்கூட்டு அமையும். அத்துடன் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஜனாதிபதிக்காக வாய்மூடி நடப்பதை வேடிக்கை பார்க்கும் ஓர் காட்சிப்பொருளாகவே இப்பிரதிநிகள் இருக்கப்போகின்றனர்.
தேர்தல் மேடைகளில் விமர்சிக்கப்பட்ட ஹக்கீம் மிக நிதானமாக அவரது அரசியல் அனுபவத்தை பிரயோகித்திருந்தார். ‘ஹக்கீம் ஒரு எலி ‘ என ஜனாதிபதி கல்முனையில் கூறியிருந்ததும் இப்போது பொய்யாகிவிடும். இதேபோல் ‘என்னுடன் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்தான் உங்களை ஏசும்படி என்னிடம் கூறுகின்றனர்’ என தன்னிடம் ஜனாதிபதி கூறியதாக ஹக்கீம் தேர்தல் மேடைகளில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்க ஓர் விடயம்.
சர்வதேசத்தில் எழுந்துவரும் இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு ஓர் தமிழரை முதலமைச்சராக்கி சர்வதேசத்துக்கு, இங்கு தமிழ் மக்கள் அரசாட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பதை நிரூபித்து, இலங்கையில் தமிழ் மக்கள் பிரச்சினையின்றி மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக வாழ்கின்றனர் என்பதை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டவேண்டிய ஓர் கட்டாயத் தேவையில் அரசாங்கம் இருக்கின்றது. குறிப்பாக ஐரோப்பா நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் காண்பிக்வேண்டிய ஓர் தேவை இருக்கின்றது.
எமது முஸ்லிம் அமைச்சர்களின் பலவீம் ஜனாதிபதி அவர்களுக்கு நன்கு தெரிந்த விடயம். எனவே, அரசுக்கு ஆட்சியமைக்க குறிப்பாக அறுதிப்பெரும்பான்மையைப் பெற்று கிழக்கு மாகாணசபையைக் கைப்பற்ற தற்பொழுது அரசாங்கம் இவ்விரு கட்சிகளையும் நாடி இருக்கின்றது.
நாங்கள் நினைப்பது போல் இலகுவாக முதலமைச்சர் பதவி கிடைக்காது. கூட்டுச் சேறும் கட்சிகளுடனான பலத்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்ட பின்பே அரசாங்கம் முதலமைச்சர் பற்றி அறிவிக்கும்.
எனவே துரும்புச் சீட்டாக இன்று வலம் வந்து கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யின் வெற்றியானது கிழக்கு முஸ்லிம்களின் விடிவுக்கு என்ன பதில் கொடுக்கப் போகின்றது. ஒருவேளை இதன் பின்னரே முதலமைச்சர் யார் என்பதும் தெரியவரலாம்!
Leave a comment