அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
இணையங்களால் இணைந்து எமது வலைத்தளத்தில் கைகோர்த்து ஓரணியாக நிற்கும் எமது உள்ளுர் மற்றும் கடல்கடந்து வாழும் அன்பான வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்களுக்கும் எமது முதலாவது ‘ஈதுல் பித்ர்‘ நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை முதலில் தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றோம்.
சங்கையான ரமழான் எங்களை விட்டும் சென்றுவிட்டது. ஒரு மாதமாக நாங்கள் அல்லாஹ்வுக்காக மாத்திரம் எங்கள் தேவைகளையும், ஆசைகளையும் துறந்து, பகலில் நோன்பு நோற்று, இரவு நேரங்களில் அல்லாஹ்வை வணங்கிட பள்ளளிவாயல்களில் தரித்து நல்லமல்களில் ஈடுபட்டுவந்தோம். இவற்றிற்கான கூலிகளை அல்லாஹ்தஆலா தனது அடியார்களுக்கு தான் விரும்பியபடி வழங்கும் புனித நாள்தான் இன்றைய பெருநாள் நாளாகும்.
புத்தாடை அணிந்து, நறுமணமிட்டு, பள்ளிகளிலும் வணக்கங்களிலும் ஈடுபட்டு அன்பு உறவுகளைச் சந்தித்து, மரணித்துச் சென்ற எங்களது உறவுகளைத் தரிசித்து நாங்கள் ஓர் உன்னதமான இந்நன்நாளில் உங்களோடு சில வரிகளை உதிர்கின்றோம்.
இவ்வருடம் (2012) பெப்ரவரி மாதம் 4ம் திகதி ‘உங்கள் காத்தான்குடி’ எனும் எமது இணையத்தளம் இணையங்களின் வரலாற்றில் ஓர் திருப்பமாக உதயம் பெற்றது. இன்று பல்லாயிரம் வருகைகளைக் கடந்து ஓர் வெற்றிப்பயணத்தில் சென்றுகொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
உலகில் முதன் முதலில் ஓர் ஊரின் விடயங்களையும் தகவல்களையும் தொகுத்து ஒரே தளத்தின்கீழ் ‘உங்கள் காத்தான்குடி’ வலம் வந்துகொண்டிருக்கின்றது. இத்தளத்தின் மூலம் தாங்கள் அதிகளவு பயனடைந்து வருவதாக பல வாசகர்களும், மாணவர்களும் எமக்கு மின்னஞ்சல் செய்திருக்கின்றனர். எனினும் ஓர் சாதாரன மனிதனுக்கிருக்கும் அன்றாட தேவைகளையும் சுமைகளையும் சிக்கல்களையும் எதிர்நோக்கிக்கொண்டே இத்தளத்தினை இயக்கி வருகின்றோம் என்பதனையும் அன்பு உள்ளம் கொண்ட எமது வாசகர்களுக்கு எத்திவைக்கின்றோம்.
காத்தான்குடி மற்றும் அயல்கிராமங்களின் செய்திகளை உடனுக்குடன் பதிவேற்றி விரைவில் பிரசுரிப்பதற்கான ஏற்பாடுகளை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் நாங்கள் உள்ளுரில் நிருபர்களை வைத்து இத்தளத்தினை இயக்கவில்லை என்பதனையும், எமது வாசகர்களால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்பப்டும் ஊர் செய்திகளையும் புகைப்படங்களையுமே முடிந்தளவிற்கு பிரசுரித்து வருகிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வருங்காலம் எம்மை நோக்கிய ஓர் அரசியல் காலம். எனவே காத்தான்குடி சம்பந்தமான ‘அதிரடி தேர்தல் களம்’ மற்றும் காத்தான்குடியின் ‘சமகால தேர்தல் களம்’ போன்ற தலைப்புக்களில் நடப்பு அரசியல் விவகாரங்களை பக்கச் சார்பின்றி வெளியிட இருக்கின்றோம்.
எமது இணையத்தளம் காத்தான்குடிக்கான ஓர் தனித்தளம். இத்தளம் காத்தநகரின் தகவல் களஞ்சியம். பல்லாயிரம் மக்கள், பல மார்க்கக் கொள்கைகள், பல கட்சிகள், மற்றும் கொள்கையால் முரண்பட்ட அரசியல் வேட்பாளர்களையும் அதன் ஆதரவாளர்களையும் கொண்டமைந்த ஓர் மண். எனவே அனைவர்களையும் ஆதரித்துச் செல்லும் அரசியல் சாயமற்ற ஓர் நடுநிலையான தளமாகவே இத்தளம் அமையும். நாங்கள் எந்தவொரு அரசியல் வாதிகளையும் உயர்த்திவிடுவதோ அல்லது தாழ்த்தி விடுவதோ எமது கொள்கையல்ல! நேர்மையான, ஊழலற்ற, சமூக உணர்வுள்ள, தேர்தல் காலங்களில் மாத்திரமல்லாது, எக்காலத்திலும் மக்களின் காலடியில் சென்று மக்களின் குறைகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய ஓர் உண்மையான ‘முஸ்லிம்’ ஒருவரையே காத்தான்குடி மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதுவே எமது அவாவாகும்.
மக்களின் தீர்ப்பை எமது இணையத்தளம் ஏற்றுக் கொள்ளும். அமைதியான காடைத்தனமில்லாத ஓர் நேர்மையான தேர்தல் இடம் பெறுவதற்கு ‘உங்கள் காத்தான்குடி’ எமது மக்களுக்குத் தொண்டாற்றும்.
சில ஆக்கங்கள் சிலரை விமர்சிப்பதாக குறுகிய மனப்பான்மையுள்ளவர்கள் சிந்திக்கலாம். எனினும் இப்படியான இதயம் படைத்தவர்கள் உணர்ச்சிவசப்படாமல் தொடர்ந்து வரும் ஆக்கங்களையும் தொடர்ந்து பார்ப்பது உண்மையை உணர்த்தும். உண்மையை உரைக்க ஒருபோதும் உங்கள் தளம் பின்நிற்கப் போவதில்லை!
எழுத்தாற்றல் திறமையுள்ள வாசகர்கள் மற்றும் கட்சிகள் தங்களது அரசியல் ஆக்கங்களை எங்களுக்கு அனுப்பிவைக்கலாம். அவற்றினை இன்முகத்துடன் பிரசுரிக்க உங்களுக்காக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஊரில் நிருபர்களை வைத்து இத்தளத்தினை இயக்காததால், எங்களுக்கு வாசகர்களால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்பப்படும் செய்திகளையும் படங்களையுமே தாங்கள் பிரசுரிப்போம் என்பதையும் மேலும் வாசகர்களுக்கு ஞாபகப்படுத்திக் கொள்கின்றோம்.
ஈத் முபாரக்
‘இது உங்கள் களம்-இணையங்களின் தனித்தளம்’
நன்றி,
என்றும் அன்புடன்
இயக்குநர்
உங்கள் காத்தான்குடி
![09a4b6cb2be347f398dabc26c9be1b2b[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/09a4b6cb2be347f398dabc26c9be1b2b1.jpg?w=530&h=471)
![tulipsfieldsinholland6[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/tulipsfieldsinholland61.jpg?w=530&h=530)
Leave a comment