நேற்றிரவு மூதூர் பிரதேசத்திலுள்ள அக்கரைச் சேனையிலும், தோப்பூரிலும் நடைபெறுவதற்கு முறையான அனுமதிகள் முன்கூட்டியே பெறப்பட்டு ஏற்பாடாகியிருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக பிற்பகல் 2:00 மணியளவில் காத்தான்குடி பிரதேச நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அலுவலகம் முன்பாக இருந்து புறப்பட்ட வேனில் நானும் பயணித்தேன்.
மாலை 4: 40 மணியளவில் மூதூர் பிரதேச PMGG யின் அலுவலகத்தைச் சென்றடைந்தோம்.
இப்பயணத்தின்போதே தோப்பூரில் ஏற்பாடாகியிருந்த பிரச்சாரக் கூட்டத்தை ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் குண்டர்கள் குழுவொன்று கூச்சலிட்டுக் குழப்பியதாகவும், இக்குழப்பகரமான நிலைமை கலவரமாக மாறி விடக்கூடாது என்ற நோக்கத்தில் அங்கு பிரச்சாரக் கூட்டம் நடாத்துவதைக் கைவிட்டு விட்டு மூதூர் அக்கரைச்சேனை என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதாகவும் எமக்கு தகவல் கிடைத்தது.
நாம் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தோம். எமது வாகனத்தில் பொறியியலாளர் அப்துர் றஹ்மானும் மற்றும் ஆதரவாளர்களும் சென்று கொண்டிருந்தோம்.
சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி இரண்டு தினங்களாக மூதூர், கிண்ணியா, தோப்பூர் போன்ற பிரதேசங்களில் கள வேலைகளுக்காகத் தங்கி இருந்தார்.
எமது வாகனம் மூதூர் பிரதேச அலுவலகத்தைச் சென்றடைந்த சில நிமிடங்களில் மற்றொரு வாகனம் அலுவலகத்தின் முன் வந்தது. அதிலிருந்து பிர்தௌஸ் நளீமி, மூதூர் பிரதேச PMGG செயற்குழு உறுப்பினர்களான டாக்டர். ஸாகிர், பொறியியலாளர் நிஸாம் மற்றும் ஆதரவாளர்கள் சிலரும் இறங்கி வந்தனர்.
அக்கரைச் சேனையிலும் நாம் மேடைகளை அமைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது மீண்டும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் குண்டர்கள் குழு அங்கு வந்து அங்கும் கூட்டத்தை நடாத்தக் கூடாது என்று குழப்பம் விளைவித்ததாகவும், அவர்களுடன் கண்ணியமாகப் பேச முடியாதிருந்ததாகவும், தொப்பி, தாடி, ஜுப்பாவுடன் காணப்பட்ட பெரிய மனிதர் ஒருவர் சிறுபிள்ளைகளுக்கு மத்தியிலேயே தூஷண வார்த்தைகளைப் பிரயோகித்ததாகவும், பொலீஸார் பாதுகாப்பு வழங்குவோம் கூட்டத்தை நடாத்துமாறு கேட்டதாகவும், இருந்தாலும் அங்கு காணப்பட்ட குண்டர்களின் கூப்பாடுகளுக்கு மத்தியில் நாம் கூட்டத்தை நடாத்தி ஏதும் விபரீதங்கள் ஏற்பட்டால் அதை நமக்கு எதிரான பிரச்சாரமாக முன்னெடுக்க ஸ்ரீ.ல.மு.கா.வினர் திட்டமிட்டிருப்பதை அறிந்து தாங்களாகவே அங்கு கூட்டத்தை நடாத்துவதில்லை என்ற முடிவுடன் திரும்பி வந்திருப்பதாகவும் அவர்கள் அலுவலகத்தில் கூடியிருந்தோரிடம் தெரிவித்தனர்.
சற்று நேரத்தில் மேடை உபகரணங்கள் ஏற்றிய லொறி அங்கு திரும்பி வந்தது. அன்று காலையில் காத்தான்குடியில் இருந்து ஏற்றி அனுப்பி வைத்தவாறே அந்த லொறியில் மேடை உபகரணங்கள் அனைத்தும் காணப்பட்டன.
