தேசிய உதைப்பந்தாட்டமும் மைதான அபிவிருத்தியும் என்னாச்சு…..?

-SHM

இம்மாதம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருப்பதாக உத்தியோகபூர்வமாக சில அரசியல்வாதிகளால் அறிவிக்கப்பட்டிருந்த தேசிய உதைப்பந்தாட்டப் போட்டிகள் சம்பந்தமாக எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை காணமுடியவில்லை!

ஹிஸ்புல்லாஹ் மைதான அபிவிருத்தி மும்முரமாக இடம்பெற்று வந்தபோதிலும், கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக அபிவிருத்திகள் இடை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இம்மைதான அபிவிருத்திக்கு வரவழைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பொருட்களும் இதரப்பொருட்களும் அயல் கிராமம் ஒன்றுக்கு திட்டமிட்டு கடத்தப்பட்டிருக்கின்றன.

இம்மைதான அபிவிருத்தியில் பங்கெடுத்த பொறியியலாளர்கள், கட்டுமான ஊழியர்கள், மற்றும் அரசியலுக்கு விசுவாசமானவர்கள் இம்மைதானப் பக்கம் தலைவைத்தும் தற்பொழுது தூங்குவதில்லையாம். இவர்களை நேரில் சந்தித்து கேட்டால் மழுப்புகின்றார்களாம். இவர்களின் இவ்வாறான ஏமாற்றமும் பகல் கொள்ளையும் அப்பிரதேச வாசிகளையும், காத்தான்குடி விளையாட்டு இரசிகர்களையும்  மிகவும் பாதித்திருக்கின்றது.

இம்மைதான அபிவிருத்தி விடயத்தில் மும்முரமாக ஈடுபட்டுவந்த பிரதியமைச்சர் எம்.எல்.ஏம்.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களிடமிருந்து இதுவரை எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை. ஏற்கனவே நாங்கள் குறிப்பிட்டிருந்தது போல், இம்மைதான அபிவிருத்தியும் வழமைபோல் ஓர் பாரிய ஊழலிலும் மோசடிகளிலும் முடிவுற்றதாக ‘காதோடு காதான’ செய்திகள் தற்பொழுது வெளிவந்திருக்கின்றன.

ஏதாவதொரு அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும் அல்லது சமுக விடயங்களை முன்னெடுப்பதற்கும் முன்னர் பிரதியமைச்சரும் அவர்களைச் சார்ந்தவர்களும் மக்கள் மத்தியில் ஆசைவார்த்தைகளையும் வதந்திகளையும் பரப்பி வருவதும் மக்கள் இன்று நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர்.

உதாரணமாக மக்காவின் (ஹரம்) பேஷ் இமாம் சுதைஸ் அவர்களை காத்தான்குடிக்கு அழைத்து வருவேன், சுனாமி நினைவு தினத்துக்கு ஜனாதிபதி வருவார், மகளிர் தினத்துக்கு கலாச்சார மண்டபத்திற்கு ஜனாதிபதியின் பாரியார் வருவார்…. இப்படியே மக்களை ஏமாற்றுவதன் மூலம் ஊழல்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. எனவே இம்மைதான அபிவிருத்தியும் இவ்வாறான பூச்சாண்டித்தனத்தில் மேற்கொள்ளப்பட்டதா என்பது சந்தேகிக்கப்படுகின்றது.

காத்தான்குடியில் இடம்பெற இருந்த தேசிய உதைப்பந்தாட்டப் போட்டிகள் பற்றியும் எவ்வித தகவல்களும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்பதும் கவலைக்குரியது. இம்மைதான அபிவிருத்தியை வரவேற்று நல்லபிப்பிராயங்களையும் பயனுள்ள தகவல்களையும் எமது இணையத்தளம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Published by

Leave a comment