-SHM
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நோன்பின் பின்னர் முஸ்லிம் பிரதேசங்களில் சூடுபிடித்திருக்கின்றது. நேற்று முன்தினம் மட்டு மாவட்டத்தில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் கூட்டங்களில் அலிசாஹிர் மௌலானாவின் நேர்மையையும் அவருடனான நல்லுறவையும் மெச்சித்து அவரை ஆதரித்து பசீர் சேகுதாவூத் அவர்கள் பேசியது மாத்திரமன்றி, அலிசாஹிர் மௌலானாவுக்கும் வாக்களிக்கும்படி முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களைக் கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சில அசம்பாவிதங்கள் ஏறாவூரில் இடம்பெற்றிருந்தன.
இந்தவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களில்ஒருவராக இருக்கும் , உள்நாட்டு வர்த்தக மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சராகக் கடமையாற்றி வந்த பசீர் சேகுதாவூத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கிழக்கு மாகாணத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாகவும், ஆளும் கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டு இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பது பொருத்தமற்றது எனவும் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட 3 மாகாணசபைகளும் கலைக்கப்பட்டதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸூக்கும் அரசாங்கத்துக்குமிடையில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதும், பின்னர் அவை முறிவடைந்து, தனித்துப் போட்டியிடுவதா அல்லது அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிடுவதா என்று பல முறை ஒன்றுக்கு முரண்பட்ட கருத்துக்களை முஸ்லிம்காங்கிரஸ் தெரிவித்து வந்தது.
இந்நிலையில் தற்பொழுது பசீர் சேகுதாவூத்தின் இராஜினாமாவும் ஓர் பலத்த சந்தேகத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கின்றது.
இது ஒரு தேர்தலுக்கான நாடகமா? அல்லது கிழக்குமாகாணசபை முதலமைச்சருக்கான ஓர் முன்னேற்பாடா? என்பது விரைவில் தெரியவரும்.
Leave a comment