இதையடுத்து என்ன செய்வதென்று அலுவலகத்தில் கூடி ஆலோசித்தோம்.
அப்போது அந்த அலுவலகத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஹைரிய்யா நகர் என்னுமிடத்தில் நாளைய தினம் (அதாவது இன்று) பிரச்சாரக் கூட்டமொன்றை நடாத்துவதற்கான அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும், அதனால் பொலீசாருக்கு அறிவித்து விட்டு அந்த இடத்தில் இன்று நாம் கூட்டத்தை நடாத்துவோம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி மீண்டும் அவசர அவசரமாக சிறு துண்டுப்பிரசுரம் ஒன்று அச்சடிக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அலுவலகத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மேடை உபகரணங்கள் கொண்ட லொறி அந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்குள்ளாக மேடை அமைக்கப்பட்டு மின் விளக்குகளும் எரிய விடப்பட்டன. குழாய் ஒலிபெருக்கிகள் இன்றி ஒலிபெருக்கிப் பெட்டிகள் மூலம் மஃரிப் தொழுகையன் பின் கூட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடாகியது.
மஃரிப் தொழுகை முடிவடைந்ததும் மீண்டும் அதே முஸ்லிம் காங்கிரஸ் குண்டர்கள் கும்பல் இங்கும் வந்து கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கத் தொடங்கியது.
இதனால் அங்கும் மக்கள் மத்தியில் வாக்கு வாதங்களும், கைகலப்புக்கள் ஏற்படும் நிலைமைகளும் தோன்றின. மிகவும் ஆத்திரமடைந்த நிலையில் அந்தக் கும்பலைத் தாக்க முற்பட்ட நூற்றுக்கணக்கான PMGG ஆதரவு இளைஞர்களை பிர்தௌஸ் நளீமியும், டாக்டர் ஸாஹிர் போன்றோரும் முழுமையாகக் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர்.
இங்கும் நாம் கூட்டத்தை நடாத்துவதில்லை என அவர்கள் முடிவெடுத்தனர்.
எவ்வாறாயினும் ஒரு பாரிய குழப்பத்தை ஏற்படுத்தி PMGG காரர்களால் ஊருக்குள் குழப்பம்ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற அவதூறை திருமலை மாவட்டம் முழுவதும் பிரச்சாரப்படுத்தி மக்களைத் தூரப்படுத்தும் உள்நோக்குடன் ஒரு சில முஸ்லிம் காங்கிரஸ் குண்டர்களால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெறுவதாக பலரும் தகவல் தெரிவித்தனர்.
இவர்களின் இந்த சதி நடவடிக்கையிலிருந்து புத்திசாலித்தனமாக நாம் பின்வாங்கி எமது அலுவலக முன்றலில் கூட்டத்தை நடாத்துவோம் என்ற தீர்மானம் எடுத்தபோது அப்பிரதேச ஸ்ரீ.ல.மு.கா.பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் PMGG முக்கியஸ்தர்களுடன் பேசுவதற்காக முன்வந்தார்.
மேடைக்குப் பின்னால் இருந்த வீட்டில் அவருடன் பொறியியலாளர்களான அப்துர் றஹ்மான், பழுலுல் ஹக், நிஸாம், பிர்தௌஸ் நளீமி, டாக்டர் ஸாகிர் உட்பட பலர் இவருடனான பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர்.
‘நீங்கள் மூதூர் பிரதேசத்திற்கான வேட்பாளர் யாரென்பதைச் சொல்ல வேண்டும்’ என அவர் கேட்டார்.
‘நாங்கள் அதைச் சொல்வதற்கு கூட்டத்தை அமைதியாக நடாத்துவதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்று PMGG தரப்பில் சொல்லப்பட்டது.
