ரமழான் பெருநாள் முஸ்லிம் மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்

 

இலங்கை உட்பட உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். இந்த நந்நாளில் இந்நாட்டில் நோன்புப் பெருநாளைக் கொண்டா டும் சகல முஸ்லிம் மக்களுக்கும் நாம் எமது இதயபூர்வமான நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

முஸ்லிம் மக்கள் அதிகாலையிலே எழுந்து, புத்தாடை அணிந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் மிகவும் அமைதியான முறையில் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்களுடன் கூடி இந்தப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தின் ஐந்து பிரதான கடமைகளில் ஒன்றான ரமழான் மாத நோன்பை நிறைவேற்றிய பின்னர் முஸ்லிம் மக்கள் இந்தப் பெருநாளை குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்கள் உள்ளன. அதில் ஒன்று நோன்புப் பெருநாள் மற்றது ஹஜ்ஜுப் பெருநாள்.

இவ்விரு பெருநாட்களுமே அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் அடிப்படையாகக் கொண்டவையாகும். இவை அனைத்தும் இறைவனுக்காகவே செய்யப்படுகின்றன. இறைவனின் கட்ட ளைப்படி இஸ்லாத்தின் இறுதித் தூதர் முகம்மது (ஸல்) அவர் களின் வழிகாட்டலுக்கு அமைய முஸ்லிம்கள் ரமழான் நோன்பை நிறைவேற்றுகிறார்கள். இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 14 மணி நேரம் எவ்வித உணவையோ நீராகாரத்தையோ எடுக்காமல் மனதை இறைவனுக்காக கட்டுப்படுத்திக் கொண்டு மற்ற ஆசாபாசங்களைத் தவிர்த்துக்கொள்கிறார்கள்.

இந்த ஒரு மாத கால நோன்பின் போது முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ளும் உடல், உள ரீதியான பயிற்சி முழு வாழ்க்கைக்கும் பயன் உள்ளதாக அமையும். மனிதனைப் பக்குவநிலைக்கு கொண்டுவருவதற்கு இது ஒரு சிறந்த பயிற்சியாக அமைந்திருக்கிறது. நோன்பினூடாக ஏழைகளின் வறுமையையும், அவர்களின் பசிப் பிணியையும் வசதியுடைய மனிதர்களால் புரிந்து கொள்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் மனிதாபிமானம் மேலோங்கி துன்ப, துயரங்களுக்கு முகங்கொடுக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உதவிகளை செய்யும் நற்பண் புகள் உருவாகும். இதனால் இந்த பெருநாள் தினத்தன்று ஏழை களும், செல்வந்தர்களும் மிகவும் மகிழ்ச்சியாக பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.

நோன்பு சிறந்த மருத்துவக் குணாம்சங்களையும் கொண்டிருக்கிறது என்பதை மருத்துவ ரீதியிலான ஆய்வுகள் உறுதிப்படுத்தி யிருக்கின்றன. உலகிலுள்ள சகல மதங்களிலும் நோன்பு பிடித்தல், உபவாசம் இருத்தல் போன்றவை வருடத்திற்கு ஒரு தடவை மக்களால் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. பட்டினி கிடப்பது உடம்பில் உள்ள பல நோய்களை குணமாக்கும் ஒரு அருமருந்து என்று சகல மதங்களிலும் ஒரு நம்பிக்கை இருக்கின்றது.

ரமழான் மாத நோன்பின் மூலம் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல பயன்களை முஸ்லிம்கள் பெற்றுள்ளார்கள். இவை அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்மையை ஏற்படுத்தும். இவ்விதம் பயன்பெற்றுள்ள முஸ்லிம்கள் இந்த நந்நாளை எல்லாம் வல்ல இறைவனின் பெயரில் கொண்டாடுகிறார்கள்.

– தினகரன் ஆசிரியர் தலைப்பு

 

 

 

 

Published by

Leave a comment