கிழக்கு மாகாணத்திற்கும் வசந்தம் தொலைக்காட்சி சேவை!

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் வசந்தம் தமிழ் தொலைக்காட்சி சேவை நேற்று முதல் கிழக்கு மாகாணத்திற்கும் பார்க்கக் கூடியதாக அதன் ஒளிபரப்பு சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

அலைவரிசை 24ல் கிழக்கு மாகாண மக்கள் நேற்று முதல் வசந்தம் தொலைக்காட்சி சேவை கண்டு களிப்படையும் வாய்ப்பைப் பெற்றார்கள். வசந்தம் தொலைக்காட்சி சேவையில் செய்தி ,இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நாடகங்கள் ,அரசியல் விவாதங்கள் ,கலைஞர் அறிமுகம் மற்றும் அரசியல் சமூக பிரச்சினைகளை அலசி ஆராயும் திறனாய்வு போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

கைத்தொழில்கள் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சின் தற்போதைய செயலாளர் அனுர சிறிவர்தன சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக இருந்த போது 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் திகதியன்று வசந்தம் தொலைக்காட்சி சேவையை நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமரும் வசந்தம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பிப்பதற்கு பெரும் பங்களிப்பு ஆற்றினார். வசந்தம் தொலைக்காட்சி சேவையின் முகாமையாளராக முருகேசு குலேந்திரன், வசந்தம் தொலைக்காட்சி சேவையின் செய்திப் பிரிவின் பொறுப்பாளராக இர்பான் முஹம்மத் ஆகிய இருவரும் ஆரம்பம் முதல் சேவையாற்றி வருகின்றனர்.

தற்போது வடமாகாணம் மற்றும் மேல்மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்கள் தெளிவாக பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. விரைவில் மலையகத்திலும் பார்க்கக்கூடிய வகையில் தொழில்நுட்ப வசதிகள் விஸ்தரிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

– அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment