‘டெஸ்ட் நம்பர் 1’ இடத்தை தீர்மானிக்கும் நாள் இன்று…..!

-MJ

தற்பொழுது இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் இங்கிலாந்து-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகள், ‘ஏசஸ்’ (Ashes) போட்டிகளைப் பார்க்கிலும் பலத்த எதிர்பார்ப்புடன் நடைபெற்று வருகின்றன.

இங்கிலாந்து கிரிக்கட் இரசிகர்கள் ‘ஏசஸ்’ தொடருக்கு வழங்காத ஆதரவுகளை தற்பொழுது இத்தொடருக்கு வழங்கி வருகின்றனர். சர்வதேச கிரிக்கட் சம்மேளன டெஸ்ட் தரவரிசைப்படி (ICC) இன்றுவரைக்கும் இங்கிலாந்து முதலாம் இடத்தில் இருக்கின்றது. இங்கிலாந்தை பின்தள்ளி, முதலாவது இடத்தைப் பிடிக்க இங்கிலாந்து மன்னில் தென்னாபிரிக்கா பல எதிர்பார்ப்புக்களுடன் விளையாடி வருகின்றது.

என்னதான் விளையாட்டாக இருந்தாலும் இங்கிலாந்து கிரிக்கட் அணி இங்கிலாந்தில் தோற்பதை இங்கிலாந்து கிரிக்கட் இரசிகர்கள் தாங்கமாட்டார்கள். இதைவிட அதுவும் கிரிக்கட் இன் தாயகமான புகழ்பெற்ற லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து தோற்று, தரவரிசையில் பின்தள்ளப்படுவதையும் நிச்சயமாக இவர்களால் தாங்க முடியாது. தோல்வியைத்தாங்க முடியாத ஊடகங்கள் கூட விமர்சித்து தள்ளும். ஏற்கனவே அங்குள்ள பத்திரிகைகளில் பல விமர்சனங்கள் சூடாகப் போய்க்கொண்டிருக்கின்றன.

இன்றைய ஐந்தாவதும் இறுதியுமான நாளில் இங்கிலாந்து இன்னும் 330 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டவேண்டும் எனும் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அணியின் தலைவர் அன்றூ ஸ்ட்ரோஸ் மற்றும் குக் ஆகியோர் ஆட்மிழந்திருக்கும் நிலையில் நீயா-நானா? எனும் ஓர் பலப்பரீட்சையில் இன்றைய நாள் இருக்கப்போகின்றது.

இத்தொடரில் தென்னாபிரிக்கா 1:0 எனும் ரீதியில் முன்னணியில் இருக்கின்றது. இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்று தொடர் 1:1 என சமநிலையில் நிறைவடைந்தால் தொடர்ந்தும் இங்கிலாந்து முதலாமிடத்தில் இருக்கும். எனினும் எதிர்வுகூற முடியாத ஓர் சுவாரஸ்யமான நாள் இன்று உலக கிரிக்கட் இரசிகர்களுக்கு மலரப்போகின்றது.

 

 

 

Published by

Leave a comment