‘இல்லை. நீங்கள் வேட்பாளர் யாரென்பதைச் சொல்லாமல் எமக்குக் கிடைக்கவுள்ள பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க முயற்சிக்கின்றீர்கள்’ என அவர் சொன்னார்.
‘சரி, அப்படியானால் நீங்களும் பிரச்சாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்து இவர்கள் வேட்பாளர்கள் யாரென்பதை அறிவிக்காமல் வாக்களிக்குமாறு கேட்கிறார்கள். நீங்கள் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். மக்கள் தீர்ப்பளிப்பார்கள்’ என்று PMGG தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
‘மூதூருக்கு கிடைக்க வேண்டிய மாகாண சபைப் பிரதிநிதித்துவத்தை நீங்கள் இல்லாமலாக்க முயற்சிக்கிறீர்கள்’ என்று மீண்டும் அதே குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.
‘மூதூருக்கான மாகாண சபைப் பிரதிநிதித்துவத்தை PMGG உறுதிப்படுத்துகின்றது. PMGG மூலம் மூதூருக்கு மாகாண சபைப் பிரதிநிதித்துவம் கிடைத்தால் நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?’ என்று PMGG தரப்பில் கூறப்பட்டது.
அவருக்கு தலை சுற்ற ஆரம்பித்திருக்க வேண்டும். அதற்கு மேல் அவர் தர்க்கம் புரியவில்லை. வெளியில் சென்று அங்கிருப்போருடன் கதைத்து விட்டு வருவதாகச் சென்றவர் பின்னர் வரவே இல்லை.
இந்த நிலையில் PMGG செயற்குழு உறுப்பினர்கள் மேடையைப் பிரித்து லொறியில் ஏற்றியிருந்தனர். மேடை பிரிக்கப்பட்டதும் கூச்சலும், குழப்பங்களும் படிப்படியாகக் குறைந்தன. குண்டர்கள் ஒரு பக்கமாக ஒதுங்கிச் சென்றனர். கூடியிருந்த மக்களை அலுவலகத்திற்கு வருமாறு செயற்குழு உறுப்பினர்கள் அழைப்பு விடுத்தனர்.
ஸ்ரீ.ல.மு.கா. குண்டர்களை ஏவி விட்டு மூன்று இடங்களிலும் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டமையானது ஏராளமான மக்களை அதிருப்திக்கும், வெறுப்புக்கும் உள்ளாக்கியிருந்தது. மு.கா.வுக்கு வாக்களிப்பதாகத் தீர்மானித்திருந்த பல சகோதரர்கள் தாமாகவே அங்கு வந்து இன்றிலிருந்து நாங்களும் PMGGயுடன் இணைந்து செயற்படப் போவதாகத் தெரிவித்தனர்.
பின்னர் இரவு 9.45 மணியளவில் அலுவலக முன்றலில் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பெருந்திரளான மக்கள் மிக்க ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் டாக்டர். ஸாக்கிர், பொறியியலாளர் அப்துர் றஹ்மான், பிர்தௌஸ் நளீமி, ஓட்டமாவடி அகமட் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வு PMGG இயக்கத்தின் http://www.pmgg.org என்ற அவர்களின் உத்தியோகபூர்வ இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
பின்னரும் சில மணி நேரங்கள் குழுக்களாகக் காணப்பட்ட இளைஞர்களுடன் கலரந்துரையாடல்கள் நடைபெற்றன. அவர்கள் PMGG பற்றிய தங்களிடமிருந்த சந்தேகங்களுக்கு பொறியியலாளர் அப்துர் றஹ்மான், பிர்தௌஸ் நளீமி ஆகியோரிடமிருந்து தெளிவுகளைப் பெற்று தமது ஆதரவுகளை வழங்குவதாக உறுதியளித்துச் சென்றனர்.
இந்தளவு நிகழ்வுகளே அங்கு நடைபெற்றன என்பது என்னால் நேரடியாக களத்தில் நின்று அவதானிக்கப்பட்ட விடயங்களாகும்.
