கல்முனையில் ஜனாதிபதி தெரிவித்தது வாக்குறுதியா? அல்லது மூளைச்சலவையா?

-SHM

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த திங்கட்கிழமை கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் முஸ்லிம்களை கருத்திற்கொண்டு, ‘இந்நாட்டில் பள்ளிவாயல்கள் ஒரு போதும் உடைக்கப்படாது’ என தெரிவித்திருந்தார். இதனை உள்ளுர் ஊடகங்களும், தேசிய, சர்வதேச ஊடகங்களும் அடுத்த நிமிடம் தலைப்புச் செய்தியாக படங்களுடன் வெளியிட்டு இருந்தமையும் அறியத்தக்கது.

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டதற்கு அப்பால் குறிப்பாக இவ்வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து திட்டமிட்டு நசுக்கப்படும் சிங்கள பேரினவாத அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதும கவலைக்குரியது.

அரசாங்கத்தின் உயர் ஆசனங்களில் உல்லாசமாக இருந்துகொண்டு, தனது சமூகத்தின் குரலை தன் குரள்வளைக்குள் விழுங்கிக் கொண்டு, இந்நாட்டில் அன்மைக்காலமாக முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டு வரும் பள்ளிவாயல்கள் மற்றும் மத்ரஸாக்கள் மீதான தாக்குதல்களை முன்வந்து கண்டிக்காமல், பெட்டிப்பாம்பாய் அரசு கூடாரத்துக்குள் அடங்கிக்கிடக்கும் எம் தலைவர்களை இந்நேரத்தில் பொதுமக்கள் தன் சுயபுத்தியால் ஓர் நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கௌரவ ஜனாதிபதி அவர்கள் கல்முனையில் தெரிவித்த மேற்படி கருத்தானது பல முஸ்லிம்களிடத்தில் எடுபடவில்லை. எனினும் ‘கூலி’ முஸ்லிம்களும் அவர்களது ஆதரவாளர்களும் மனமுவந்து இக்கருத்தை ஏற்று பீற்றித் திரிந்தனர். இக் கருத்தைத் தெரிவித்து ஒரு வாரம்கூட சென்றிராத இந்நிலையில் இன்று கொழும்பு, வெல்லம்பிட்டி ஜூம்ஆ பள்ளவாயலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு, ஜூம்ஆவை பொலிசாரை பாதுகாப்பாக வைத்து தொழவேண்டிய அச்சமான சூழ்நிலையில் முஸ்லிம்கள் இந்நாட்டில் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பது கசப்பான மற்றுமொரு உண்மை.

இச்சம்பவத்துக்கும் முதுகெழும்பற்ற எமது சமூக தலைவர்கள் எவராவது குரல் கொடுத்தார்களா? இருக்காது!! ‘மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை’ என்ற ஓர் வழமையான பல்லவியில் மீண்டும் மக்களின் உணர்வுகள் திட்டமிட்டு இவ்வாறான முஸ்லீம் தலைவர்களால் இன்று திட்மிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன.

புலி போல் சீறிப்பாய வேண்டிய இத்தருணத்தில் கொமிசனிலும், உல்லாச வாழ்க்கையிலும் ருசிகண்டு, கொழுத்த பூனைகளாய் பண மூடைக்கு மேல் உட்கார்ந்து ஏப்பமிட்டு, எமது முஸ்லிம் தலைவர்கள் இன்று மக்களை திட்டமிட்டு ஏமாற்றி வருகின்றனர்.

முஸ்லிம்களையே காட்டிக்கொடுத்து, இன்று அரசியலுக்காக முஸ்லிமின் இரத்தத்தை குடிப்பதற்கு தயங்காத இத்தகைய அரசியல் நயவஞ்சகர்களை சமூகத்தில் இருந்து ஓரங்கட்ட வேண்டும்.

எங்களுக்கு எங்கள் உரிமைகளைப் பெற்றுத்தருபவர்கள் மாத்திரம் தேவையில்லை! மாறாக எப்போதெல்லாம் முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் ஓர் சிறுபான்மை என்பதற்காக நசுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் எழுந்து துணிச்சலுடன் கண்டித்து குரல் கொடுக்கக் கூடிய ஓர் தலைவனே இன்று முஸ்லிம் சமூகத்துக்குத் தேவை என்பதை பொதுமக்கள் உணரவேண்டும்.  அதில்தான் வெற்றியும் இருக்கிறது.

 

 

 

Published by

Leave a comment