அப்துர் ரஊப் மௌலவியை நாடும் காத்தான்குடி வேட்பாளர்கள்….!

– வாரஉரைகல் (தலைப்பு மாற்றம்)

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற காத்தான்குடி பிரதேச வேட்பாளர்கள் பலரும் அப்துர் றவூப் மௌலவி அவர்களை நேரில் சந்தித்து தமக்கு ஆதரவளிக்குமாறு கேட்டு வருவதாக ‘வார உரைகல்’ அறிகிறது.

அண்மையில் ஐ.ம.சு. முன்னணியில் அ.இ.ம. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான பொறியியலாளர் எம்.எப்.எம். ஷிப்லி, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுடன் பத்ரிய்யா ஜும்ஆப்பள்ளிவாசலுக்குச் சென்று அப்துர் றவூப் மௌலவி அவர்களை நேரில் சந்தித்துப் பேசியதாகவும், தேர்தலில் தமக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் பதுரியா வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

எனினும், அப்துர் றவூப் மௌலவி அவர்கள் இவர்களது வேண்டுகோளை உடனடியாக ஏற்றுக் கொண்டு இணக்கம் தெரிவிக்கவில்லையென்றும், கிழக்குத் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தமது ஆலோசகர்களுடன் கலந்துரையாடி வருவதால் நோன்புப் பெருநாள் கழித்த பின்னரே இது தொடர்பில் தான் இறுதி முடிவெடுக்க இருப்பதாகத் தெரிவித்ததாகவும் அறியப்படுகின்றது.

அப்துர் றவூப் மௌலவியுடனான இச்சந்திப்பு தொடர்பாக தகவலறிந்த வேட்பாளர் பொறியியலாளர் ஷிப்லியின் நண்பர்கள் அவரிடம் வினவியபோது, தான் அப்துர்றவூப் மௌலவியைச் சந்திக்கவில்லை என்று மறுத்ததாகவும், இவ்விடயமறிந்த உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர் அந்த நண்பர்களிடம் இச்சந்திப்பை உறுதிப்படுத்தி வாதிட்டதாகவும், அதன் பின்னர் வேட்பாளர் ஷிப்லி அப்துர் றவூப் மௌலவியுடனான சந்திப்பை ஏற்றுக் கொண்டு அமைதியாகி விட்டதாகவும் பிறிதொரு தகவலும் கிடைத்துள்ளது.

அப்துர் றவூப் மௌலவி அவர்களை பிரதியமைச்சருடன் வந்து சந்தித்து தேர்தலில் தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்ட வேட்பாளர் ஷிப்லி, பின்னர் ஏன் இச்சந்திப்பைப்பற்றி நண்பர்களிடம் பொய் சொல்லி மறுக்க வேண்டும்? இதுதான் இவரின் தூய்மையும் வாய்மையுமா? நமது ஞானபிதாவுடனான ஒரு சந்திப்பையே பகிரங்கமாக ஏற்றக் கொள்ளாதவருக்கு நாம் எப்படி ஆதரவளிக்க முடியும்? ஏன் ஆதரவளிக்க வேண்டும்? என்றெல்லாம் பதுரியா வட்டார ஆதரவாளர்கள் மத்தியில் இப்போது காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் போய்க் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மாத்திரம் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்காக அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிடாது தனித்துப் போட்டியிடும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் காத்தான்குடிப் பிரதேச வேட்பாளர்களும் அப்துர்றவூப் மௌலவி அவர்களைச் சந்தித்து தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம். முபீன், அப்துர் றவூப் மௌலவி அவர்களைச் சந்தித்து தமக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கொழும்பிலும் அப்துர் றவூப் மௌலவி அவர்களைச் சந்தித்து ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் வேட்பாளர்கள் தமக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அறியப்படுகின்றது. அந்த வகையில் காத்தான்குடி நகர சபை உறுப்பினரான சல்மா அமீர் ஹம்சா கொழும்பில் அப்துர் றவூப் மௌலவியைச் சந்தித்து அவரது ஆதரவைக் கோரியதாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறே ஸ்ரீ.ல.மு.கா.வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஆஸாத் சாலி, காத்தான்குடி ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவரும், ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் வேட்பாளருமான எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) ஆகியோரும் கொழும்பில் அப்துர் றவூப் மௌலவி அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும், தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரியதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

எவ்வாறாயினும் அப்துர் றவூப் மௌலவி அவர்கள் இத்தேர்தலில் ஸ்ரீ.ல.மு. காங்கிரஸில் போட்டியிடும் ஆஸாத் சாலிக்கே தமது ஆதரவை வழங்க முடிவெடுப்பார் என பதுரியா வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

இதற்கு ஆதாரமாக, கடந்த 03ம் திகதி ஸ்ரீ.ல.மு.கா. வேட்பாளர் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைமையக வளாகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் அப்துர் றவூப் மௌலவி தரப்பிலிருந்து மௌலவி எம்.எம். அப்துல் மஜீத் றப்பானி அவர்களுடன் ஆதரவாளர்களும் சென்று பங்குபற்றியிருந்ததை மேற்கோள்காட்டும் பத்ரிய்யா தரப்பினர், அல்பா நஸார் அவர்களின் அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டு நடாத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு அப்துர் றவூப் மௌலவி அவர்கள் பச்சைக் கொடி காட்டாது அப்துல் மஜீத் றப்பானியும், ஆதரவாளர்களும் அங்கு சென்றிருக்க மாட்டார்கள் என்றும், அதனால் ஆஸாத் சாலிக்கும், அல்பா நஸாருக்குமே இம்முறை அப்துர்றவூப் மௌலவி தரப்பின் ஆதரவு இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு ஆஸாத்சாலிக்கும், அல்பா நஸாருக்கும் தமது ஆதரவை வழங்குவதாக அப்துர் றவூப் மௌலவி அவர்கள் பெருநாள் கழிந்த பின்னர் தீர்மானம் எடுத்து அறிவிக்கும் பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் வேட்பாளர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெறும் வேட்பாளராக ஆஸாத் சாலியே முன்னிலைக்கு வருவார் என்றும் அவர்கள் ஆரூடம் தெரிவிக்கின்றனர்.

Published by

Leave a comment