இதுகுறித்து நான் உடனடியாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன், ‘விடிவெள்ளி’ பத்திரிகையின் பொறுப்பாசிரியர் எம்.பி.எம். பைரூஸ், நமது பிரதேச ஊடகவியலாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். நூர்தீன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன்.
இதன் பின் அனைவரும் இரவு உணவை அலுவலகத்தில் முடித்துக் கொண்டு காத்தான்குடிக்குத் திரும்பினோம்.
உண்மை இவ்வாறிருக்க, நேற்று நமதூரில் கடற்கரை வீதியில் நடைபெற்ற ஐ.ம.சு.முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை நமதூர் மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதை அறிந்து கொண்டு உடனடியாகவே இந்த நிகழ்வுத் தொகுப்பை பதிவேற்றிவிட்டே தூங்க வேண்டும் என்ற உணர்வுடன் இதனை தட்டச்சு செய்து கொண்டிருக்கின்றேன்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஒரு படு பொய்யர் என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
உண்மையில் மூதூரில் நடைபெற்ற முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் அவரது ‘சிறப்புக்கள்’ பற்றி PMGG பேசியிருந்தது உண்மைதான்.
என்றாலும் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட எந்தக் கூட்டமும் மூதூர், தோப்பூர் பிரதேசங்களில் நடைபெறவும் இல்லை. PMGG யினர் எந்தக் கூட்டத்திலும் அவரைப்பற்றி எதுவுமே பேசவும் இல்லை.
இந்நிலையில், ‘மூதூரில் என்னைப்பற்றி பிழையாகவும் என்னை தாக்கியும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் இன்று மாலை மூதூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாலேயே ஆத்திரமுற்ற மூதூர் மக்கள் இளைஞர்கள் கிளர்ந்தெழுந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரின் கூட்டத்தை குழப்பி மேடையை உடைத்து விரட்டியுள்ளனர்’ என்று கூறியிருப்பதானது அப்பட்டமான படு பொய்யாகும்.
அவர் கூறியிருப்பதைப் போன்று அவரை நேற்றைய தினம் PMGG பிழையாகத் தாக்கிப் பேசுவதற்கும், மக்களும் இளைஞர்களும் கிளர்ந்தெழுந்து மேடையை உடைத்து விரட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தோப்பூரிலோ, அக்கரைச்சேனையிலோ அல்லது ஹைராத் நகரிலோ கூட்டங்கள் எதுவும் நடைபெறவே இல்லையே..?
பின்னர் எப்படி இவர்களால் தாக்கிப் பேசவும், மக்கள் கிளர்ந்தெழுந்து மேடையை உடைத்து விரட்டியிருக்கவும் முடியும்?
எனவே, ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் குண்டர்களால்தான் PMGGயின் கூட்டங்களை மேற்படி மூன்று இடங்களிலும் நடாத்தவிடாமல் குழப்பங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதும்,
அதன் காரணமாக அப்பிரதேசங்களில் ஏற்படவருந்த கைகலப்புக்களை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சமயோசிதமாகவும், புத்திசாலித்தனமாகவும் தவிர்த்துக் கொண்டு அதன் மூதூர் பிரதேச அலுவலகத்தில் அமைதியாகக் கூட்டத்தை நடாத்தி திரண்டு வந்த பொதுமக்களுக்கு விளக்கமளித்து விட்டு ஊர் திரும்பியது என்பதும்,
இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி படு பொய்யரான பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ‘மூதூரில் குழம்பிய குட்டையில் காத்தான்குடிக் கடற்கரை வீதி மேடையில் இருந்து கொண்டு மீன் பிடிக்க முயற்சித்திருக்கின்றார்’ என்பதுமே ‘வார உரைகல்’ தெரிவிக்கும் உண்மையாகும்.
எல்லாம் வல்ல அழ்ழாஹ் உண்மையாளர்களை விரும்புவானாக! பொய்யர்களை வெறுப்பானாக!! குழப்பக்காரர்களுக்கு நேர்வழி காட்டுவானாக!!
![mu-4[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/mu-41.gif?w=300&h=224)
Leave a comment