கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களிடம் கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய சமய பெரியார்களான உலமாக்கள் சாட்சியாக சத்திய உறுதி மொழிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெறத்துவங்கியுள்ளது.
வியாழனன்று இரவு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்கள் உலமாக்கள் முன்னிலையில் சத்திய உறுதி மொழிகளை எடுத்துக்கொண்டனர். அந்த உறுதிமொழிகளில் கீழ்கண்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
“இத்தேர்தலில் வெற்றி பெறுமிடத்து மாகாண சபைக்கு உள்ளும் வெளியிலும் கட்சிக்கும் தலைவர் ரவுப் ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கும் மிகவும் விசுவாசமாக நடந்து கொள்வேன் என்றும் எக்காரணம் கொண்டும், எந்த நிலையிலும் கட்சியை விட்டு விலகவோ கட்சியின் கட்டுப்பாட்டை மீறவோ, துரோகமிழைக்கவோ மாட்டேன் என்றும், பணத்திற்கோ, பதவிகளுக்கோ ஆசைப்பட்டு கட்சியையும், தலைமைத்துவத்தையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் எனது சொந்த நலனை விட கட்சியினதும் சமூகத்தினதும் நன்மையை முதன்மைப் படுத்துவேன் என்றும், எனது முன்னிலையிலுள்ள உலமாக்கள் சாட்சியாக சத்தியம் செய்கின்றேன். எனது கூற்றுக்கு “அல்லாஹ்வும் சாட்சியாக இருக்கிறான் ” என்கிற இந்த வாசகங்களடங்கிய உறுதிமொழிகளை வேட்பாளர்கள் தனித்தனியாக மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இது தனித்து போட்டியிடுகின்றது. இதன் காரணமாக அரசாங்கத்திற்கும் அக்கட்சிக்குமிடையிலான உறவிலும் ஒரு வித சுமூகமற்ற சூழ்நிலை தேர்தல் பிரச்சாரங்களில் காணக் கூடியதாக உள்ளது. மாகாண சைபத் தேர்தலில் வெற்றி பெறும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒரு சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக போய்விடலாம் என்ற அச்சமும் சந்தேகமும் கட்சி ஆதரவாளர்கள் மத்தியல் காணப்படுகின்ற சூழ்நிலையிலேயே இந்த தீர்மானத்தை அக்கட்சி எடுத்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
அதேசமயம், இத்தகைய உறுதிமொழி எடுப்பதில் தவறில்லை என்றும், இந்த நடைமுறையை தங்கள் கட்சி இதற்கு முன்னரும் கடைபிடித்திருக்கிறது என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி. அவரது செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
BBC/Tamil
Leave a comment