ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் என்கிறது பாகிஸ்தான்

தென்னிந்திய நகரங்களிலிருந்து வடகிழக்கு மாநிலத்தார் வெளியேறக் காரணமாக இருந்த அச்சுறுத்தல் செய்திகளில் பெரும்பான்மையானவை பாகிஸ்தானிலிருந்துதான் வந்தன என்ற இந்தியாவின் கூற்றுக்கு அவர்கள் ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது.

பீதிக்கு காரணமாக அமைந்த இந்த வதந்திகளில் அதிகமானவை பாகிஸ்தானில் இருந்துதான் ஆரம்பித்ததாக தங்களுக்கு தெரியவந்துள்ளது என இந்திய உள்துறைச் செயலர் கூறியிருந்தார்.

பொய்த் தகவல்களைப் பரப்பிக்கொண்டிருக்கும் ஆட்களை பாகிஸ்தான் அரசு அடையாளம் கண்டு நசுக்க வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் வதந்தி பரப்பிய தகவல்கள் மற்றும் வீடியோக்களில் அதிகமானவை பாகிஸ்தானிலிருந்து ஆரம்பித்துள்ளன என தாங்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை என்றும், தமது குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை இந்தியா காட்டுமானால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் பொறுப்பேற்றுக்கொள்ளும் என ரெஹ்மான் மாலிக் இஸ்லாமாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் முன்னதாக இந்த வதந்திகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தார் பெங்களூரு, புனே போன்ற நகரங்களிலிருந்து வெளியேறியிருந்தனர்.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் போடோ பழங்குடியினத்தாருக்கும் முஸ்லிம் குடியேற்றக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல்களுக்கு பழிவாங்கும் விதமாக தென்னிந்திய நகரங்களில் வாழும் வடகிழக்கு மாநிலத்தார் பழிவாங்கப்படுவர் என்று அச்சுறுத்தல் விடுப்பதாக சமூக வலைத்தளங்களிலும் கைத்தொலைபேசிகளிலும் வதந்திகள் பரவியிருந்தன.

-BBC/Tamil

 

 

 

Published by

Leave a comment