PMGG மேடையில் வைத்து நகரசபை உறுப்பினர் பாக்கீர் தாக்கப்படவில்லை! அவரை நல்லாட்சிப் பிரமுகர்கள் முழுமையாகப் பாதுகாத்தனர்!!

– வார உரைகல்

நேற்று 31.08.3012 வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி கடற்கரை வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக நடைபெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரச்சார மேடையில் வைத்து காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம். பாக்கீர் ஆசிரியர் தாக்கப்பட்டதாக பொய்ச் செய்தியொன்று பரப்பப்பட்டுள்ளது.

உண்மையில் அவ்வாறு எந்த விதமான அசம்பாவிதங்களும் இப்பிரச்சார மேடையில் இடம்பெறவில்லை என்பதை ‘வார உரைகல்’ அதன் வாசகர்களுக்கு உறுதிப்படுத்துகின்றது.

இதுபற்றிய சரியான விபரமாவது:மேற்படி பிரச்சாரக் கூட்டம் இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டு அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இறுதியாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி அங்கு உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அவர் தனதுரையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும், அவரது மேடைப் பேச்சாளர்களும் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதைக் கண்டித்தும், தமது இயக்கத்தின் மீது அபாண்டமாக அவரும், அவரது பிரச்சாரப் பேச்சாளர்களும் தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில் தாங்கள் பகிரங்கமாக விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

காத்தான்குடியில் கடந்த காலங்களில் நிகழ்ந்த பல ஊழல் மோசடி விவகாரங்களைப் பற்றி விவரித்துப் பேசிய அவர், புதிய காத்தான்குடி பெரிய பள்ளிவாசல் கடிதத் தலைப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கியதாக அவர்களின் கையொப்பங்களைப் போலியாக இட்டு காத்தான்குடி பிரதேச செயலாளரிடமிருந்து இலட்சக்கணக்கான அரசாங்கத்தின் பணத்தை அப்பள்ளிவாசல் கடிதத்தலைப்பில் விண்ணப்பிக்கப்பட்டதாகவும், இவ்விடயத்தில் நகர சபை உறுப்பினரான பாக்கீர் மாஸ்டருக்கும் தொடர்பிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கூட்டம் முடிவடைவதற்காக சுமார் ஐந்து நிமிடம் மாத்திரம் நேரம் இருந்து கொண்டிருந்த நிலையில் பாக்கீர் மாஸ்டர் மேடையை நோக்கி வந்தார்.

அதன் காரணமாக மேடைக்கு முன்பாக அதுவரை நேரமும் அமைதியாக அமர்ந்திருந்தவர்களும், வீதியின் ஓரத்தில் அமைதியாக நின்று கூட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்தவர்களும் குழப்பமடைந்து மேடைக்கு முன்பாக ஒன்று கூடியனர்.

பலர் “பாக்கீர் மாஸ்டரை மேடைக்கு ஏற்ற வேண்டாம்” என்றும், “ஏதோ ஒரு சதித் திட்டத்துடன்தான் அவர் வருகின்றார்” என்றும் கூக்குரலிட்டனர்.

எனினும், மேடையில் அமர்ந்திருந்த காத்தான்குடி நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரான பெறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான், முன்னாள் நகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.ஜீ.எம். ஹாறூன், டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் போன்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் அவர்மீது பொதுமக்கள் அநியாயம் எதுவும் செய்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் பாதுகாப்பாக அவரை மேடைக்கு வரவழைத்துக் கொண்டனர்.

பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தனக்கருகில் இருந்த ஆசனத்தில் பாக்கீர் ஆசிரியரை அமரச் செய்தார்.

இதையடுத்து அங்கு தனது உரையைத் தொடர்ந்த பிர்தௌஸ் நளீமி, ‘தற்போது நகர சபை உறுப்பினர் சகோதரர் பாக்கீர் ஆசிரியர் மேடைக்கு வந்திருப்பதாகவும், நான் தெரிவித்த கருத்தை மறுத்து சத்தியம் செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

தனக்கும், வெள்ள நிவாரண நிதிக் கோரிக்கையை விடுத்த பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லையென்று அவர் தற்போது சத்தியம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டவராக அவர் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

இந்நிலையில் ஒலிபெருக்கிப் பாவனைக்காக பொலீசார் வழங்கிய நேரம் முடிவுற்றதால் மேடைக்கு முன்பாக வந்த பொலீசார் ஒலிபெருக்கி இணைப்பைத் துண்டிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதையடுத்து ஒலிபெருக்கி நிறுத்தப்பட்டது.

இதன் பின் பாக்கீர் மாஸ்டர் ஒலி வாங்கிக்கு முன்பாக வந்தார்.

அவர் சத்தியம் செய்வதற்கு குர்ஆனைத் தருமாறு கேட்டார்.

அவ்விடத்தில் குர்ஆன் இருக்கவில்லை. மேலும் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதற்கு குர்ஆன் தேவையில்லை என்றும் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பாக்கீர் மாஸ்டர் தனக்கும், புதிய காத்தான்குடி பெரிய பள்ளிவாசலால் பிரதேச செயலாளரிடம் விண்ணப்பிக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதியைப் பெறுவதற்கான விண்ணப்பத்திற்கும் சம்பந்தம் இல்லையென்று தெரிவித்தார்.

இதைக் கேட்ட பொதுமக்கள் பலமாகச் சத்தமிட்டனர். எனினும், மேடையிலிருந்த பிரமுகர்கள் பலரும் யாரும் கூச்சல் போட்டு குழப்பமாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

இதன் பின் மேடையிலிருந்த பிரமுகர்கள் பலரும் பாக்கீர் மாஸ்டரை மிகவும் பத்திரமாக கீழே இறக்கி வீதிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிகழ்வு அனைத்தும் பல கெமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவரை யாரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரச்சார மேடையில் வைத்து தாக்கவில்லை. அவர் மேடையில் முழுமையாக பாதுகாக்கப்பட்டார் என்பதை ‘வார உரைகல்’ மேடையில் நின்றவாறே நேரில் அவதானித்து இத்தால் உறுதிப்படுத்துகின்றது.

மேலும், இப்பிரச்சாரக் கூட்ட நிகழ்வுகள் அனைத்தும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான http://www.pmgg.org எனும் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment