இங்கிலாந்திடமிருந்து கைநழுவிப்போன டெஸ்ட் முதலாமிடத்தை, தென்னாபிரிக்கா முடிசூடிக்கொண்டது

-MJ

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற நேற்றைய 5ம் நாள் போட்டி ஓர் டெஸ்ட் போட்டி போல் இருக்கவில்லை. போட்டியின் ஆரம்பம் முதல் இறுதிவரைக்கும் மைதானத்துக்குள் இருந்து எழுந்த இரசிகர்களின் கரகோசங்களும் ஆதரவுகளும் வானைத்தொட்டுச் சென்றன.

இப்போட்டியில் தென்னாபிரிக்கா இங்கிலாந்தை 51 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் டெஸ்ட் தரவரிசையில் (ICC Test Ranks) முதலாமிடத்தை முடிசூடிக் கொண்டது. இங்கிலாந்து வெற்றிபெறும் என்ற நிலையில் போட்டி அமைந்திருந்தாலும், தென்னாபிரிக்க வீரர்கள் சளைக்காமல் நிதானமாக போட்டியை நகர்த்திச் சென்றனர். இங்கிலாந்து வீரர்களுக்கு பக்கத்துணையாய் பல்லாயிரம் ஆதரவுகள் இருந்தும் புகழ்பெற்ற லோர்ட்ஸ் மைதானத்தில், சொந்த மண்ணில் இத்தோல்வியைச் சந்தித்து, முதலாமிடத்தையும் பறிகொடுத்திருக்கின்றது.

இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் பீட்டர்சனுக்கு இப்போட்டியில் விளையாட வாய்ப்பளித்திருந்தால், இலகுவாக இப்போட்டியை வென்று, தொடரை சமன் செய்வதன்மூலம், முதலாமிடத்தைத் தக்கவைத்திருக்கலாம் என இங்கிலாந்து பத்திரிகைகள் தற்பொழுது விமர்சித்து வருகின்றன.

சென்ற வருடம் இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ‘வெள்ளையடித்தல்’ (Whitewash) மூலம் 4:0 எனும் பெருவெற்றியை இங்கிலாந்து பெற்றதால் இதுவரைக்கும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது.

போட்டியின் நாயகனாக தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சாளர் பிளண்டரும், தொடரின் நாயகர்களாக தென்னாபிரிக்காவின் துடுப்பாட்ட வீரர் அம்லாவும், இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர் பிரியரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இன்று மதியம் இடம்பெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் புரோட் அடித்த பந்து வேகமாக அம்லாவின் தலைக் கவசத்தில் பட்டது. 4 ஓட்டங்கள் பெறப்படும் வேகத்தில் வந்த இப்பந்து, அம்லா தலைக்கவசம் அணியவில்லையாயின் அவர் மைதானத்தில் உயிரை விட்டிருக்க நேரிட்டிருக்கும் என வர்ணனையாளர்கள் குறிப்பிட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

Published by

Leave a comment