2011 இஸட் புள்ளி சர்ச்சை: பல்கலைக்கழகங்களுக்கு 4,928 மாணவரை மேலதிகமாக சேர்க்க வாய்ப்பு

2011 ஆம் ஆண்டு க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் மாவட்ட மற்றும் தேசிய மட்ட புள்ளிகளை எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதிக்கு முன் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவிற்கும் பரீட்சைகள் திணைக்களத்திற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்தர மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் மேலதிகமாக 4,928 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவது தொடர்பான பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முன்மொழிவிற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

 இஸட் புள்ளி பிரச்சினை தொடர்பில் 400க்கும் அதிகமான மாணவர்கள் தாக்கல் செய்திருந்த 7 வழக்குகள் நேற்று உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன.

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க உச்ச நீதிமன்ற நீதியரசர்களான கே. ஸ்ரீபவன், காமினி அமரதுங்க ஆகியோர் முன்னிலையில் மேற்படி வழக்குகள் பரிசீலிக்கப்பட்ட போதே உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது. இதன்போது மாணவர்களின் பல்கலைக்கழக தெரிவு தொடர்பில் உள்ள பிரச்சினைக்கு பல்கலைக்கழக மானிய ஆணைக் குழு 4 முன்மொழிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இதில் முதல் தீர்வின்படி மேலதிகமாக 3,675 மாணவர்களையும் இரண்டாவது தீர்வின்படி மேலதிகமாக 3,048 மாணவர்களையும் மூன்றாவது தீர்வின் பிரகாரம் மேலதிகமாக 4,928 மாணவர்களையும் சேர்க்க முன்மொழியப் பட்டிருந்தது. 4 ஆவது தீர்வின்படி 4,457 மாணவர்களை மேலதிகமாக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்க சிபார்சு செய்யப்பட்டிருந்தது.

இவற்றை கவனத்திற் கொண்ட உச்ச நீதிமன்றம் 3 ஆவது முறைமை யான 4928 மாணவர்களை மேலதிகமாக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் முன்மொழிவிற்கு அனுமதி வழங்கியது. இதன்படி வழமையாக பல்கலைக்கழகங்க ளுக்கு அனுமதிக்கும் 21,500 மாணவர்களுடன் மேலதிக மாணவர்கள் உள்வாங்கப்படுவர்.

கடந்த ஜுலை 25 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அமைய இரு பாடவிதான மாணவர்களின் தரவுகள் தனித்தனியாக ஆராயப்பட்டு இந்த முறைமைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் பாலித பெர்னாந்து நீதிமன்றத்திற்கு அறிவித்தார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு மனுதாரர்களின் சட்டத்தரணிகள் ஆகியோருடன் 3 தினங் கள் தொடர்ந்து ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2011 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பழைய பாடவிதான மற்றும் புதிய பாட விதான மாணவர்களுக்கென பொதுவான இஸட் புள்ளிகளை பல் கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு வெளியிட்டிருந்தது. இதனால் தங்களுக்கு அநீதி ஏற்பட்டதாக மாணவர்கள் சிலர் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் இரு பாட விதானங்களுக்கும் தனித்தனியான புள்ளிகளை வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இரு பாடவிதானங்களுக்கும் தனித்தனியான புள்ளிகள் வெளியிடப்பட் டன. இதனாலும் மேலும் சில மாணவர்கள் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலே மேற்படி விவகாரத்தை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் பல்கலைக்கழகத்திற்கு அனு மதிக்கும் மாணவர் தொகையை அதிக ரிக்குமாறு மானியங்கள் ஆணைக் குழு வுக்கு அறிவித்தது. இதன்படி மானியங்கள் ஆணைக் குழு நேற்று 4 தீர்வுகள் அடங்கிய முன்மொழிவை சமர்ப்பித்தது.

மேலதிக விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. வழக்கு விசாரணையை முன்னிட்டு பெருமளவு மாணவர்கள் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

— தினகரன்

 

 

 

Published by

Leave a comment