நேற்று மட்டக்களப்புக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள், மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தித்திட்டத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். தேர்தல் காலத்தை முன்னிட்டு கிழக்கின் முஸ்லிம் பிரதேசங்களுக்கு ஜனாதிபதி அவர்கள் அண்மைக்காலங்களில் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முயற்சியில் 2006 ல் அமைக்கப்பட்டிருந்த மேம்பாலத்தை அகற்றி, அவ்விடத்தில் ஓர் நிலத்தின் கீழான நடைபாதையை குறிப்பாக மீராபாலிகா பாடசாலை மாணவிகளுக்காக அமைத்துக் கொடுப்பதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். எனினும் வீதி அபிவிருத்தி மற்றும் மாரி மழை போன்றவற்றால் நிலத்தின் கீழ் அமைக்கும் இந்நடைபாதை திட்டம் பிற்போடப்பட்டு வந்தது.
தேர்தல் இடம்பெறுவதற்கிடையில் மேற்படி அபிவிருத்தியை துரிதமாக மேற்கொண்டு தனது ஆதரவை மென்மேலும் அதிகரித்துக்கொள்ள பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அவசரமாக இத்திட்டத்தை மெற்கொண்டு வந்து, இன்று இத்திட்டம் குறித்த பாடசாலை மாணவிகளுக்கும் பாதசாரிகளுக்கும் நன்மை பயக்கக்கூடியதொன்றாக இருக்கின்றது.
எனினும் சுட்டரிக்கும் கோடைகாலத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள நிலத்தின் கீழான நடைபாதையின் நன்மை தீமைகள் தற்போதைக்குத் தெரியாது. அடைமழை கொட்டும் மாரிகாலத்தில் இந்நிலத்திற்குக் கீழான நடைபாதை எவ்வாறு மாணவர்களுக்கும், பாதசாரிகளுக்கும் நன்மைபயக்கக்கூடியதொன்றாக இருக்கும் என்பது கேள்விக்குறி?
ஏனெனில் இலங்கை பொறியியலாளர்களை விட்டுவிட்டு வெளிநாட்டு பொறியியளார்களைக் கொண்டு வந்து இத்திட்டம் பற்றி கவனமெடுக்கும் அளவுக்கு இதன்பாரதூரம் அமைந்துள்ளமை தெட்டத்தெளிவாகும்.
இத்திறப்பு விழாவுக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமாண எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச.எம். பௌசி மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ,கிழக்கு மாகாண சபை மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள், பெரும் திரளான பொது மக்கள் பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வாறான நிலத்தின் கீழான நடைபாதைகள் பொறளை, கண்டி, குருநாகல் ஆகிய இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் முதலாவதாகவும் இலங்கையில் 4வதாகவும் இத்திட்டம் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![mainpic2_L[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/mainpic2_l1.jpg?w=530&h=397)
![DSC09654[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/dsc096541.jpg?w=530&h=397)
![DSC09664[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/dsc096641.jpg?w=530&h=397)
Leave a comment