பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சமுர்த்தி அதிகாரிகள் சங்கம் சவால்!

திவிநெகும திணைக்களத்தை உருவாக்குவது தொடர்பான சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சிகள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. முடிந்தால் இச்சட்டமூலம் தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் சவால் விடுத்துள்ளது.

மக்களின் கோரிக்கைக்கு இணங்கவே சமுர்த்தி அதிகாரசபை, தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை, மலையக அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றை இணைத்து திவிநெகும திணைக்களத்தை உருவாக்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதம செயலாளர், மேல்மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ.டீ.ஜகத் குமார தெரி வித்தார்.

இந்தச் சட்டமூலத்தால் சமுர்த்தி பய னாளிகளுக்கோ, சமுர்த்தி அலுவலர்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மக்களின் வேண்டுகோளுக்கு அமையவே இச்சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் போலியான சதித்திட்டத்தின் மூலம் மக்களைக் குழப்புவதற்கு முயற்சிப்பதாக அவர் நேற்றுத் தெரிவித்தார்.

இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் வெற்றிபெற்றால் சமுர்த்தி அதிகாரசபைக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டு, அரசாங்கம் மேலும் பலமடைந்து விடும் என எதிர்க்கட்சிகள் பயமடைந் துள்ளன. இதனாலேயே பலமில்லாத எதிர்க்கட்சிகள் போலியான குற்றச்சாட்டுக் களை முன்வைத்து மக்களைக் குழப்புவதற்கு முயற்சிப்பதாக பத்தரமுல்லையிலுள்ள இச்சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.

சமுர்த்தி அதிகாரசபைச் சட்டமூலத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலேயே திவிநெகும திணைக்கள சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் இரண்டு சட்டமூலங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவ்வாறு ஆராய்ந்து பார்த்துவிட்டு குறைபாடுகள் இருந்தால் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு நாம் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுக்கின்றோம்.

இந்தச் சட்டமூலத்துக்கு சமுர்த்தி அலுவலர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் காண்பிக்க எதிர்க்கட்சிகள் முனைகின்றன. ஆனால், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் அலுவலர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டது. பலமில்லாத எதிர்க்கட்சிகளால் ஆகக்கூடியது 100 சமுர்த்தி அலுவலகர்களையேனும் இணைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்த முடியாது.

அரசாங்கம் பலமடைந்துவிடும் என்ற பயத்தினாலும், அரசியல் இலாபம் நோக்கிலேயுமே இச்சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருவதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதம செயலாளர், மேல்மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ.டீ.ஜகத் குமார மேலும் தெரிவித்தார்.

– தினகரன்

 

 

 

Published by

Leave a comment