PMGG கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலை

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேர்தல் பிரசாரக் கூட்டம் முடிவுறும் தறுவாயில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கிர் ஆசிரியர் மேடையில் ஏறி கருத்துக் கூற முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது.

இக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அமீர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி உரையாற்றுக் கொண்டிருந்த சமயம் புதிய காத்தான்குடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் கடிதத் தலைப்பில் அப்பகுதியில் வாழும் மக்களின் பொய்யான கையெழுத்துக்களை இட்டு பிரதேச செயலாளரிடமிருந்து வெள்ள நிவாரண பணத்தைப் பெற்று மோசடி செய்த சம்பவத்துடன் பாக்கிர் ஆசிரியர் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறு குறிப்பிட்ட சில நிமிடங்களில் – கூட்டம் முடிவடைவதற்கு சில நிமிடங்கள் மாத்திரம் மீதமிருக்கையில் – மோட்டார் சைக்கிள் ஒன்றில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரசார மேடை முன்பாக வந்திறங்கிய பாக்கிர் ஆசிரியர் மேடையில் ஏறிச் சென்று இந்த மோசடிக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என தான் சத்தியம் செய்யப் போவதாக மேடையில் அமர்ந்திருந்த ந.ம.இயக்க முக்கியஸ்தர்களிடம் குறிப்பிட்டார்.

அவரை வரவேற்று மேடையில் போடப்பட்டிருந்த ஆசனங்களில் அமரச் செய்த பின்னர் பிர்தௌஸ் நளீமி தொடர்ந்தும் உரையாற்றினார். பாக்கிர் ஆசிரியர் தனக்கும் இந்த மோசடிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என சத்தியம் செய்வதாக இருந்தால் நிவாரணம் வழங்கிய பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை, வெள்ள நிவாரணத்திற்காக பெறப்பட்ட கையெழுத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை, வெள்ள நிவாரணம் வழங்கியதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதையும் அவர் சத்தியமிட்டுச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொன்னால் அதனை ஏற்றுக் கொள்வதற்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தயாராகவுள்ளது எனக் குறிப்பிட்டதுடன் தனது கருத்துக்களைக் கூறுவதற்கு பாக்கிர் ஆசிரியருக்கு சந்தர்ப்பம் வழங்கினார்.

இதன்போது கருத்துவெளியிட்ட பாக்கிர் ஆசிரியர் குறித்த வெள்ள நிவாரண விநியோகத்தில் தான் சம்பந்தப்பட்டிருந்தபோதிலும் எந்தவிதமான மோசடிகளிலும் ஈடுபடவில்லை எனக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து அங்கு சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பார்வையாளர்கள் பாக்கிர் ஆசிரியரை நோக்கி கேள்விகளைக் கேட்கத் தொடங்கியபோதிலும் நேரம் நள்ளிரவைத் தாண்டியதால் பொலிசார் கூட்டத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டதுடன் ஒலிவாங்கியையும் நிறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பாக்கிர் ஆசிரியர் பொலிசார் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை உறுப்பினர்களின் பாதுகாப்புடன் மேடையிலிருந்து கீழிறக்கப்பட்டு அவர் வருகை தந்த மோட்டார் சைக்கிளிலேயே அவரை அனுப்பி வைத்தனர்.

பிந்திக் கிடைத்த செய்தி

தனது கருத்துக்களை தெரிவித்த பின்னர் மேடையிலிருந்து பொலிசாரினாலும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க முக்கியஸ்தர்களாலும் பாதுகாப்பாக கீழிறக்கப்பட்டு மோட்டார் சைக்கிளில் ஏறமுற்பட்ட வேளை அங்கு வீதியில் நின்றிருந்த இனந்தெரியாத நபர் ஒருவரால் தான் தாக்கப்பட்டதாக பாக்கிர் ஆசிரியர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது பாக்கிர் ஆசிரியர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவம் பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

-pmgg.org

 

 

 

Published by

Leave a comment