நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் இன்றிரவு (28.08.2012) 8.35 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸும் அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டியும் நேருக்கு நேராக மோதியதிலேயே இந்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணம் செய்த 6 பேரே மேற்படி விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திலேயே ஐவர் உயிரிழந்ததாகவும் சிறுவனொருவன் படுகாயமடைந்த நிலையில் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர்களில் மூன்று பெண்கள், ஒரு ஆண், ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் அடங்குவதாகவும் இறந்தவர்களின் சடலங்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான தனியார் பஸ் கல்முனை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் சாரதியும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் கல்முனை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
-வீரகேசரி
Leave a comment