சமுர்த்தி அலுவலர்கள், பயனாளிகள் அச்சம் கொள்ள தேவையில்லை!

திவிநெகும சட்டத்தினால் பாதிப்பு கிடையாது

* 24,000 அதிகாரிகள் உட்பட 26,000 பேரை உள்வாங்க திட்டம்

* பணத்தை மோசடி செய்யும் தேவை அரசுக்கு இல்லை

சமுர்த்தி அதிகாரசபை, தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை, மலையக அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றை உள்ளடக்கி திவிநெகும திணைக்களத்தை உருவாக்கும் சட்டத்தால் எந்தவொரு சமுர்த்தி உத்தியோகஸ்தருக்கும் பாதிப்பு ஏற்படாது எனப் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

அதேநேரம் சமுர்த்திப் பயனாளிகளும் அச்சங்கொள்ளத் தேவையில்லையெனவும் அவர் கூறினார்.

சமுர்த்தி அதிகாரிகளை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மஹிந்த சிந்தனையில் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமையவே சமுர்த்தி அதிகாரிகளையும் திவிநெகும திணைக்களத்துக்குள் உள்வாங்கி அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் நேற்றுத் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்; திவிநெகும திணைக்களத்தை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக் கும் சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சிகள் போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்தச் சட்டத்தின் மூலம் சமுர்த்தி அதிகாரிகளுக்கு வேலை இழப்பு ஏற்படப் போவதாக போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றில் எந்தவிதமான உண்மையும் இல்லை. 1995ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபை உருவாக்கப்பட்டது. அன்று முதல் சமுர்த்தி அதிகாரிகள் கிராம மட்டங்களில் மக்களுக்காகப் பணியாற்றி வருகின்றனர்.

திவிநெகும திணைக்களத்தின் கீழ் சமுர்த்தி அதிகார சபையை இணைத்துக்கொள்ளும்போது எந்தவொரு சமுர்த்தி அதிகாரிக்கும் அநீதி இழைக்கப்படாது. அவ்வாறான வகையிலேயே இந்தச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி அதிகாரிகளுக்கு மூன்று வகையான தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன.

95ஆம் ஆண்டு முதல் சமுர்த்தி அதிகாரசபையில் பணியாற்றிவரும் பணியாளர்கள் 95ஆம் ஆண்டிலிருந்து ஓய்வூதியம் பெறக்கூடிய வகையில் திவிநெகும திணைக்களத்தின் கீழ் நிரந்தர ஊழியர்களாக நியமிக்கப்படுவார்கள்.

இதனை விரும்பாத சமுர்த்தி அதிகாரிகள் 95ஆம் ஆண்டு முதல் திவிநெகும திணைக்களம் உருவாக்கப்பட்ட திகதிவ ரையில் தாம் செய்த பணிக்கான கொடுப்ப னவுகளை முழுமையாகப் பெற்றுக்கொண்டு, திவிநெகும திணைக்களத்தில் புதிய பணியாளர்களாக இணைந்துகொள்ளமுடியும். எனினும், அவர்களின் சேவைக்காலம் கவனத்தில் கொள்ளப்படும்.

இதற்கும் விரும்பாத சமுர்த்தி அதிகாரிகள் அமைச்சினால் வழங்கப்படும் நஷ்டஈடுகளைப் பெற்றுக்கொண்டு சேவையிலிருந்து விலகிக்கொள்ள முடியும். எந்தவொரு சமுர்த்தி அதிகாரியும் பாதிக்க அரசாங்கம் இடமளிக்காது. அதேநேரம், எந்தவொரு சமுர்த்தி பயனாளியும் பாதிக்கப்படமாட்டார்.

சமுர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வழங்கிய உறுதி மொழிக்கு அமைய சமுர்த்தி அதிகாரிகள் ஓய்வூதியம் உட்பட அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளுடனும் நிரந்தரமாக்கப் படவுள்ளனர். இவர்கள் திவிநெகும திணைக்களத்தில் பதவி உயர்வுபெறுவதற்கும் அவர்களுக்கு முடியும்.

சமுர்த்தி அதிகாரசபையைச் சேர்ந்த 24 ஆயிரம் அதிகாரிகள் உள்ளடங்கலாக 26 ஆயிரம் பேர் திவிநெகும திணைக்க ளத்துக்கு உள்வாங்கப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்தின் ஊடாக 900 கோடி ரூபாவை அரசாங்கம் மோசடி செய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் 32 ஆயிரம் கோடிரூபாவை நாம் ஒதுக்கியிருந்தோம். இந்த நிலையில் பணத்தை மோசடி செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை.

சமுர்த்தி அதிகாரசபையில் உள்ள பலர் பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களில் உயர் பதவிகளில் உள்ளனர். அடிமட்டத்தில் இறங்கி மக்களுடன் பணியாற்றினார்கள் என்பதாலேயே அவர்கள் அரசியலில் உள்ளனர். எனவே தான் திவிநெகும வேலை த்திட்டத்தில் சமுர்த்தி அதிகாரிகளையும் உள்ளடக்க நாம் தீர்மானித்தோம்.

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 16 ஆயிரம் பட்டதாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்களையும் பயன்படுத்தி திவிநெகும வேலைத்திட்டம் கிராம மட்டத்தில் முன்னெடுக்கப்படும். இதன் ஊடாக பயனாளிகள் தமது வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரி வித்தார்.

-தினகரன்

 

 

 

Published by

Leave a comment